சனி, 7 ஏப்ரல், 2018

ஒன்றும் இரண்டும் அமைந்த விதம்.

ஒன் என்ற சொல்லை இதற்குமுன் ஆய்ந்துள்ளோம். ஒன் என்பது ஊ, உன் என்பவற்றிலிருந்து திரிந்து அமைந்த சொல்.  உ என்பது முன்னிலைச் சுட்டு என்பது உங்களுக்குத் தெரியும்.  உங்கள்முன் ஒரு பொருள் இருந்தால் அது அங்கு உள்ளது எங்கிறீர்கள் அன்றோ? உள்ளது என்பதில் உள்,  உள் என்பதில் உ எல்லாம் குறைவின்றி இருக்கின்றன. இவை எல்லாம் ஊ என்பதனுடன் தொடர்புற்றவை.  சீனமொழியிலும் ஊ என்றால் உள்ளது என்றுதான் பொருள். இப்போது:

ஊ > உ > உள்> உள்+ அ+ து :  உள்ளது.

அ என்பது அங்கு என்று பொருள்படும்  சேய்மைச் சுட்டு என்றாலும் இச்சொல்லில் அது தன் பொருளை இழந்து வெறும் இணைப்பொலியாய்ப் பயன்படுகிறது.  இது முற்காலத்தில் உள் உது என்று அதாவது உள்ளுது என்று இருந்திருக்கவேண்டும்.  உது என்பது அது என்று திரிந்திருக்கவேண்டும்.  திரியவே அ என்பது பொருளிழக்க து என்பதுமட்டும் ஒன்றன்பாலை உணர்த்த நின்றுள்ளது என்பது காணக்கிடக்கின்றது.

எல்லா மொழிகளிலும் திரிபே இல்லையென்றால் ஆய்வுகள் மிக்க எளிமையாய் இருந்திருக்கும்.  குழப்படியான உலகில் எதுவும் எளிதில் கிட்டுவதில்லை, அறிதருவதும் இல்லை.

மீண்டும் ஒன் என்ற வடிவத்துக்கு வருவோம்.

ஊ > உ > உன் > ஒன்.

முன்னிருப்பது; அதாவது ஒன்று என்ற எண்ணிக்கையில் உள்ள பொருள்.

இதில் து என்ற அஃறிணை விகுதி புணர்த்த, ஒன்+து = ஒன்று என்றாகிறது.

இனி, ஓரு, ஓர் என்பனவெல்லாம் உள்ளன. அவற்றையும் அறிந்துகொள்வோம். எம் வலையொளியில் நின்றுகொண்டிருங்கள். தக்க
தருணத்தில் அதையும் கண்டறியலாம்.

முன்னிருப்பது ஒன்று முன்னே இருக்க,  அதை அண்மிக்கொண்டிருக்கும் இங்குள்ள பொருளும் அதனுடன் போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு ஆகிவிடுகிறது.

இரு+அண்+து.

இங்கு இருந்தது ( இரு)  முன்னிருந்த பொருளை அண்மியது. (அண்).

து என்பது அஃறிணை விகுதி.

உண்மை இதுதான். அறியாதவனுக்கு இது ஒரு விளையாட்டுக்கதை போல் தோன்றும்.  மொழியில் புலவர்கள் ஏற்படாத காலத்தில் அமைந்த சொற்கள் இவை. மிக்க எளிமையுடன் அமைந்திருத்தலை
 நுண்மாண் நுழைபுலத்துடன் கண்டறியவேண்டும்.

இரு என்ற சொல்லில் இ என்ற சுட்டு தன்மை இடத்தை வெளிக்காட்டி நிற்பதை அறியவேண்டும்.

இருப்பது இ !   இ > இரு.  அல்லது இ> இர் > இரு.

இருந்தது முன்னிருப்பதை  அண்மிச்செல்ல இரு+ அண் +து = இரண்டு.

து என்ற ஒன்றன்பால் விகுதி இரண்டில் வந்தது வழுவமைதி.
அன்றி, இருந்தது அண்மிற்று ஒன்றை என்றும் விளக்கலாம். இழுக்கின்று.

அறிந்து மகிழ்க.


அடிக்குறிப்பு:

இரு என்பதற்குப் பெரிது என்பதும் பொருள்.  முன்னிருக்கும் ஒன்றுடன்
இங்கிருக்கும் ஒன்று இணைந்துவிடின் அப்பொருள் பெரிதாகிவிடும் என்பது காண்க.

ஆயிரம் சொல்லமைப்பு:  http://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_62.html

கருத்துகள் இல்லை: