செவ்வாய், 28 நவம்பர், 2017

வாத பித்த சிலேத்துமம் நோய்க்காரணங்கள்.



நமது மருத்துவ / வைத்திய நூல்களில் சிலேத்துமம் என்ற ஒரு சொல் வழங்குகிறது
.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று''

வளி என்பது காற்று. இது வாதம் எனவும் படும். மற்றவை சிலேத்துமமும் பித்தமும். 

முற்கால மருத்துவர்கள் இம்மூன்றையும் காரணங்களாகக் கொண்டனர். இக்காலத்தில் இது இன்னும் விரிவாகவும் ஆழ்ந்தும் ஆராயப்பட்டுள்ளபடியால் இவற்றை முற்ற அறியப்பட்ட காரணங்களாகக் கொள்ளாமல். அக்கால மருத்துவப்படி இவை காரணங்களாகக் கொள்ளப்பட்டன என்று நிறுத்திக்கொண்டு நமது சொல்லாய்வினைத் தொடர்வோம்.

நாம் எடுத்துக்கொண்ட சொல். “சிலேத்துமம்” என்பது.

இது ஒரு புனைவுச்சொல். புனைவுச்சொல் என்பது  திரிசொல். இயற்சொல் அன்று.  மக்களால் அல்லது பேக்சில் தோன்றி, வழக்கில் நிலைத்துப் பின் செய்யுளில் பயன்பாடு கண்டவை இயற்சொல். இப்புனைசொல் புலவரால் வெட்டி ஒட்டப்பட்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சொல். இது இன்றும் மக்கள் பேச்சில் இல்லை. மருத்துவ நூல்களில் காணக்கிடைக்கும்.

இப்போது சொல்லைப் பார்ப்போம்:

சளி என்ற தமிழ்ச்சொல் சிலே ஆனது.

தும்மல் என்பது துமம் என்று குறுக்கி விகுதி சேர்க்கப்பட்டது.

தும்மல் > தும் ( அல் விகுதி வெட்டப்பட்டது ) .> தும்+அம் = துமம்.

சிலே+ துமம் = சிலேத்துமம் ஆயிற்று.

து என்னும் அடிச்சொல்:

து > துப்பு.
து > தும்மல்.
து > துர > துரத்து. ( விரைவாக முன் ஓட்டுதல் ).

இவையெல்லாம் முன் வருதல் கருத்துடையவை.

பிறவும் ஆய்ந்துணர்க.

புனையப்பட்ட சொல்லை அறிந்த எவரும் உரிமை வாதமின்றி எடுத்துப் பயன்படுத்தலாம். மனிதரால் புனையப்பட்டவையே சொற்கள். மூலம் தமிழாகும்.

கருத்துகள் இல்லை: