செவ்வாய், 14 நவம்பர், 2017

மணம், மணி, அம்மணம், அம்மணி, . மண்ணுதல் சொல்லமைப்பும் பொருளும்

உலகில் நல்ல அலங்காரம் செய்துகொண்டு தூய்மையாகத் தென்படுவோருக்கே பெரிதும் மதிப்பு உள்ளதென்றால் அது மிகையாகாது.  நன் கு படித்தவருக்கு அல்லது பதவியில் உள்ளவருக்குப் பெருமதிப்பு உள்ளது.  அதுபோல் வாய் கண் மூக்கு செவி உடல் என அனைத்தும் போற்றத்தக்க முறையில் தூய்மையாய் வைத்திருப்பவரை யாரும் மகிழ்வுடன் வரவேற்பர். 

அழகுடன் திகழ இன்று நமக்குக் கிடைக்கும் துணைக்கருவிப் பொருள்கள் மிகப்பலவாம். பணம் செலவழித்து அவற்றை வாங்கி அழகுடன் விளங்குகின்றோம். காட்டிலும் மேட்டிலும் காலங்கழித்த முந்தியல் மாந்தனுக்கு இவையெல்லாம் கிட்டவில்லை.  சவர்க்காரம் என்னும் சோப்பும்கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில், சீயக்காய்த் தூள் என்னும் சிகைக்காய்த் தூளும்கூட உண்டாக்கப்படாத நிலையில்,  அவன் தண்ணீரில் வெறுமனே குளிக்கவேண்டியிருந்தது. வியர்வை விளைத்த நாற்றம் நீங்க அவன் என்ன செய்தான்?

கொஞ்சம் நன்மணம் உள்ள மண்ணை உடலில் பூசிக்கொண்டான். அப்புறம் குளத்திலோ ஆற்றிலோ வேறு நீர்நிலைகளிலோ மூழ்கி எழுந்தான். பேச்சு வழக்கில் முழுகாமை இருத்தல், தலைமுழுகுதல் முதலிய பல குறிப்புகளும் மனிதன் எப்படிக் குளித்தான் என்பதை விளக்கும். முழுகுதல் என்பதும் இடம் நோக்கி, குளித்தலை உணர்த்தும்.  

அவன் மண் பூசிக் குளித்தமையால் “ மண்ணுதல் “ என்ற சொல்லுக்குக் குளித்தல் என்ற பொருள் உண்டாயிற்று. அரசன் குளிக்கும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுக்கு மண்ணு மங்கலம் என்று பிற்காலத்தில் குறிக்கப்பட்டது.
கழுவி எடுக்கப்பட்ட ஒளிக்கல்லுக்கு “ மணி “  என்ற பெயர் வந்தது.
குளித்தபின்னர்தான் நன்மணம் வந்தது.  ஆகவே மண் > மண > மணத்தல் என்ற சொல் வாசனையையும் ஆடவர் பெண்டிர் இணைப்பையும் குறித்தது.

பெருமாட்டிகளெல்லாம் நன்கு குளித்தவர்களே,  அவர்கள் “ அம்+ மணி “ எனப்பட்டனர்.   அம் = அழகு; மணி = குளித்த பெண்.

குளிக்கும்போது ஆடை களைந்தே பலரும் குளிப்பர். தூய்மை பெற  அதுவே வழியாய் இருந்தது. (புதிய) ஆடையை அவர்கள் மீண்டும் அணியுமுன் அவர்கள் அழகாகக் குளித்தெழுந்த ஆடையில்லா நிலையில் இருந்தனர்.  அது அம் மணம் ஆயிற்று. அம் = அழகு. மணம் = உடல் கழுவிய நிலை.   அதாவது ஆடை அணியுமுன் உள்ளதான நிலை.

மண் + அம் = மணம். குளித்தபின் உள்ள நிலை. மண்ணு + அம் = மணம்.

இதையெல்லாம் அணுகி ஆய்கின்றவேளை தமிழின் பழமை புரிகிறது.

கருத்துகள் இல்லை: