கிரீன்லாந்து என்பதொரு நாடு. அங்கு காணக்கிடைக்கும்
இயற்கைக்காட்சியைச் சுருங்கக் கூறுவது இக்கவிதை.
0000000000-----------------------00000000
இரவு பன்னிரண்டில்
எல்லோன் விழித்தொளியே
பரவும் வகைபணியே
பார்க்கும் வியப்பினையே ----(1)
அறவே காண்பதில்லை!
ஆசியத் தென்பகவில்;
பறவை ஊர்தியிற்போய்ப்
பார்ப்பீர் பசுநிலத்தே. (2)
இரண்டொரு நாட்களுக்காம்
இரவுகண் திரக்குவதால்
வரண்டிடும் கண்ணுறக்கம்;
வாழ்க்கை பலவிதமே. (3)
கட்டிப் பனிமலைகள்,
காணும் இடமெங்கிலும்;
ஒட்டிச் செலவியலா
ஒப்பில் குளிர்வதையே. (4)
பனியிற் சுருண்டபடி
படுத்திருக்கும் நரியே
தனிமைத் துயரறியா
தலைமை விலங்கினமோ? (5)
விலக்கி வீடுகட்டி
விரல்விட் டெண்ணும்படி
கலக்கப் பரந்துறையும்
கடனார் வளமக்களே. (6)
மீனே மேலுணவாய்
மேலாம் வாழ்நரிவர்.
மானும் மயிலுமில்லா
மாவண் திறத்தினிலே. (7)
பொருள்:
பன்னிரண்டில்: மணி பன்னிரண்டு நள்ளிரவில்.
எல்லோன்: சூரியன்
பணியைப் பார்க்கும்: வேலை செய்யும்.
ஆசியத் தென்பகவில்: தென் கிழக்காசியாவில்
(ஆசியாவின் தென்பகுதிகளில் என்பது
கவியில் சொல்லப்பட்டது )
திரக்குவது - தேடுவது.
பசுநிலம் - கிரீன்லாந்து,
பறவை ஊர்தி: வானூர்தி ( விமானம்)
வாழ்க்கை பலவிதம்: உலகில் வாழ்க்கை பலவகை
செலவியலா - பயணம் போக முடியாத
ஒப்பில் = இணையில்லாத.
குளிர்வதை - கடுங்குளிர்
தலைமை விலங்கினமோ: வேறு விலங்குகள் உள்ளனவோ?
தனிமைத் துயர்: இவ்விலங்கு ஒண்டியாய் இருப்பதுபோல்
உள்ளது.
விலக்கி வீடு கட்டி - சேர்த்தபடி கட்டாமல் எட்ட எட்டக் கட்டி
கலக்க - அங்கொன்று இங்கொன்றாக.
பரந்து உறையும் - விரிந்த நிலப்பகுதியில் வாழும்.
கடனார் - கடமை மிக்க; கடன் - கடமை.
வளமக்கள் - செழிப்பாக வாழும் மக்கள்.
மேலுணவு - முக்கிய உணவு.
மானும் மயிலும் இல்லா : இவ்விலங்குகள் இங்கு இல்லை.
மாவண் திறம்: இவை இல்லாவிட்டாலும் அழகுதரும்
இயற்கையைப் புகழ்ந்து பாராட்டுதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக