திங்கள், 2 ஏப்ரல், 2018

தென் கண்டத்துப் பாலை அழகு Australian deserts



மேற்குத் தென்`கண்டத்தில்
மிகுவிரி மணற்பரப்பும்
ஏற்கும் ஒளிவெள்ளத்து
எல்லோன் இறங்குமுகம்.

ஒட்டகத்து உயர்முதுகை
ஒட்டியே அமர்ந்து நகர்
வெட்டவெளிச் செலவினையே
வேண்டிவரு வோர்பலரே.

தாழ்வரு செடிகொடிகள்
தருங்கவின் கண்டுவிட்டீர்
வாழ்வருகி விட்டவரள்
வண்ணமிது கண்ணுறுவீர்.

மாலைவெயில் மஞ்சளிட்டு
மனம்கொஞ்சும் இராக்கூட்டும்
பாலையிலும் இயற்கைத்தாய்
பதுக்கிவைத்த பெருகெழிலே.


 அரும்பொருள்:

மேற்குத் தென் கண்டம்:  ஆஸ்திரேலியாவின்
மேற்குப் பகுதி.
ஒளி வெள்ளம் :  சூரிய ஒளி.
எல்லோன்: சூரியன்.

வெட்ட=  வெளிச்சமுள்ள
செலவு :  பயணம்
வேண்டி : விரும்பி

தாழ்வரு : தா(ழ்)வரங்களாகிய.
வாழ்வருகி : உயிர்கள் வாழாத.
வரள் வண்ணம்: வரண்டுபோன அழகு.

இரா: இரவு
கூட்டும்: சேர்க்கும்
பெருகெழில்: அதிக அழகு.
பாலை: பாலைவனம் 

கருத்து:  வரண்டுவிட்ட உயிர்கள் வாழாத பாலை
வனமும்கூட மாலை வெயில் சாயும் நேரம் ஒட்டகத்தில்
ஏறிச்செல்கையில் ஓர் மறைந்துகிடந்த ஒப்பற்ற அழகினையே
வெளிக்காட்டுகிறது.  இயற்கை அனைத்தும் எல்லாம்
அழகே.

கருத்துகள் இல்லை: