ஞாயிறு, 19 மார்ச், 2017

"சல்லாப மயிலே "

சல்லாபித்தல் என்ற சொல்லை ஆய்ந்ததில், அது உண்மையில் "சிறுமை ஆக்குதல்"  என்றே பொருள்தருகிறது.  அது தன் முந்துநிலையில் "சில் ஆ(கு)வித்தல்"  என்றே இருந்தது . மொழியானது பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கடந்துவந்துள்ளது. இவற்றுள் ஒரு கட்டத்தில்
அது "சல் ஆ(கு)வித்தல்"  என்றாகி, சல்லாவித்தல் என்று கூட்டுச்சொல்
ஆகி, வகரம் வழக்கம்போல் பகரமாகி, சல்லாபித்தல் என்று என்று திரிந்தமைந்தது. இப்படி மாறி அஃது ஒரு சொன்னீர்மைப் பட்டது நாம்
மகிழற்குரியதே ஆகுமென்க.

அறியாப் பெண்ணிடம் சென்று பல சில்லறை விளையாட்டுகள் செய்து அவளை மயக்கி,  ஆண்மகன்  அவள் உடலை மேவி, அவளுடன் இணைந்து அவளைச் சிறுமைப் படுத்திவிடுகிறான். அவளும் தன் தூய்மை துறந்து அவனிடத்துச் சிறுமைப் பட்டுவிடுகிறாள். இதைத்தான் "சல்லாபம்" என்ற சொல் தெளிவாகக் காட்டுகிறது.

குமுகாயத்தின் பெருமக்கள் தங்கள் வெறுப்பைக் காட்டப் புனைந்த‌
சொல்லே "சல்லாகுவித்தல்"  "சல்லாவித்தல்"  "சல்லாபித்தல்"
என்ற சொல்லானது.  இறுதி வடிவம்: சல்லாவித்தல், சல்லாபம். சல்லிக்கல் என்பதும்  உடைந்த சில்லுக் கல் என்று பொருள்படுவதால்
இத்தகு நிலை சல்லிநிலைதான் அன்றோ?

இதையே கண்ணபிரான் காதலியிடத்துச் சல்லாபம் செய்து மகிழ்வித்ததாகக் கவிஞன் பாடுகையில் :  சல்லாபம் என்ற சொல்
உயர்நிலை பெற்றுவிடுகிறது. இறைவன்பால் பத்தை நுகர்ந்த ஆன்ம‌
இன்பமாகிவிடுகின்றது. "தோழி, வந்தருள் என்று அவனை -  நீல மணி வண்ணனை,   வேய்ங்குழற் பண்ணனைக்  கண்டு   வருந்தி    அழைப்பாய், கொஞ்சம் சல்லாபம் செய்து  திரும்பலாம் என்பாய்"
என்கிறான் கவிஞன் தன்பாட்டினில். இப்படிச் சிறுமையாக்கம் பெருமிதம் தருவதாகவும் வரும். "சல்லாப மயிலே "   என்பதும்  அது .

நாளடைவில் சிறுமை மறக்கப்பட்டது என்பது தெளிவு. பயன்பாடு காரணம் ஆகிறது .

கருத்துகள் இல்லை: