வெள்ளி, 24 நவம்பர், 2017

பொருளிலக்கணத்தில் அகப்புறம் என்பதென்ன ?



இன்று அகப்புறம் என்பதென்ன என்று அறிந்துகொள்வோம்.

அகமென்பதும் புறமென்பதும் மறுதலையான கருத்துகள் ஆகும்.

இங்கு அகம் என்பது மனத்தில் நிகழும் உணர்வின் அடிப்படையில் காதலரிடையே நடைபெறும் ஒழுக்கமாகும். புறமென்பது இவ்வாறு மனவுணர்ச்சியில் அடிப்படையில் எழாமல் உலகியலில் நடைபெறும் ஒழுக்கம் அல்லது நெறி. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:  போர்.

ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தினர் ஒருதலைக் காமம்,  (கைக்கிளை ) எல்லைமீறிய காமம் (பெருந்திணை)  ஆகியவற்றை  அகவொழுக்கத்தின் வழு அல்லது குற்றமானவை என்று ஒதுக்கி அவற்றுக்கும் இலக்கணம் கூறினார்கள் கடியத் தக்கவற்றுக்கும் ஏற்றுக்கொண்டு விளக்கம் கூறினமையால் அவை அகவொழுக்கத்தின் வழுவமைதி ஆயின

தொல்காப்பியத்துக்கும் வெகுகாலம் கழித்து பன்னிரு படலம் என்ற நூல் தோன்றிற்று இது பொருளிலக்கணம் ஆகும். இது பாதுகாக்கப்படாமல் அழிந்தது.  இதன் வழிநூலாகத் தோன்றியதே புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலாகும் இஃது ஐயனாரிதனார் என்னும்  சிறந்த ஆசிரியரால் பன்னிரு படலத்தைப் பின்பற்றி எழுந்ததென்று புலவர் கூறுவர்

தொல்காப்பியத்துக்கும் வெண்பாமாலைக்கும் உள்ள இடைக்காலத்தில் இலக்கண நெறிகளும் சிறிது மாற்றமடைந்தன. ஐயனாரிதனார் ஒருதலைக் காமத்தையும் (கைக்கிளை)  எல்லைமீறிய காமத்தையும் (பெருந்திணை) அகவொழுக்கத்தின் வழுக்களாகக் கருதாமல் அவற்றை “அகப்புறம்” என்று கோவைப்படுத்தினார்.

இது பட்டியற்படுத்துதலில் ஏற்பட்ட வேறுபாடேயன்றி இலக்கண உள்ளீடுகளில் விளைந்த மாற்றமன்று என்று நாம் கருதுதல் வேண்டும்.
மரபுகளைப் போற்றிச் செல்லும் நெறியில் விகற்பங்களையும் உள்வாங்கி இலக்கணமுரைத்தல் இதுவாகும்.

தமிழ்ப் பொருளிலக்கணக் கூறுகள் சமயத்துறை சாராதவை. இங்கனம் பொதுநிலையாக இலக்கணம் வகுத்த பெருமை தமிழனுடையது ஆகும். இத்தகைய நெறிகளை மிகப்பழங்காலத்திலேயே தமிழர் பின்பற்றியது போற்றற்குரியது என அறிக.

தொல்காப்பியத்துக்கும் பிற்கால இலக்கணங்களுக்கும் உள்ள நெறிகளை அறிந்து மகிழ்க.

.

கருத்துகள் இல்லை: