வியாழன், 2 மார்ச், 2017

வார்த்தை என்ற சொல் தமிழன்று!!

வார்த்தை என்ற சொல் தமிழன்று என்பார்கள். சொல், கிளவி முதலியவை தனித்தமிழ்ச் சொற்கள்.  ஆகவே வார்த்தையை ஆய்வு
செய்வோம்..

கோத்தல் என்ற சொல் உங்கட்குத் தெரிந்ததே. ஊசியில் நூல் கோத்தல்
என்பார்கள். இதைச் சிலர்  கோர்த்தல்,  கோர்வை என்று நடுவில் ஒரு
ரகர ஒற்றினை செருகிப் பேசுவதுண்டு. இது தவறு என்று தமிழாசிரியன்மார் கண்டிப்பதுண்டு.  ஆனால் நாம் கவனிக்க வேண்டுவது என்னவென்றால் இதுபோன்ற சொற்களில் ஒரு ரகர ஒற்று எழுவது இயற்கை என்பதே. புலவர் ஏற்பின் அது சரி; ஏலாவிட்டால் தவறு என்பதே மொழிநிலை.

இப்போது சொல்லைக் காண்போம்.

வாய் > வா > வார் > வார்த்தை.

வாயினின்றும் வெளிப்படுவதே வார்த்தை.  வா(ய்) என்பதில் ஒரு
ரகர ஒற்று எழுந்தது. கோ > கோர்வை போல.  திரிபுகள் ஒரே மாதிரியானவை என்றாலும், புலவர் சிலதிரிபுகளை ஏற்பர். சிலவற்றை
ஏற்பதில்லை.

வாய் என்பது வழி என்றும் பொருள்தரும். இந்தப்பொருளில் அது
மேலைமொழிகளிலும் ஏறியுள்ளது.  வாய்   (Tamil ) ,  ‍வியா   via (Latin)   வே.(way - English).  வாயைச் சில சிற்றூரார் வே என்பதும் நீங்கள் அறிந்தது. இங்ஙனம்
வாய், வார்த்தை பல மொழிகளில் இடம்பெற்றுவிட்டது. மலாயில்
"வார்த்த பெரித்த" என்றால் செய்தி அறிக்கை. ஆங்கிலத்தில் வர்டு  word
என்பதும் காண்க.

தமிழனின்  வாய்ச்சொல்  (வார்த்தை )   எங்கும் பரவியுள்ளது.  மகிழ்ச்சிதானே.!






கருத்துகள் இல்லை: