ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குற்றங்களை முற்றும் தடுக்க......





வெண்பா

குற்றம் இழைப்போர் துணிந்தே  இணைந்தொன்றாய்

அற்றமே பார்த்துத்தாம் ஆற்றும் செயலுக்கு

முற்றும் முயன்றாலும் மூவுலகில் ஆகாதே

முற்றத் தடுக்கும் முனைப்பு.

கருத்து:

எந்தக் குற்றத்தையும் முற்றாகத் தடுத்துவிட
இயலாது. சிலவற்றைக் காவல்துறை தடுக்கலாம்.
எல்லாவற்றையும் தடுப்பது முயற்கொம்பு.  முடியாதது.
காவல்துறை சரியாகச் செயல்படுகிறதா என்று
மந்திரிகள் கவனிக்கலாம்.  கண்டனங்களை வெளியிடலாம்.
அதற்குமேல் அவர்களாலும் இயலாது.

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டை
சொன்னது ஓர் அப்பட்டமான உண்மை.

மூவுலகு:  யாம் இதை  மூத்த உலகு (வயதாகிவிட்ட
இவ்வுலகு)  என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறோம்.
மூதேவி :  மூத்த தேவி என்பதுபோல. இச்சொல் பின்னாளில்
தீயகுணங்கள் படைத்தவள் என்ற பொருளுக்கு வந்துவிட்டது.
மூவுலகு என்பதோ  மூத்த உலகு என்ற  பொருளில் பெரிதும்
கண்டுகொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாகத்
:தொல்லுலகு என்றுதான் நம் முன்னையப் புலவர்கள்
கையாண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: