புதன், 12 டிசம்பர், 2018

அரசன் என்ற சொல்

அரசன்  என்ற சொல்லினைப் பற்றிச் சிந்திப்போம்.  இன்று பல நாடுகளிலும் அரசன் என்ற சொல் பெரிதும்  வழங்கவில்லை என்றாலும் அரசு என்பது வழங்கி வருகிறது.  ஒரு நூறு  ஆண்டுகளின் முன்  அரசு என்பது பெரிதும் வழங்கவில்லை என்று தோன்றினாலும் அதற்கான ஆதாரங்கள் எமக்கு கிடைத்தில.  பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளை நோக்கினால் "அரசாங்கம் "  என்ற சொல் வழக்கில் இருந்தது தெரிகிறது.  "அரசாங்கத்துக்  கோழிமுட்டை அம்மிக் கல்லை உடைக்கும் " என்பது தமிழ்ப் பழமொழிகளில் ஒன்றாகும்.

அரசு அல்லது அரசாங்கம் என்பதென்ன?  அதன் வரையறவு என்ன? என்பதை பல அறிஞர்கள் ஆய்ந்துள்ளனர்.  இவர்களில் லெனின் முதல் செயின்ட் தாமஸ் அக்குவினாஸ் வரை அறியப் படுகின்றனர். பிறப்பினால் பட்டம் சூட்டிக் கொண்டு நாட்டை ஆள்பவன் அரசன் என்று நாம் குறித்துக் கொள்ளலாம். நம் பயன்பாட்டுக்கு இது போதுமானது ஆகும்.

அரசன் இன்றியோ இருந்தோ  ஆட்சிக் குழுவினால் ஆளுதல் நடைபெறுமாயின்  அது அரசு என்னலாம் .

அரசு என்ற சொல்லுக்கு வருவோம்.

அரட்டு என்ற சொல்  தமிழ்ச் சொல். அது ஒலி எழுப்பி அச்சுறுத்தல்  என்ற \பொருளில்  இன்றும் வழங்குவதாகும் .  ஒரு பத்துப் பேரை வைத்து இயக்குபவன் வலிமை உடையவனாக இருக்க வேண்டும். அவன் பலமாக எதையும் அவர்கள் முன் சொல்வோனாக இருக்க வேண்டும். கத்தி அதட்டுதல்
தேவைப்படும் ஓர் அமைப்பெனல் தெளிவு.  பலர் அச்சத்தின் காரணமாகப்  கீழ்ப்படிதல் உண்மை.  அத - அர என்பன தொடர்புடைய சொற்கள்.

கட்டளை இடும் வலிமை உடையவனே அரசன்.  அவன்றன்  அதிகாரம் நிலைநாட்டப்பெற்ற பின்புதான் இயல்பாகக் கீழ்ப்படிதல் பின்பற்றுதல் முதலியவை தொடங்கும்,  நடைபெறும்.  அர என்ற அடிச்சொல் முன்மை வாய்ந்த சொல் ஆகும்.

அர > அரசு.   இதில் சு என்பது விகுதி.  இதுபோல் சு விகுதி பெற்ற சொற்கள் பல. எடுத்துக்காட்டாக ஒன்று:  பரி > பரிசு.  பரிந்து வழங்குவது பரிசு.   பரிதலுக்குப் பின் காரணங்கள் இருக்கலாம்.  அவை வேறு.

இப்போது அர என்ற அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.



 

கருத்துகள் இல்லை: