செவ்வாய், 24 ஏப்ரல், 2018

பிராம்மணர் இயல்பும் சூத்திரர் மேன்மையும்.

உண்மை விளம்புவதானால் பெரும்பாலான மக்கட்கு  அவர்களின் முப்பாட்டன் வரையில் நினைவில் இருக்கலாம். முப்பாட்டனின் முப்பாட்டன் வரை போவதானால் பலருக்கு நினைவிலும் இல்லை; அதற்கான பத்திரங்களும் கிட்டுவதில்லை. ஆனால் சீனாவின் சிங்கியாங்க் மாகாணத்துப் பழங்குடிகள் பல தலைமுறைகள்வரை தாம் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள் என்று ஒரு கட்டுரையில் படித்து வியப்பில் ஆழ்ந்தேன்.  இறந்துபோன முதாதையர்களை நினைவிருத்திக்கொள்ளும்  விதமாகச் சில இனங்களிடை "முன்னோர் வழிபாடு" நடந்துவருவதாகவும் கேள்விப்படுகிறோம். எல்லா வழிபாடுகளும் இருந்தபோதிலுமே ஜெங்கிஸ்கானும் குப்ளாய்கானும் படையெடுத்து வந்து நிலங்களையும் நாட்டையும் கைப்பற்றிக்கொண்டபோது, இந்த ஆதாரங்களை எல்லாம் உடையவர்களாய் இருந்தபோதிலும் அவர்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. நிற்க:

பிராமணர்கள் எப்படித் தோன்றினர் என்பது ஒரு பெரிய மாந்த வளர்ச்சி நூல் ஆராய்ச்சியாகவே இருந்துவந்துள்ளது.  மதத்துக்கு அதிக எண்ணிக்கையிலான பூசாரிகள் தேவை ஏற்பட்டகாலை, பூசாரிகள் அல்லாதவர்கள் போதுமான பயிற்சி அளிக்கப்பட்டுப் பூசாரிகளாக அமர்த்தப்பட்டனர் என்றும் பலர் அதிலிருந்து பிற+அந்தியங்களுக்கு (பிராந்தியங்களுக்கு ) (  பிற மூலை முடுக்குகளுக்கு) கொண்டுசெல்லப்பட்டனர் என்றும்  சொல்கிறார்கள்.  எல்லாம் உண்மையாய் இருக்கக்கூடும்.

பிற்காலத்தில் மனுதர்மம் முதலிய நூல்கள் எழுந்தகாலை இந்தச்  சரித்திர ஆய்வு எதுவும் நடத்துவதற்கு அவர்களுக்கு நேரம் இருந்தது என்று நாம் நினைக்கவில்லை. அவர்களுக்குள் ஓர் உரையாடல் நடைபெற்றது.

இப்படி:

பிராம்மணா எங்கிருந்து வந்தனர்?

இதற்கு யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை.  அதிலொருவர் எழுந்து
"தெரியத்தான் இல்லை" என்று சொல்ல, இன்னொருவர்:

ஏன் தெரியவில்லை?  பிரம்மனை விட்டால் மிச்சமிருப்பது "ணா".  அதிலிருந்துதான் வந்தார்கள் என்று நல்லபடியாக பதில் சொல்லி முடித்தார்.

உண்மையும் அதுதான்.  பூசாரியின் வேலையில் முக்கியம் நாவுதான். நாவைத்தான்  ணா  என்று சொன்னார்கள். நாவு வாயில் இருப்பதால் அப்படியே மனுதரும நூலிலும்  எழுதினார்கள்.

அல்லாதாரெல்லாம் தொழிலால் வேறுபட்ட நிலையினர் ஆதலின் அவர்களும் வாயிலிருந்து வந்தார்கள் என்று சொன்னால் அது ஆராய்ச்சி ஆகாது.  ஆகவே மற்றவர்கள் வேறு இடங்களிலிருந்து வந்ததாகச் சொல்லப்பட்டது.  எல்லோரும் பிரம்மனின் உடற்பகுதிகளிலிருந்துதான் வந்தனர். காலில்லாமலா உடல்?

இவற்றுள் காலே முக்கிய இடம்.  பிரம்மன் நிற்பதும் நடப்பதும் எல்லாம் காலால்தான். நெஞ்சும் வயிறும் இருந்தாலும்  அவற்றுள் பெரிய விடயம் எதுவுமில்லை.  அவர் சண்டைக்கும் போகமாட்டார். சாப்பிடவும் மாட்டார். காரணம் அவர் கடவுள். காலால் உலகின் கடைக்கோடிக்கும் சென்று மக்களை
நலம் உசாவ வேண்டுமாயின்,  கால் அங்கெல்லாம் கொண்டுசென்றாலே வாயால் கேட்க முடியும்.  காலே முதன்மை வாய்ந்தது.   மேலும் ஒரு செம்பு தண்ணீர் ஊற்றினாலே கால் தூய்மை அடைந்துவிடும். வணங்குகிறவர்கள் அங்குதான் வீழ்ந்து வணங்குவர். அவர் கால் துயவை அல்லாதவை எனின் 
பத்தர்கள் ( பற்றாளர் ) அவற்றை வணங்குவ தெவ்வாறு ?

மேலும் இடத்தால் கீழிருப்பவை கீழ்மை உடையவை அல்ல. இடத்தால் மேலதான தலைமயிர் உயர்வானதும் அன்று. உதிர்ந்தால் ஒதுக்கப் படுவது அது. நிரந்தரம் இல்லாதது.

காலில் வந்தோருக்கு சூழ் திறம் உடையார் என்று பெயரிட்டனர்.  சூழ்திறம் என்பது  சூத்திரம் என்று திரிந்தது.  பல திறங்களையும் சொந்தமாகவே கண்டுபிடித்தவர்கள்:  சூழ்ந்து -  எண்ணிக் கண்டுபிடித்து;  திறர்கள்:  திறம் காட்டியவர்கள். அதாவது அவர்கள் கண்டுபிடித்ததனைத்தும் அவர்கள் சொந்த அறிவால் கண்டுபிடித்தது. (பிரம்மன் கண்டுபிடிக்கவில்லை).

நான் கண்டுபிடித்துக் கொடுக்காத பல இவர்களே கண்டுபிடித்து விட்டார்களே  என்று பிரம்மன் அசந்துபோய் இருக்கிறார். ஆனந்தமே.

பூசாரியின் மந்திரங்களெல்லாம் பிரம்மன் சொல்லிக்கொடுத்தவை. ஆனால் சூத்திரர் என்பாரோ கண்டுபிடிப்பாளர்கள்.  சூத்திரம் சொல்லும் உயர்ந்தது; செயலும் உயர்ந்தது. தம்காலால் நின்று வாழ்வோர் சூத்திரர்.

பிரம்மன் வாய் பேசும்:  ஆதலால் மந்திரங்கள் புனையமுடியும்.  கால் பேசா. ஆகையால் வேலைகளையெல்லாம் சூழ்ந்து (ஆராய்ந்து) கண்டுபிடித்துக் கொண்டனர்.

பிரம்மன் வாயும் மந்திரங்களை மறந்த வாய். அப்புறம் முருகக் கடவுளே மீட்டுருவாக்கம் செய்துகொடுத்தார் என்`கின்றன புராணங்கள்.  சூழ் திறத்தவரான சூத்திரர்., -- யாரும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவுமில்லை; எதையும் மறக்கவும் இல்லை.

கால் இல்லாவிட்டால் பிரம்மன் எப்படி நடமாடுவார்?  ஆகையால் காலின் முதன்மையை உணர்ந்து  சூத்திரம் என்ற சொல்லையும் தெளிந்த கண்களுடன் பார்த்து உயர்வு காண்பது யாவர் கடனுமாகும்.

பிரம்மன் காலால் நடைபெறும் உலகம்
 

கருத்துகள் இல்லை: