சனி, 1 டிசம்பர், 2018

ளகர ணகரத் திரிபும் அடிச்சொற்களும்.

ளகர ஒற்றில்  ("ள்") முடிந்த சொற்கள் சில "ண"  (ணகர ஒற்றாக) மாறுவதைக் கண்டுகொள்க.   உதாரணம்: 1

ஆள் >   ஆண்.

(  இந்த  "ஆள் " என்னும் சொல் விகுதியாகப் பெண்களுக்கு முதலில் பயன்பட்டது.  எ-டு:  வந்தாள்( வினைமுற்றில்).    கண்ணாள் ( பெயர்ச்சொல் நீட்சி ).

ஆள் என்பதிலிருந்து திரிந்த  ஆண் என்ற சொல் பின் ஆடவருக்கு  உரிய ஒரு
பெயர்ச்சொல் ஆனது.

ஆள் என்பதை நோக்க ஆண் என்பது பிந்துவடிவம் ஆதலின்,  பெண்கள் மேலாண்மை  முன் நடைபெற்றது.  பின்னரே  அது திரிந்து ஆண்களுக்கு உரிய பொதுப்பெயர் ஆனது.  ஆணாட்சி ஏற்பட்டது.

ளகர ணகரத் திரிபுகள்:

வள் > வண்.

துணிகள் புதியனவாய் இருக்கையில் வளமாய் இருக்கும்.  உறுதியுடையதாயும் நல்ல நிறமுடையதாகவும் இருப்பதுடன் கண்டோர் புதியவை என்னும்படியாக இருக்கும்.  துணிகள் பயன்படுத்தப் பட்டபின் பழையனவாய்த் தெரியுமாதலின், அவற்றினை மீண்டும் வளப்படுத்தவேண்டும்.இதைச் செய்வோன் வண்ணான் என்னும் சலவைத் தொழிலாளி.  சலசல என்று ஓடும் ஓடை ---ஆற்று நீருள்ள இடங்களில் அவன் துணிகளைத் துவைத்து  (தோய்த்து )  வளப்படுத்தினான் -    வண்ணப்படுத்தினான்.

வள் > வளம்.   வள் > வண்.   வண் > வண்ணம்.

வண் + ஆன் =  வண்ணான்.   வண்ணமூட்டுவோன்.

வண்ணான் என்பதில் சாதி எதுவுமில்லை.  வண்ணம் தந்தவன் வண்ணான். சொல்லுக்குள் நுழைந்து பார்த்தால் சாதி இருக்காது.  சாதி என்பது சுற்றுச்சார்புகளால் தோன்றியது ஆகும். அந்தச் சுற்றுச்சார்பின்  மேடையில் அரசனுமிருந்தான்.

சலசல நீரில் இவன் (வண்ணான் )  செயல்பட்டதால்:  " சலவை";  இதைச் செய்தோன் சலவைத் தொழிலன்.


தூய்மை, உறுதி, பளபளப்பு இவை காணக்கிடைக்கவேண்டும். துணிகளை மீண்டும் இவன் வண்ணம் பெறுவிக்கவேண்டும்.

யாம் இங்கு கூறவந்ததை மறத்தலாகாது.   வள் என்ற ளகர ஒற்றிறுதி ணகர ஒற்றிறுதியானது.   ஆள் > ஆண் என்பதுபோல.

ஒன்றை உட்கொள்ளுதலைக் குறிக்க ஏற்பட்ட சொல்  உண் என்பது.  சோற்றை வாய்வழி உட்கொள்வது இயல்பு. இப்போது சில நோயாளிமாருக்குக் குழாய்மூலம் வயிற்றுக்குள் மென்னீருணவு செலுத்தப்படுகிறது, எப்படியாயினும் :

உள் > உண் என்று ளகர ஒற்றுச்சொல் திரிந்தமைந்து  தொடர்புடைய மற்றொரு செயலைக் குறித்தது. வேறுபாடு சிறிது.   உள் என்ற சொல்லாலும் உண் என்பதைக் குறிக்கலாமேனும்  கொள் என்ற துணைவினை தேவைப்படும்.

உள் > உண்.

பள் > பண்.  ( பள்ளு பாடுவோமே).

விள் என்பது வெளிப்படுதல் குறிக்கும் சொல்.  விள்ளுதல்: வாய்ச்சொல் வெளிப்பாடு.   விள் > விண்.  இறைவனிலிருந்து அல்லது  இயற்கை ஆற்றலிலிருந்து   வெளிப்பட்டது விண்.( ஆகாயம் ).

இவ்வாறெல்லாம் சொற்கள் திரிபுற வில்லையெனில் பல திராவிட மொழிகள் ஏற்படக் காரணம் யாதுமிருந்திருக்காது.

சொற்புணர்ச்சியிலும் ளகர ஒற்று ணகர ஒற்றாக மாறுவதுண்டு:

தெள் + நீர் =  தெண்ணீர்  (தெளிந்த நீர் ) .  தண் நீர் > தண்ணீர் வேறு.





அடிக்குறிப்புகள்


1.  உது + ஆர் + அண் + அம் :  உதாரணம்:    உது : சுட்டுச்சொல். பொருள்: முன் நிற்பது.    ஆர்தல்:  நிறைவு.   அண்:  அண்முதல். நெருங்குதல்.  அம் : விகுதி.
ஒரு பொருளின் முன்னிலையில்  இன்னொரு பொருள் நிறைவாகவும் நெருங்கியும் நிற்பது.   இதை அமைத்தவன் ஒரு தமிழ்ப்புலமை பெற்றவனாக இருக்கவேண்டும்.   அடிச்சொற்கள் மூன்றை அடுக்கி அமைத்துள்ளான்.

பிழை திருத்த இப்போது நேரமில்லை.
பின் செய்வோம்.

கருத்துகள் இல்லை: