வெள்ளி, 10 நவம்பர், 2017

சகுனம் என்பது ....



இப்போது நாம் சகுனம் என்ற சொல்லை அணுகுவோம்.

இந்தச் சொல்லின் முன் வடிவம் சொகினம் என்று இருந்தது.  இந்தச் சொல் பேச்சு வழக்கிலோ எழுத்திலோ அண்மையில் காணப்படவல்லை. இதன் திரிபாகிய சகுனம் என்பதே யாண்டும் எதிர்கொள்ளப்படும் சொல்லாகும்.

ஆய்வு செய்வதாயின் நாம் முந்து வடிவத்தையே கவனிக்கவேண்டும்.

சொகினம் என்பதும் முதல்வடிவன்று.   இதன் முதல் “சொல்கினம்”  என்பது.
பல சொற்களில் காணப்படுவதுபோல் இச்சொல்லிலும் ஓர் ஒற்று அல்லது மெய்யெழுத்து வீழ்ந்தது.

 சொகினம்.<  சொல்கிணம் < சொல்கிணை.

ணகரம் னகரமாய் மாறி அம் விகுதி பெற்றது.

கிணை என்பதொரு பறை.  இதை யடித்துக்கொண்டு பாடி நன்மை தீமைகளைத் தெரிவித்தனர்,  பெரும்பாலும் இவை புகழுரைகளாகவே இருக்கும்.

“சகுனம் சொல்லுதல்” என்பது வழக்கு.  சகுனம் என்று சொல் அமைந்தபின் கிணை அடித்தல் இல்லாதவிடத்தும் இது பயன்பட்டது.   எடுத்துக்காட்டு பல்லி சகுனம். 

விளக்கம்: 
மனித வாழ்வில் முன்மை இடர்ப்பின்னலாக இருப்பது எதிர்காலத்தை அறிந்துகொள்ளமுடியாமைதான்.  ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகட்கு முன் ஒரு கவிஞர் :  “ நாடகமே உலகம், நாளை நடப்பதை யாரறிவார்? “ என்று ஒரு பாட்டை எழுதினார்.  என்றாலும் நாளை நடப்பதை அறிந்துகொள்ள மனிதன் பல கருவிகளைத் தேடி உதவிபுரிய வைத்தான். அவற்றுள் சோதிடம், சகுனம், ஆரூடம் என்பனவும் அடங்கும். நேற்று நடந்தவற்றை வைத்து நாளை நடப்பனவற்றையும் அறிய முற்படுகின்றனர்.   இவற்றுள் முழுப்பயன் அளிப்பன  எவையும் இல்லை.  எல்லாமும் ஓரளவுக்குத்தான் அறிந்துகொள்ளத் துணைசெய்வனவாய் உள்ளன. பறையடித்துக்கொண்டு வீடுவீடாகப் போய்ப் பாடி வீட்டிலிருப்போனைப் புகழ்ந்து பொருள்பெறுவது பண்டைத் தமிழகத்தில் நடந்தது. இவர்கள் நன்மை வரவையும் தீமை வரவையும் பாடிக் கூறினர் என்றாலும் பெரிதும் நன்மையையே முன்னுரைத்துப் புகழ்ந்தனர் என்று அறிக.    

கருத்துகள் இல்லை: