வியாழன், 16 நவம்பர், 2017

உகரத்திலிருந்து துகர வருக்கச் சொற்கள் திரிந்தமை. சில.


வெகுநாடகளாக நாம் சுட்ட்டிச் சொற்களை அணுகாமல் பிறவற்றைப் பேசிக் கொண்டிருந்துவிட்டோம்.  ஆகையால் இன்று உகரச் சுட்டிலிருந்து   தகர வருக்கங்களில் சென்று தோற்றமளித்துத் தமிழை வளப்படுத்திவரும் சொற்கள் சிலவற்றை ஆராய்வோம்.

ஆராய்வது:   உ > த -  தோ வரை.  இவை எல்லாவற்றையும் மூழ்கி முத்தெடுப்பது விரிவின் காரணமாய் மிக்க உழைப்பையும் சலிப்பையும் தருமாதலின்,  ஒரு சில காண்போம். பிற பின்னர்.

இவ் வட்டத்திலுள்ள முதன்மையான வினைச்சொற்கள்:

துதைதல். ( நெருங்குதல், படிதல், மிகுதல் இன்னும் சில).
துதைத்தல் ( நெருக்குதல்).
துத்தல்  (  நுகர்தல்)
துப்புதல் 

ஆகியன உ என்ற சுட்டடி முன்னிருப்பதைக் குறிக்கும்.

இது து என்று திரியும்.

ஏன் திரிகிறது?  ஆதாரம் ஏதும் இருக்கிறதா? என்று கேளுங்கள்.  உங்களுக்கு கிடைத்த தமிழ் நூல்கள் சிலவே. பெரும்பாலானவை  எரிக்கப்பட்டன;  ஆற்றுக்குள் வீசப்பட்டன;  பூச்சிகளால் அரிக்கப்பட்டன. இன்னும் ஒப்பிக்கமுடியாத பலவகைகளில் அழிந்தன.  ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகும்போது அல்லது ஓடும்போது தூக்கிக்கொண்டு போக ஆள் இல்லை, வாகனம் இல்லை! படை எடுப்புகளின்போது பல அழிக்கப்பட்டு இருக்கலாம். ஆரியர் வந்து அழித்தனர் என்று கூறப்படுவதுண்டு. அப்படிப் பெயருடன் யாரும் வரவில்லை. ஆரியர் இடப்பெயர்வுத் தெரிவியலானது Aryan Invasion and Migration Theories. மேனாட்டார் சொன்ன கதை. தமிழர்களுக்குள்ளேயே கவனிப்பின்றி அழிந்தவை அனந்தம்.  குகைவாழ் தொல்காலத்தில் திரிந்தவற்றுக்கு ஆதாரம் இல்லை. அறிவொன்றே கொண்டு அறியவேண்டும்.

ஒரு குகையிலிருந்தவன் உ எனப் புகல, இன்னொரு குகையன் து என்றான். இவர்கள் இப்படி வேறுபாடாக உச்சரித்ததே, மொழியில் சொற்கள் பெருகியமைக்குக் காரணம். அதுவும் நல்லதே’

உ > உது > துது.

துதிக்கை.  (முன் நீட்டிக்கொண்டிருக்கும் கை).

சொல்லமைப்பில் யானைக்கு இடமில்லை. அதை வழக்கில் அறியவேண்டும். இதற்குமேல் வழக்காற்றை ஆய்ந்துகாணல் உங்கள் பங்கு.
சொல்லின் கதை அப்படித்தான் இருக்கும்.

துதித்தல்

துதிப்பவன் முன் காலத்திலும் இன்றும் கூட ஒரு சாமிசிலையோ மனிதனோ இருக்குமிடத்துக்கு முன் சென்று  விழுந்து (சாய்ந்து, முன்பக்கமாகச் சாய்ந்து ) கும்பிட்டான். முன் செல்லுதலே இதில் சொல்லமைப்பில் கருத்தில் கொள்ளப்பட்டது.   ஆகவே உது > துது > துதி > துதித்தல் ஆனது.

மரத்தடிச் சாமியார் இதை ஸ்துதித்தல் என்பான். எல்லாம் அதே.  முன் ஒரு ஸ் போட்டுவிட்டால் வேறு ஆகிவிடுமோ?

துத்தம்

உ >  உது > துது > துத்தம் ( துது+ அம்).  தகரம் இரட்டித்தது.

துத்தம்  என்றால்:  கண்ணுக்கு இடும் மருந்து;  தீ, நாய், இசை,  நாணல், நீர்முள்ளி, பால்,  வீணை நரம்பு, வயிறு, துரிசு.

சில அகரவரிசைகள் வேறுபடுகின்றன.

இவற்றுள் சிலவற்றில் உள்ள முன்மைக் கருத்தைப் பார்ப்போம்.

நாய்  -   பெரும்பாலும் வீட்டின் முன் இருப்பது, திரிவது அல்லது கட்டிவைக்கப்படுவது.  அல்லது காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற வகையில் முதன்மை பெறுவது.

நாணல் -  தொழுகை மந்திரங்கள் சொல்லும்போது முன்மையான இடம்பெறுவது. குசை, தருப்பை

வயிறு  -  மனிதனின் உடலில் முன்னிருப்பது. சிலருக்கு வயிறே முன் செல்கிறது. (தொப்பை).

சென்னா என்னும் சீமையகத்தி அல்லது வண்டுக்கொல்லி. சில முன்னணியான மருத்துவ குணங்களைக் கொண்டது என்கிறார்கள்.

தீ -  இது ஐம்பூதங்களில் ஒன்று.  இந்து மதத்தில் முன்வரிசை பெறும் பொருளாகும். திருமணத்திலும் தீவலம் வருதல் இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐம்பூதங்களில் சிலவற்றைக் கையாள்வது எளிது.  நீர், காற்று ( வாயால் திருநீற்றை பற்றனின் தலையில் ஊதிவிடலாம்,  சில சாமியார்கள் செய்வர்), மண் (கையால் எடுக்கத்தக்கது,  நிலம் முழுவதையும் எடுக்க இயலாவிட்டாலும்),  தீ ந ன்  கு பயன்படுவது. காயத்தில்  ( கோள்கள் காயுமிடம். ஆகாயம் ஆனது பின்னர் ) பறக்கலாம், வானூர்தி கொண்டு.  விண்ணு என்பது விஷ்ணு வாகி தொழுதெய்வமாய் விளங்குவதாம்.

பால் -  முதன்மையான பொருள்.

யாழில் நரம்பு  -  நரம்பு இல்லாமல் வாசிக்க முடிவதில்லை.  ஆகவே யாழில் முதற்பொருளாகிறது.

இசை  -   இறைவனும் விரும்புவதாகச் சொல்லப்படும் முன்மைக் கலை. ஏழிசைகளில் ஒன்று. 

மேல்பூத்தல்  -  நாகம் அல்லது செம்பு முதலிய உலோகங்களில் மேலே பூத்து வருவது. இவற்றிலெழும் ஒருவகைக் களிம்பு.

இங்கனம் முன்மைக்  கருத்தை,   சொல்லை ஆய்ந்து உணரலாம்.

இவற்றைச் சொல்லமைப்பிலே கண்டு இன்புறலாம். (இவற்றுக்கு இலக்கியச் சான்றுகள் தருவது வீண்வேலை. நூல்களில் இருந்தமையால்தான் இவை நிகண்டுகளில் உள்ளன. அப்படித் தரப்பட்டால், எழுதுகிறவன் இலக்கியம் படித்தவன் என்று காட்டவே அது உதவலாம். )

  
துய்த்தல்  உ> து > துய்.

ஒரு பொருளைப்  (பழம்) பலர் பார்த்திருக்கலாம்.  அதில் ஒருவன் முன்சென்று எடுத்து உண்கிறான். அவனே அதைத் துய்ப்பவன். ஆகவே முற்செலவுக் கருத்து தெளிவாய்த் தெரிகிறது.  பொருள்களை நுகர்ந்தே மனிதன் வாழ்க்கை நடத்துகிறான்.  மனிதன் முக்கிய வேலை, நுகர்வதுதான். நுகர்தலிலிருந்து ஒதுங்கவேண்டிய சாமியார்களைப் பற்றி இங்கு நாம் பேசவில்லை.  மனிதக் குமுகங்கள் பண்பட்ட காலை நுகர்ச்சிக்குக் கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்கின்றன. நுகர்ச்சி அல்லது துய்த்தலை ஆய்கின்ற வேளை பின்வந்த கருத்துக்களை எடுத்துக்கொள்வது மடமை.

து > துத்தல்  உ >து.

இது துய் என்பதன் கடைக்குறையாகவும்,  துய் என்பது து என்பதன் கடைமிகையாகவும் கருதத்தக்கது. முற்செலவுக்கருத்து தெளிவாய் உள்ளது.

இன்னோர் இடுகையில் பின்னர் தொடர்வோம். 

பிற்பார்வை செய்யப்படும்

  


கருத்துகள் இல்லை: