செவ்வாய், 28 மார்ச், 2017

கனகசபைப் புலவர் 1826 முதல் 1873 வரை

கனகசபைப் புலவர் என்பவர் 1826 முதல் 1873 வரை யாழ்ப்பாணம்
அளவெட்டி என்னும் ஊரிற் பிறந்து வாழ்ந்தவர். வட்டுக்கோட்டை சாத்திரக் கலாசாலை என்னும் கல்விச்சாலையில் கற்றுத் தேறி, பின்னர் ஆங்கில வைத்தியமும் ஆயுர்வேத வைத்தியமும் கற்றவர். இவரைப் பற்றி
நாம் மயிலையார் ஆராய்ச்சியிலிருந்து அறிந்துகொள்கிறோம்.

இவர் அழகர்சாமி மடல் என்னும் ஒரு சிறு பாட்டுநூல் ( பிரபந்தம்)
பாடி அதை வேலூர் சென்று பாட்டுடைத் தலைவர் முன்னிலையிலே
அரங்கேற்றினார். அடுத்து 1753  விருத்தப்பாக்களைக் கொண்ட திருவாக்குப் புராணம் என்பதையும் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு தமிழ்நிகண்டையும் எழுதிமுடித்தார்.

இந்த நூல்கள் எவையும் கிடைக்கவில்லை. இராசபக்சே நடத்திய‌
இனவழிப்புப் போரின் முன்பே எரியூட்டிச் சாம்பலாக்கப்பட்ட யாழ்ப்பாணத்
தமிழ் நூல் நிலையத்தில் இவை இருந்திருக்கலாம். நூல்கள் அனைத்தும்
உருவின்றி மறைந்தன என்பதால் இவை இழந்தவை இழந்தவைதாம்.
தனிப்படிகளை யாரேனும் எங்கேனும் கண்டுபிடித்துத் தமிழார்வத்தால்
பதிப்பித்தால், அப்போது நாம் ஆகூழினர் (அதிருஷ்டசாலிகள்) ஆவோம்.
அந்தநாளும் வந்திடுமோ?

இவர் சென்னைக்குச் சென்று வீராசாமி செட்டியார் என்ற புலவருடன்
ஓர் அகரவரிசையைத் தயாரிக்க உதவினார் என்பர். சென்னையும்
பல இயற்கை இன்னல்களுக்கும் வெள்ளத்துக்கும் உட்பட்ட நகரமே.
அங்குக் கிடைப்பதும் முயற்கொம்பே.

என்றாலும் நூல்நிலையங்களில் தப்பித்தவறி இவற்றுள் ஏதாவது
கிட்டுமோ? மக்களை எட்டுமோ?

சாமிநாத ஐயரைப்போல் பழ நூல்கள் காப்போரே தமிழ்த் தாயின்
தவப்புதல்வர் ஆவர்.


கருத்துகள் இல்லை: