வெள்ளி, 10 நவம்பர், 2017

ஐதராபாத்துப் பிச்சைக்காரர்கள் இடம்பெயர்வு



அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளார் இவாங்கா 
ஐதராபாத் வருகை முன்னிட்டு அந்நகரம் தூய்மைப்
படுத்தப்படுகிறது.  முதல் வேலையாக பிச்சைக்காரர்கள் 
அப்புறப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் பலர் பல 
தந்திரங்கள் செய்து பிச்சையைத் தொழிலாக நடத்துவோர்.
இதுபற்றிய கவிதை இங்கே.  படித்து இன்புறுவீர்.

இருமூன்றா  யிரத்தினையும் மிக்கு நின்ற

இரந்துதொழில் புரிந்தோர்-ஐ தரபாத்  தன்னில்,

பெறும்ஈண்டு  புதுவாழ்வு காணீர் மக்காள்!

பெயர்ந்தவர்கள் அரசுதரும் சிறைக்கூ டத்தில்

நறுமாண்ட வசதிகளை நுகர்ந்து வைகும்

நன்னிலையை அடைந்திடுவர் நலமே சூழ.

தெருமீண்டு தூய்மை  நிலை தேரும், இன்றே

தென்னாட்டில் ஓர்புதுமை இந்நாள் மின்னும். 1



அமெரிக்க நல்லதிபர் அருமைச் செல்வி

அங்கவையில் தோன்றியுரை ஆற்றச் செல்வார்.

சுமையாக நகரத்தில் திரிந்து சுற்றும்

சுள்ளகற்றி நல்ல நிலை உய்த்துக் கொள்ள,

தமையிருத்தும் காவலர்கள் தரணி போற்றும்!

தாமிரந்தோர் வாழ்வுறவே தடுத்தாட் கொண்ட,

இமைபொருத்தி விழிகாக்கும் அரசை நாமும்

இனி இங்கு பாராட்டல், இனிதே யாமே.           2

உரை:
 பாடல் 1:
மிக்கு - மிகுந்து.
ஈண்டு - மிகுந்த.
நறு மாண்ட - நல்ல மாண்புடைய.
வைகும் -  தங்கும்.
தெரு மீண்டு - வீதிகள் பிச்சைக்காரர்கள் பிடியிலிருந்து
 மீட்சி பெற்று;
தேரும் - தேர்ச்சி பெறும்.

  பாடல் 2:
அங்கவையில் -  அங்கு அவையில்.
சுள் - சிறுமை, இழிவு.
உய்த்துக் கொள்ள - ஏற்படுத்திக் கொள்ள
இருத்தும் - இருக்கச் செய்யும்.    நிலை  நிறுத்தும்.
காவலர்கள் - போலீஸ்
இரந்தோர் - பிச்சை எடுத்தவர்கள்



கருத்துகள் இல்லை: