இந்தியத் துணைக் கண்டத்தில் சொற்களைப் புனைந்து மொழிகளைப் பண்படுத்திய பல்வேறு தரப்பினரும் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டுள்ளனர் என்பது இதுகாறும் நம் இடுகைகளை நன்`கு படித்துவருகிறவர்கள் அறியக் கிடக்கின்ற ஓருண்மையாகும்.
அந்தத் தந்திரங்கள் யாவை என்பதைப் பட்டியலின்றியே நீங்கள் கண்டின்புறலாம்.
இப்போது ஒரு தந்திரத்தை அறிந்துகொள்வோம்.
அபி என்பது இப்போது ஒரு சொல்லின் முன் வைத்து ஒட்டப்படும் ஒரு துண்டுச்சொல்லாகப் பயன்படுகிறது. இப்படித் துண்டுச் சொற்களை முன்பக்கம் ஒட்டி ஒரு சொல் சற்று வேறுபட்ட பொருளைக் குறிக்கும்படி செய்துவிடலாம்.
அபி என்பதன் பல்வேறு பொருள்களில், அதன் பின் என்பதுமொன்று.
எடுத்துக்காட்டு: விருத்தி - அபிவிருத்தி.
விருத்தி என்பதை முதலில் அறிவோம்.
ஒன்று முன் இருந்த நிலைமையைவிட நன்றாகத் தோன்றும்படி செய்து காட்டுவது விருத்தி ஆகும்.
விர் > விரி;
விர் > விரு.
மூலக்கருத்து ஒன்றினை விரிப்பதுவே ஆகும். அந்த விரிப்பு,
இடத்தின் விரிப்பு,
வசதியின் விரிப்பு, இடுபொருள்களின் விரிப்பு. அழகின் விரிப்பு என்று பலவகைப்படும்.
விருத்தம் என்பதும் விரிப்பே. விருந்து என்பதுவும் விரிப்பே.
நம் வீட்டில் எப்போதும் அம்மா. அப்பா பிள்ளைகள் மட்டும் உண்கிறோம். ஒரு நாள் பக்கத்து வீட்டு நண்பர்களையும் அழைத்து உணவு தந்து மகிழ்த்துவதானால் ஆக்கும் உணவிலும் உண்ணும் ஆட்களிலும் விரிவு உண்டாகிவிடுதலை நீங்கள் உணரலாம். இந்த விரிப்பின் அழைப்புக்கு வந்தவர்களை “ விருந்து” “விருந்தினர்” என் கிறோம்.
ஒன்றை விருத்தி என்றாலே அது விரிப்பே
ஆகும். முன்னில்லாத எதுவும் இப்போது புதியதுதான்.
விருத்தியை அறிந்தோம்.
விரி > விரித்தி > விருத்தி எனினுமாம்.
ஒரு விருத்தி செய்தபின் அதற்குப் பின்னும் அதிற்பல கொண்டுசேர்த்தலே
அபிவிருத்தி.
அ = அதன்; பி = பின். இவ்விரண்டும் சேர்ந்து அபி என்ற முன்னொட்டாகிச்
சொற்கள் அமைந்துள்ளனவென்பதும் காண்க.
அபிவிருத்தி என்பதாவது : விருத்திக்குப்பின் வரும் விருத்தி.
பின் வருவது முன் உள்ளதினும் மிகுதியாம் ஆதலால் அபி என்பதற்கு மிகுதிப் பொருளும்
வந்தது.
மானம் என்பது அளவு, பெருமை, மதிப்பு .
அபிமானம் என்பது மானத்தின்பின் ஒன்றன்மேல் வரும் பற்றுதல்..
ஒன்றைச் செகுத்தல் என்பது கொல்லுதல். கொன்றபின் செகுத்த பொருட்குச் செய்விக்கப்பெறும்
சடங்குகள் பூசனைகள் முதலானவை “அபி சேகம்”. இங்கு சேகம் என்பது செகு+அம் = சேகம். முதனிலை திரிந்த தொழிற்பெயர். இது பின் ஷேகம் என்றானது. 1
அவி (அவித்தல்) என்பதும் அபி என்று திரியும். இன்னும் பிற பொருளும் தரவுகளும் உள. அவற்றைப் பின்னர்
ஒருக்கால் நோக்கிமகிழ்வோம்.
இங்கு சொல்ல வந்தது அபி என்ற முன்னொட்டின் பல பரிமாணங்களில் ஒன்றையே.
-------------------
அடிக்குறிப்பு:
1 அபிசேகம்: இப்போது இதன் பொருள் மாறிவிட்டது. உயிர்க்கொலை இல்லாத அபி-சேகத்தில் மலரும் நீரும் தீயும் மந்திரங்களும் இன்ன பிறவும் பயன்படுத்தப்பெற்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆகையால் இற்றை நிகழ்வுகள் கொண்டு இதன் ஆதிப்பொருளை அறிதல் ஆகாது. நடைமுறைக்கேற்ப வேறு சொற்பொருள் காணுதல் புதிய உத்தியாகும்.
-------------------
அடிக்குறிப்பு:
1 அபிசேகம்: இப்போது இதன் பொருள் மாறிவிட்டது. உயிர்க்கொலை இல்லாத அபி-சேகத்தில் மலரும் நீரும் தீயும் மந்திரங்களும் இன்ன பிறவும் பயன்படுத்தப்பெற்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ஆகையால் இற்றை நிகழ்வுகள் கொண்டு இதன் ஆதிப்பொருளை அறிதல் ஆகாது. நடைமுறைக்கேற்ப வேறு சொற்பொருள் காணுதல் புதிய உத்தியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக