திங்கள், 2 ஏப்ரல், 2018

ஆண்டாளம்மை பாடல்களில் பறை பற்றிய குறிப்பு.

ஆண்டாளின் தமிழ் மிக்க உயரிய செவ்விய நடையுடையது என்பதும் அவர் சங்கப்புலவர்களுடன் வைத்து எண்ணப்படவேண்டிய பெரும்புலமை உடையவர் என்பதையும் யாம் முன்னரே கூறியதுண்டு. யாம் ஓர் ஈழக்களத்தில் ( உணர்வுகள்) எழுதிவந்த காலங்களில் எழுத்தாளர் ஒருவர் நான்`கு பாடல்களுக்கு உரை எழுதியிருந்தார். ஐந்தாவது பாடலுக்கு யாம் ஓர் உரை தந்தபின் அவர் தொடரவில்லை. ஆகவே யாமே திருப்பாவை முழுமைக்கும் உரையெழுதி முடித்தேம். இந்தக் களம் எதிர்பாராதவிதமாக மூடப்பட்டபின் எம் உரைகளும் களத்துடன் மறைந்தன,  எம்மிடமும் பகர்ப்பு ஒன்றும் இல்லை. ஆனால் உரையெழுதிக்கொண்டு வந்தபோது ஆண்டாளின் தமிழை அறிந்து வியந்து போற்றிய பேறுபெற்றேன். பறை என்ற சொல்லை அவர்  எவ்வாறு கையாண்டிருக்கிறார் என்பதை இப்போது சுருக்கமாகத் தெரிந்தின்புறலாம்.

பறை என்ற தமிழ்ச்சொல் உலகில் அன்றாட வழக்கில் உள்ளதொன்றாகும். சொல்லுதல் பேசுதல் என்பதற்கு மலையாள மொழியில் பறை (பற) என்றே சொல்லப்படுவதால்,  அதை அன்றாட வழக்குச் சொல் எனவேண்டும்.  மேலும் பறையன் என்ற சாதிப்பெயரின் ஒரு பகுதியாகவும் அது இருப்பதால் பறையனைப் பற்றி பேசுவோர் அனைவரும் அச்சொல்லை வழங்குகின்றனர் என்றும் கொள்ளுதல் வேண்டும். பறையன் என்போன் செய்தியறிவிப்போன் என்பதும் பறை என்னும் வாத்தியக்கருவி அதை அறிவிக்குங்கால் அடித்துக் கவனத்தை ஈர்ப்பதற்கு உதவும் ஒன்று என்பதும் இனி விரித்துரைக்கமலே புரிந்துகொள்ளற்குரியவாகும்.

இவற்றில் ஏதும் இழிவு தென்படவில்லை. இழிவு என்பது இருநூறு ஆண்டுக்கால பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதென்பதை இப்போது சிலர் கூறுகின்றனர். அது ஓர் சாதி என்றாலும் ஒரு தொழிலடிப்படையிலானது என்பதால் இழிவொன்றும் ஆதியில் இருக்கவில்லை என்று வரலாற்றிலிருந்து தெரிகிறது.

சாதிகளை ஓர் நிறுவிய அமைப்புகளாக்கியவர்கள் இந்தியாவின் பல்வேறு அரசர்களே ;  ஆட்சியில் மக்கள் ஒன்று சேர்ந்து கலகங்கள் எதிர்ப்புகள் உண்டாக்காதபடி பார்த்துக்கொள்ள அவர்களைப் பிரிந்துவைப்பதில் அரசர்களுக்கே நன்மை என்பதை அறிக.  பார்ப்பனர்களைப் பொறுத்தவரை சாதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோயிலுக்கு  வந்து இறைவனுக்கு வழிபாடு இயற்றுபவர்கள் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தத்தான் போகிறார்கள். அவற்றைப் பெற்றுக்கொண்டு ஐயராய் இருப்பவர் காரியத்தை முடித்துப் பிரசாதத்தைக் கையில் கொடுத்து அனுப்பிவிடுவார்.  
 
சாதிகளால் பார்ப்பனர்களுக்கு நன்மை இல்லை.  அரசர்களே நன்மை அடைந்து நீடித்த ஆட்சிகளை அமைத்துக்கொண்டனர். போருக்குப் போகும்போதெல்லாம் பட்டாளத்துக்கு வலிந்து ஆள்சேர்த்தால், வரிகள் அதிகம் வாங்கினால், இன்னும் உள்ள அரசு காரியங்களை வலிந்து செய்தால் எதிர்ப்பு வராதா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
 
 மக்களிடையே பிரிவினைகளை உண்டாக்கினால் அதை அமல்படுத்தும் திறம் அரசர்களுக்கே இருந்தது. இது சாமி கும்பிட உதவும் ஐயர்களிடம் இருந்திருக்கமுடியாது.  ஆகவே பார்ப்பனர்கள்  சாதிகளை உருவாக்கினார்கள் என்பது பொருளற்ற வாதம்.  பார்ப்பனர்கள் துணையாக நின்று  ஆம், இது கடவுள் கட்டளை என்று ஒத்தூதி இருக்கலாம். எழுத்துக்களில் எழுதி அமைதிப்படுத்தியிருக்கலாம். அதைச் செய்யாவிட்டாலும் அவர்களை ஒதுக்கிவிட்டு வேறு ஆட்களை வைத்து நடத்திக்கொள்ளும் அதிகாரம் அரசர்களுக்கே இருந்தது. தலையை வெட்டி நீதிகூறியவர்கள் அரசர்கள். அமலாக்கம் என்பது அரசர்கள் கையில்.  மனு என்பவனும் ஒரு திராவிட அரசனே.  பார்ப்பான் அல்லன்.

ஆதியில் வேதங்கள் இதிகாசங்கள் முதலானவற்றைப் பாடியோருள் எல்லாப் பிரிவினருமிருந்தனர்.  சமத்கிருத இலக்கணம் பாடியவன் ஒரு பாணர் வகுப்பைச் சேர்ந்தவன்.  பாணர் என்போர் பாட்டுக்காரர்கள். பறையர் போன்ற வகுப்பினரே. அவன் பெயரே அதைக் காட்டுகிறது.  பாண்+இன்+இ = பாணினி எனக் காண்க. இராமாயணம் முதன்முதலில் பாடிய பெரும்புலவனும் வால்மிகி வகுப்பினனே.  இதுவும் இன்று ஒரு பின் வகுப்பே. சமத்கிருதப் புலவர்களுள் இவ் வால்மிகியே முன்னோடி.  மகாபாரதம் பாடிய வேதவியாசன் ஒரு மீனவப் புலவன். வேதப் பாடல்களில் பலவற்றைப் பாடிய பெருமைக்குரியோருள் பாணரும் இருந்தனர். (bards).  இவர்களில் பலரும் பார்ப்பனர் அல்லாதாராய் இருக்க, சாதிகளைப் பிராமணர் ஏற்படுத்தினர் என்பது வரலாற்றுக்கு முரணனானது.  
 
சமத்கிருமென்பதும் ஆரிய மொழியன்று; பார்ப்பன மொழியுமன்று.  அது நன்றாகச் செவ்விதாக்கப்பட்ட ஒரு புனைப் பொதுமொழி.  பாலிமொழியும் அங்கனம் செய்யப்பட்டதே.  சமத்கிருதம் என்ற சொல்லே அதை விளக்குகிறதே!

ஆனால் நாம் குறிப்பிட்ட புலவர்கள் வாழ்ந்த காலத்தில் இவர்கள் எச் சாதியினராய் இருந்திருந்தாலும் பிராமணர்களே என்று துணிந்து கூறலாம். அதற்குக் காரணம் பிரமம் என்னும் கடவுளை உணர்ந்தோர் அக்காலத்தில் பிராமணர் ஆயினர் அல்லது எனப்பட்டனர்.  இவர்கள் தாமடைந்த மேலுணர்வால் பிராமணர் எனப்பட்டோர்.  பிறப்பால் சாதியென்பது பிற்காலத்தது.

இந்தக் காலக்கட்டத்திலும் இழிவு என்பது தோன்றவில்லை. பிரிட்டீஷ் ஆட்சி ஏற்பட்ட பின் மக்களிடமிருந்த இந்தத் தொழிற் பகுப்புகளும்  அகமணமுறையும் ( தம் தொழில்பகுப்பினருள்ளே கொள்வனை கொடுப்பனை) குறிவைக்கப்பட்டு  இழிவு புகுத்தப்பட்டது.  வெள்ளைக்காரர்களே பழைய நூல்களையும் மொழிகளையும் நன்`கு கற்றுப் பண்டிதராகி இல்லாத இழிவைஅந்நூல்களிற் புகுத்தினர் என்றும் இப்போது அறிந்துள்ளனர்.  பலகாலமாக ஒன்றாய் வாழ்ந்துவந்த இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் புகுந்து குத்திவிட்டு இந்தியாவை இரண்டாய் உடைத்த ஆட்சியாளர்கள் சாதிப்பிரிவினைகளில் இழிவு உயர்வு புகுத்தி குமுகாயத்தை ஏன் உடைத்திருக்கமாட்டார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பொதுமொழியாய் உருவாக்கப்பட்ட சமத்கிருதத்தையும் அயல்மொழியாக்கி இந்தோ ஐரோப்பியத்தை உண்டாக்கியது மட்டுமின்றி  ஆரியர் என்பார் வந்தனர் என்பதும் கூறி மருட்டினர்.  வெளிநாட்டினர் வந்து கலந்ததுண்டு; ஆரியர் யாருமில்லை.

ஆரிய மொழிகள், திராவிட மொழிகள் என்று மொழிக்குடும்பங்களை உண்டாக்கிப் பெயரிட்டோரும் பிரிட்டிஷ்காரர்களே.

சமத்கிருத நூல்களின் பல நூற்படி (பிரதி)களும் பழமை காட்டவில்லை.  நமக்குக் கிடைப்பவை திருட்டுத் திருத்தங்கள் புகுத்தப்பட்டவை என்பதை இப்போது  வலைப்பதிவர்கள் சிலர் கூறியுள்ளனர்.

சரி, இனி பறை என்ற சொல்லை எங்கனம் கையாள்கிறார் ஆண்டாளம்மை என்பதைக் காட்டுவோம்.

திருப்பாவை முதல்பாட்டில் அம்மை பாடுவது:

“கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் பதிந்தேலோர் எம்பாவாய்”

என்று வருகிறது. நோன்பு தொடங்குங்கால் பறைமுழக்கியே தொடங்கப்படும். 
 
இது 26வது பாடலிலினும் நன்`கெடுத்துரைக்கப் படுகின்றது:  “சாலப் பெரும்பறையே….பல்லாண்டிசைப்பாரே  ஆலினிலையாய்  அருள்........”  எனக்காண்க.

பறை என்பது அரண்மனையிலும் இன்றியமையாத கருவியாகும்.  எதிரிகளின் படை வருவதை பறையடித்தே அரண்மனையில் அனைவருக்கும் அறிவிக்கப்படும். நோன்பின் தொடக்கத்துக்கும் பறையே முழக்கப்படும். இப்படி வாசிக்கப்படுவதை: " நாராயணனே நமக்கே பறைதருவான்” என்று அம்மை விளக்குவதால், பறையின் முன்மை தெளிவாகின்றது.  இத்தகு முன்மைப் பணியைச் செய்தவர்கள் அப்போது இழிகுலமாகக் கருதப்படவில்லை. பிரிட்டீஷ் அரசின் காலமே அவர்களைக் கீழே வீழ்த்தியது.  மதமோ பார்ப்பனரோ பிறரோ அல்லர். 
 
ஒரு கணிசமான தொகையினரான பறையர்கள் இந்துமதத்திலிருந்து நீங்கி, வந்த மதங்கட்குப் போகவேண்டுமென்பது அன்றைய ஆட்சியாளரின் ஏற்பாடு என்று தெரிகிறது. இதிலுள்ள உண்மையையும் ஆராய்தல் வேண்டும்.

சங்க காலத்தில் எந்தச் சாதிப் புலவராயினும் அரசருடன்  அவையில் ஒன்றாக வீற்றிருந்து  கவிபாடவும் அளவளாவும் செய்தனர். ஒளவைப்பாட்டியும் அதியமானைத் தந்தை என்று குறிப்பிட்டு, தன் தலையைத் தடவி அன்பு காட்டினதையும் இன்னொருகால் அருநெல்லிக்கனி கொடுத்து வாழ்வு நீடிக்க விழைந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா முதலிய நாடுகளில் ஒரு படைத்தலைவருக்கு ஒரு படைவீரன் குறைந்தவன் தான்; அத்தகைய தரவேறுபாடு  என்பது எல்லா நாடுகளிலும் இருந்தது. ஒர் நிலக்கிழாருக்கு ஒரு  சேவகன் குறைவானவனே. தமிழ்ப் பழ நூல்களில் சொல்லப்பட்ட "இழிவு"   (தொழிலால் உண்டான படிநிலை) இத்தகையது. 
 
வள்ளுவன் குறுநில மன்னனாய் இருந்து அவனைக் கவிஞர் பாடியுள்ளதை நாம் நம் இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளோம். இப்போதுள்ள சாதிமுறை அதனினும் கொடிய ஏற்றத் தாழ்வு என்பதில் ஐயமில்லை. இத்தகைய சாதிமுறை முன்னாளில் இருந்திருந்தால் சீனாவிலிருந்து வந்துசென்ற யாத்திரையாளர்கள் இதைத் தம் நூல்களில் குறிப்பிடாதது வியப்புக்குரியதே: அதனால்  அப்போதிருந்த நிலை வேறு என்றே கூறவேண்டும்.

பிழைத்திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: