புதன், 5 டிசம்பர், 2018

மானிடன் மனிதனின் இடத்தில் இருப்போன் ஆனால் மனிதனல்லன்?

இவன் மனிதன்;  அவன் மானிடன்.

என்ன வேறுபாடு?

எம்மைப் பொறுத்த வரை, இவற்றுள் ஒரு வேறுபாடு இல்லையென்றே தோன்றுகிறது.

மன்+ இது + அன்=  மனிதன்;    மன் > மான் > மான்+ இடு+ அன், அல்லது மான்+ இடன்:  மானிடன்!

மனிதனின் இடத்தில் உள்ளவன் மானிடன் என்று வேறுசொல்லால் குறிக்கப்பெற்றாலும் அவனும் மனிதனே.

தலையமைச்சன்   இடத்தில் உள்ளவனும் தலையமைச்சன் தானே?  சில வேளைகளில் தலையமைச்சன் விடுப்பில் போனதால் இவன் அவனிடத்தில் தற்காலிகப் பணிபுரிகிறானோ?  அப்படியானால் தற்காலிக மனிதர்கள் என்று ஒரு வகையுமுண்டோ?

மனிதன் என்றால் ஓர் ஆளாய் இருப்பவன்; அதாவது விலங்காக இல்லாமல்.
மானிடனும் அவ்வாறானவனே.  இடத்தில் இருப்பவன் என்று விளக்கினாலும் அவனும் மனிதனே.  தொடக்கத்தில் இவை ஏன் இப்படி வேறுபாடாய் அமைந்தன என்று தெரியவில்லை.  இச்சொல் வடிவ வேறுபாடுகள் இவையன்றி பொருண்மையிலோர் அகல்வு இல்லை.

முற்பிறப்பில் ஒரு கழுதையாய் இருந்து இப்போது மனிதனின் இடத்தில் வைக்கப்பட்டதனால் " மானிடன்" என்று கூறுவது சிறக்கவில்லை.

சிலர் மனிதன் என்ற சொல்லை விரும்பவில்லை. சொல்லில் இடைநிலையாக இது என்ற அஃறிணைச் சொல் வருகிறதே என்றால், இங்கு அது வெறும் சொல்லாக்க இடைநிலையே அன்றித் திணை ஏதும் குறிக்கவில்லை.  சொல்லாக்கத்தில் வெறும்  நிரப்பொலியாகவே இது என்பது தோன்றுகிறது.  சொல்லுக்குள் கிடக்கும் இடைநிலைக்குத் திணை, பால், எண், இடம், வேற்றுமை என்று ஒன்றுமில்லை. சொல்லுக்கு உருவம்தர வெறும் பொம்மைப் பஞ்சடைப்பே  ஆகும். சிறந்த பொருள் காணப்படுமாயின் ஓர் இடைநிலைக்கும் பொருள்கூறுதலில் கடிவரை இலது என்று கொள்க. வந்துழிக் காண்க.

மனிதனை மனுஷ்ய, மனுஷா என்றெல்லாம் ஒலித்தால் அது ஓர் இன்னொலியாய்த் தோன்றவே, அவ்வாறு மாற்றினர் என்று தெரிகிறது.
இஃது வெறும் ஒலிமாற்று எனலாம். அயலொலி புகுத்தல்.


நீங்கள் இதையும் விரும்பக் கூடும்:

https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_4.html
அனுமான் என்ற சொல்.  இதில் மாந்தன் ( மான்+து+ அன்) என்ற சொல்லின்
முன்பகுதி  கடைத்தரவாக இருத்தல் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_23.html
 இங்கு மந்தி  ( மன் + தி )  என்னும் சொல் விளக்கப்பட்டுள்ளது.

மந்தி :  மன்+ தி =  மன்றி என்று அமையாது.  அந்தப் புணரியல் சொல்லாக்கத்துள் பின்பற்றப்படவில்லை.  அது முழுச் சொற்கள் புணர்ச்சிக்கான கட்டளை ஆகும்.   இச்சொல்லில் மன் என்பதை நிலைமொழி என்று கூறிக்கொண்டாலும் தி என்பது வருமொழி ஆகாது என்பதுணர்ந்துகொள்க.  தி என்பது பெரிதும் தனிப்பொருள் இல்லா விகுதி. தனிச்சொல்லானாலும் தன் பொருளிழந்து வெறும் ஒட்டு ஆகிவிட்டது என்றால் அது வருமொழியன்று.
இரு முழுச்சொற்களெனினும் அவை தனித்தனிப் பொருள் குறிக்காமல் மூன்றாவது ஒரு பொருள் குறித்தால் அது புதிய சொல்லாக்கமே.  எடுத்துக்காட்டு:

சொம் + தன் + திறம் > சொதந்திரம் > ( திரிபு) சுதந்திரம்  :  ஒரு நாடு தன்னைத் தான் ஆண்டுகொள்வதென்பது புதிய பொருள்.
சொம் என்பது சொத்து என்பதன் அடிச்சொல்லுமாம்.
திறம் என்பது திரம் என்று திரிந்து வெறும் பின்னொட்டு ஆனது.

குறிப்பு:

சொம் + தம் =  சொந்தம்.  ( மெலித்தல் விகாரம் )
சொம் + து =  சொத்து  (  வலித்தல் விகாரம் )

கருத்துகள் இல்லை: