செவ்வாய், 28 நவம்பர், 2017

அழிந்த பண்பாட்டுக்கூறு: நீர்ப்படை (பொதுவியல் திணை)


இன்று பொதுவியல் திணையில் கல்நீர்ப்படுத்தல் என்னும் துறையினைத் தெரிந்துகொள்வோம்.

போரிலே மறவன் வீழ்ந்துவிடுகிறான். அவனுக்கு நடுகல் இடுவது பண்டைத் தமிழர் வழக்கமாகும்.

 வண்டுகள் தேடிவரும் வாசனையுடைய மலர்களைக் கொண்டு மாலைகள் செய்து நடுகல்லுக்குச் சூடிப் பின்னர் அதனை நீர்ப்படை செய்வர். நீர்ப்படையாவது அதனை நீரிலிடுதல்..  அப்போது பாடல்களும் பாடப்பெறும்.  இறந்த மறவனின் புகழை அப்பாட்டுகள்  உள்ளடக்கியிருக்கும்.

தொல்காப்பியம் அதனை நீர்ப்படை என்றும் வெண்பாமாலை கல்நீர்ப்படுத்துதல் என்றும் துறைப்பெயர் கூறும்.
இத்துறையில் இயலும் ஒரு பாடலை ஈண்டுக் கண்டு மகிழ்வோம்.

காடு கனலக் கனலோன் சினஞ்சொரியக்

கூடிய வெம்மை குளீர்கொள்ளப் ----- பாடி

நயத்தக மண்ணி  நறுவிரைகொண் டாட்டி

கயத்தகத் துய்த்திட்டார் கல்.


இதன் பொருளை அறிவோம்:

காடு கனல ----  காடு மிகுந்த வெம்மைபெற; கனலோன் சினஞ்சொரிய --- கதிரவன் கோபத்தைப் பொழிய; கூடிய வெம்மை --  அதிகரித்துவிட்ட வெப்பநிலை ; குளிர்கொள்ள --- தணியும்பொருட்டு;
பாடி   இசை வழங்கி;  நயத்தக மண்ணி – நன்றாகக் குளிப்பாட்டி,  நறுவிரை கொண்டு ஆட்டி --- கமழும் இனிய மணப்பொருள்களைக் கொண்டு நீருக்குள் அசைவித்து,,  ; கயத்தகத்து  -  நீர்நிலைக்குள்ளே;;
உய்த்திட்டார் ---  ஆழ்த்திவிட்டனர்.

மண்ணுதல் என்ற சொல்லின் விளக்கம் முன்னர் ஓர் இடுகையில் தரப்பட்டது. ஆங்குக் காண்க.

மேற்கண்ட இடுகைக்கு:

சொடுக்கவும்:

 http://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_14.html

இதுபோன்ற நிகழ்வுகள் விண்மேய மறவர்க்காற்றும் சடங்குகளாக முற்காலத்திருந்தன. ஆழ்த்தப்பட்ட கற்களில் எழுத்துக்கள் இலவென்று தெரிகிறது. எனவே அகழ்வாராய்ச்சிகளில் இவை பயன்படமாட்டா என்பது தெளிவு.

இவர்கள் கல் நீர்ப்படுத்தும்காலை பாடிய பாடல்கள் எவையும் அகப்படவில்லை என்றே தெரிகிறது. கிட்டியிருப்பின் வரலாற்றாய்விற்கு வெளிச்சமாய் இருக்கும்;

பண்பாட்டின் இந்தக் கூறு இப்போது அழிந்தவற்றுள் அடங்கும்.


இவைபோலும் கடைப்பிடிகளால் நடுகல் மண்ணில் நடுதல்,  நீரிலிடுதல் முதலிய சடங்குகள் மூலமாக சிலை செய்து வழிபடும் முறை நடப்புக்கு வந்தது என்று ஆய்வாளர் சிலர் முடிவுக்கு வருகின்றனர், இது உண்மையாய் இருக்கலாம். சிலைவழிபாடுகளை ஆதிசங்கரர் ஏற்றுக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றை ஆய்ந்தோர் எழுதிய நூல்களில் மேலும் வாசித்தறியலாம்.







கருத்துகள் இல்லை: