புதன், 15 நவம்பர், 2017

அரசியல்: எவனும் எதிரியில்லை.



இது வெளிநாடொன்றில் நடைபெற்ற நெருங்கிவரல் முயற்சியில் ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியினரை எதிரியுடன் பேசேன் என்று ஒதுக்கியது அறிந்து,   மக்கள் தொண்டு புரிவார் என்றும் நட்பு நெறியே கடைப்பிடித்தல் வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்ட எழுந்த உள்ளக் கருத்துகளின்  வெளிப்பாடு. படித்து இன்புறுக.

இது அக்கட்சியினரை எட்டுமென்று நினைக்கவில்லை.  இருந்தாலும் பாடப்பட்டதனை நாம் பகிர்ந்துகொள்வோமே. 


அரசியலில் நிரந்தரமாய் நண்பர் இல்லை
அத்துறையில் நிரந்தரமாய் எதிரி இல்லை.
நிறுவியதோர் கூட்டாளி உண்டென் றாலோ
நிலைமாறா எதிரியவன் உண்டென் றாலோ
அருவியாறு கடல்களிலே மாற்ற மில்லா
அகிலமிதாம் என்றன்றோ பொருளே யாகும்?
திருவுகந்த தருணத்தில் எதிரி நண்பன்
தேர்ந்தவனோ டுறவாடல் ஓர்ந்து கொள்ளே!


மக்களுக்கே உழைப்பதொன்றே  கடனாய்க் கொண்டாய்
மாநிலமேல் எதிரிக்கும் இலக்கு வேறோ?
தக்கபடி பேச்சியற்றித் தகுந்த காப்பில்
தனிச்சிந்தை  மேலோங்க முடிவு சேர்ப்பாய்!
நக்கலுடன் களிப்பாட்டு  நீயோ செய்யாய்
நலமென்றும் விளைத்திடுதல் நோக்கம் அன்றோ
ஒக்கவுன தன்பருடன் உயர்ந்து நின்றே
உலகுபயன் கொண்டிடவே புரிவாய் தொண்டே.

வேறு சந்தங்களில் பாடவேண்டுமென்று எண்ணினாலும்
கருத்துகள் ஏனோ இந்தச் சந்தத்திலேதான் வடிகின்றன!
அடுத்த கவிதையை வேறு சந்தத்தில் பாட அம்மை அருள்புரிவாளாக.
 



கருத்துகள் இல்லை: