வியாழன், 16 நவம்பர், 2017

மாலாவின் பெயர் தமிழ்

மாலாவின் (சிவமாலாவின் ) பெயர் அழகான தமிழ்ப்பெயர்,

இந்தப் பெயர் எப்படி அமைந்தது என்பதை இங்கு
எழுதியுள்ளோம்.

இங்குக் காணலாம்:

https://sivamaalaa.blogspot.sg/2016/08/blog-post_21.html

மாலுதல்

மாலுதல் என்பது வினைச்சொல். ஒரு வினைச்சொல் எந்த
மொழியில் இருக்கிறதோ,  அவ்வினைச்சொல்லினின்றும்
திரிந்தமைந்த சொற்களும் அம்மொழிக்கே சொந்தமானவை.
சில சொற்கள் அடுத்தார் மொழிகளில் சென்று கொடிநாட்டும்.

மாலுதல் என்றால் மயங்குதல்.  மயங்குதல் என்றால் கலத்தல்.
இருளும் ஒளியும் கலந்த நேரம் மாலை ஆகிறது.
மால் -  அடிச்சொல். ஐ என்பது தொழிற்பெயர் விகுதி.

மாலை:

மலர்கள் கலந்து அமைக்கப்பட்டதும் மாலை.



ஒரே விதப் பூக்களினால் தொடுக்கப்பட்டதும் மாலை
ஆகும்.  ஒரு விதமானாலும் பலவகைகள் ஆனாலும் கலந்தே
கட்டப்படுவதும் மாலையே.
மாலை என்ற சொல்லும் மாலா என்று திரியும்.

மாலை என்ற இந்தச் சொல்வடிவம் ஓர்* ஆளின் பெயராகும் போது அதன் விளி வடிவில் அதாவது கூப்பிடும் போது மாலா என்று திரியும்.  எடுத்துக்காட்டு: கண்ணன் > கண்ணா.  ஐயன் > ஐயா.  மாலை > மாலா .

பல பிற மொழிகள் இந்த விளிவடிவத்தை மேற்கொண்டுள்ளன. They have adopted or borrowed.  இறுதி  ஐகாரம் அம்மொழிகளுக்கு ஒத்துவரவில்லை.  இதை முன் விரித்து  எழுதியதுண்டு. 

மணிமேகலையில் வயந்தமாலை 

மணிமேகலைக் காப்பியத்தில் வயந்தமாலை என்றொரு
பாத்திரப்படைப்பு  காணப்படுகிறது.  இதனை
இற்றைப்புதுமை வடிவத்துக்கு மாற்றுவதாயின்
அஃது வசந்தமாலா என்று வரும்.

வை > வ+அம் > வயம் (யகர உடம்படு மெய், அம் விகுதி ) >
வயம்+தம் > வயந்தம் > வசந்தம்
( ய - ச திரிபு,  வாயில் - வாசல் போல).  உயிர்களைத்
தன் வயப்படுத்தும் காலம்.  தம் என்பது து+அம்.  அ
ம்மென்னும்  விகுதிமட்டும் இருமுறை பயன்படுத்தப்
பட்டுள்ளது.  இது புனைவுச்சொல்.

ஒரு பொருளை  யார் வைத்திருக்கிறானோ அது அவன்
"வயம்"  உள்ளது.  வை>வயம். ஐகாரக் குறுக்கத் திரிபு.

பெயர்ச்சொல் ஆதல்:  Formation of Noun 
( supplanting the vocative case) 

மாலுதல் என்ற வினைச்சொல்லிலிருந்தும் நேரடியாக
 இது அமையும். அங்கனமாயின் அதன் இறுதி, ஆ
என்னும் தொழிற்பெயர் விகுதி (மிகுதி) பெறும் .

மால் > மால்+ ஆ > மாலா.

ஆ என்ற விகுதியின் பிறப்பை அறிவோம்.

ஆ = ஆதல்.  ஆதல் என்பதில் தல் விகுதி.  ஆ என்பதோ
வினையாகவும் விகுதி ஏதும் ஏற்காமல் பெயர்ச்சொல்லாகவும்
உள்ளது.  இப்படிப் பெயரானதும் அது தன் தனித்தன்மையை
இழந்து ஒரு விகுதியாவும் ஆகின்றது.  விகுதியாகிவிட்ட
நிலையில் மால் என்ற சொல்லுடன் சேர்ந்து மாலா
என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது.

மால் - வினைச்சொல்.
ஆ - விகுதி.
மால்+ ஆ =  மாலா.

ஆ விகுதி பெற்ற வேறு சொற்களைப் பார்த்து மகிழ்வோம்.

பல் > பலா.  பல சுளைகளை உடைய பழம். அது
காய்த்துப் பழுக்கும் ஒரு மரம்.

இங்கு "பல்" என்பது வினைச்சொல் அன்று.  அல்லாதவையும்
விகுதி பெற்றுச் சொல்லாகும்.

உல் > உலா.   (ஓ.நோ:  உல் > உலவு).

கல் (கற்றுக்கொள் என்னும் வினை)
கல் > கலா.
இது கல் என்ற வினையுடன் ஆ விகுதி பெற்று அமைந்தமையின் தமிழ்ச்சொல் என்பார் பேரா. அனவரத விநாயகம் பிள்ளை.

நில் > நிலா.     ( நில் > நிலவு). (  நிலவுதல் என்று
பின் வினையுமாம்).

இர் > இரா.    (  இர்+ உள் = இருள்).

வில் > விலா.  (வில் போன்ற வளைவு எலும்பு)

துல் > துலா.   (துல் > துலை).

விழு > விழா.    (விழு > விழைதல்)  (விழுமியதை விழைதல் இயல்பு).
ஆ என்பது விகுதியாகப் பயன்பட்ட சொற்கள் இவை.

செய்யுள் பாடல்களில்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.  (குறள்)

மால் என்பது கருமை என்றும் பொருள்படும்.

மாலானவர் அணிபென்னாடை கண்டு மகளைத் தந்து என்ற செய்யுள்வரியில் மால் என்ற சொல் காண்க.

கரியமால் உந்தியில் வந்தோன் என்ற வரிவரும்
ஔவையின் பாட்டில் வருவதும் காண்க.

சேலார் விழிமாதை மணம் செய்ய அருள்வாய் என்ற
கிட்டப்பாவின் பாடலில் “ மாலாகினேன் மாதவா “ என்று 
ஒரு வரி வரும். மாலாகினேன் = மயங்கிவிட்டேன் என்று பொருள்.

மால் என்ற சொல் கடைக்குறைந்து மா என்றும் வந்து 
கருமை குறிக்கும்.  மா நிறம் என்ற தொடர் காண்க.

மா என்பதற்கு வேறு பொருள்களும் உள்ளன.

மால் > மாலி.  (  மால்+ இன் + இ =  மாலினி).

(  மாலி -  வனமாலி).

மால் என்ற சொல் கருமை குறித்துப் பின் குற்றம் 
என்ற பொருளுக்குத் தாவியது.  இலத்தீன் மொழிக்கும் 
சென்றது.   mala fide (x bona fide )  என்ற 
தொடர்களும் காண்க.

மிக நீண்டுவிட்டதே.

I do not think you can find this information anywhere.

வேறோர் இடுகையில் சந்திப்போம்.

Edited but beware of postscript changes by third parties and virus. 



 

கருத்துகள் இல்லை: