வியாழன், 9 நவம்பர், 2017

கேடு > கே, அடிச்சொல்லாகிப் பிற சொற்களைப் பிறப்பித்தல்



முன் ஓர் இடுகையில் கேது என்ற கிரகப் பெயர் அமைந்த விதம் தெளிவாக்கப்பட்டது.   

மெய்யுணர்வை அல்லது ஞானத்தை வழங்குபவன் கேது ( என்னும் கிரகம் ) என்பதறிக.  ஒரு சில இடர்களாவது வந்தாலன்றி மனிதற்கு அறிவு தோன்றுமாறில்லை.  எல்லாமே இன்ப மயமாக இருந்துவிட்டால்,   சிந்திப்பதற்கும் மெய்யுணர்வினை அடைவதற்கும் நேரமும் இருக்காது, வாய்ப்பும் இருக்கமுடியாது. மனிதற்கு அதனாலேயே இடர்களும் அவை கடக்கும் முயற்சிகளும் உருவாகுகின்றன. 

சோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் அது கூடும் இடத்திற்கேற்ப நன்மை விளைத்தலுமுண்டு; தீமை விளைத்தலுமுண்டு. ஆனாலும் சில,  சனி  போல தனி வன்மை உடையனவாய் கெடுதல்செய் கோள்களாய் உணரப்படுகின்றன.

கெடு > கேடு (முதனிலை திரிந்த தொழிற்பெயர் ) > கே >   கே( அடிச்சொல் )  +   து (விகுதி) > கேது என்பது முன் இடுகையில் உணர்த்தப்பட்டது -  மறவாதீர்.

இஃது இரண்டாம் எழுத்தை வெட்டிவிட்டுப் பின்னர் ஒரு விகுதி (மிகுதி) புணர்த்துச் சொல்லைப் புனையும் தந்திரம். (<தம்+திறம்).  இப்படியே அமைந்த இன்னொரு சொல் மேசை என்பதும் கூறப்பட்டது.

இப்போது இன்னும் சில சொற்களை ஆய்வு  செய்து இந்த அறிவினை விரித்துக்கொள்வோம்:

கெடு> கேடு > கே.
(சு விகுதி இடைநிலையாய்ப் பெறல் )

கேசரம்:
 
கே > கேசு > கேசு + அரு + அம்> கேசரம்.

கெடுதற்கு அரியது /அரியவை.  இவையாவன: பூந்தாது,  குங்குமப்பூ, மயிர் (உதிர்ந்தாலும் வாடிப்போகாமை ), பொன் (துருப்பிடிக்காமை),  மாதுளை,(எளிதிற் கெடாதது ) . வண்டு;(மலரோடு ஒப்பிட வண்டு வாடாதது),  மகிழமரம். (இனிய மணமுடைமை, கேடின்மை).

எனவே  கேசரம் என்ற சொல் அமைந்தது கேடின்மை அல்லது கெடற்கருமை விதந்து காட்ட 
.
கேசவம் என்ற சொல்:

கே >  கேசு  ( சு விகுதி )  + அவம்.

அவம் என்பது இங்கு “அற்றது “ என்ற பொருளில் வருகிறது.   அவி+அம் = அவம்.  அவி = அழி.

இதன் பொருள்:  பொன்வண்டு,  நறுமணம், நிறை கூந்தல்

இவை கேடற்றவை என்பது இச்சொல்லின் பொருண்மை.

கேடு அவிந்தது என்றால் கேடு இல்லையானது என்று
பொருள்.

கேட்டை,  கேதம்

கேட்டை:  < :  கேடு +ஐ.    கெடுதலான நட்சத்திரம் என்பது.  கெட்டவனும் ஒரு நல்லது செய்வான் எனவே கெடுதல் முற்றிலுமன்று.

கேதம் :   கெடுதல்;   சாவு.  இது கேது என்ற சொல்லின் விகுதியேற்ற நிலை.

இன்னும் சில உள்ளன.  அவை பின்னர் காண்போம்.

கருத்துகள் இல்லை: