வியாழன், 13 டிசம்பர், 2018

விடமும் விரதமும்

சில சொற்களின் அமைப்பை  நாம் மறத்தலாகாது.  அவற்றை ஈண்டு காண்போம்:


விடு என்பதன் அடியாகப் பிறந்ததே விடம் என்ற சொல். இதன்  அயல் திரிபு: விஷம் என்பது.  ட என்ற எழுத்துக்கு அயலில் ஷ என்பது ஈடாக நிற்கும். இதற்கான சொல்லமைப்புப் பொருள்:  நம் அன்றாட உணவில் விடத்தக்கது; அதாவது உண்ணக்கூடாதது.  இனி, பாம்பு முதலியன மனிதனின் உடலுள் விட்டு மரணம் விளைவிப்பது என்றும் பொருளாம்.

விடு > விடம்.  இதில் அம் விகுதி.

இனி விரதம் என்ற சொல்லை ஆராய்வோம்.

 இதுவும் விடு என்ற அடிச்சொல்லினின்று தோன்றியதே.  விரதமாய் இருப்போர் சில உணவுகளை விட்டு ஏற்புடையதை உண்பர்..  மாமிசம் என்பதை விட்டு மரக்கறி யுணவு உண்பது ஒரு விரதமே. சிலர் செவ்வாய் வெள்ளி ஆகிய நாட்களில் கோழி மீன் முதலியவை உண்ணார். இது வொரு விரதம் ஆகும்.  எப்போதும் சைவ உணவே உண்பது விரதம் என்று சொல்வதில்லை.  இவர்களைச் சைவ உணவினிகள் என்பர்.

விடு >  விடு + து + அம் =  விடதம். விடு என்பதிலுள்ள உகரம் நீங்கியது, ஓர் அகரம் தோன்றியது.  து என்பதில் உகரம் நீங்கியது,

விடதம் என்பதை விரதம் எனின், டகரம் ரகரமாயிற்று என்பதாம்.

வேறு சொற்களிலும் இவ்வாறு நிகழ்வதுண்டு:

மடி > மரி.
குடம்பை > குரம்பை.
அட >  அர > அரே.-  ஹரே.
சூடு> சூடியன் > சூரியன். சூடு தரும் ஒரு பெரிய உடு.
கொள் > கோடல் (கொள்+தல் ) > (கோரல்) > கோருதல்.  ஒன்றை கொள்ள விழைந்து கேட்பதுதான் கோருதல்.  

கொள்> கோரு  ஒ.நோ:  மாள் > மரி. குறில் நெடில் மாற்றமும் ளகர ரகரத்
திரிபும்,  கோருதல் என்பது கொள்ள விழைதல்.

பிழைத்திருத்தம் பின்,

விடை > விடையம் > விடயம் > விஷயம்.  இதன் அடிச்சொல்லும் விடு
என்பதே. விடுக்கப்பெறும் செய்தியே விஷயம்.

அறிக மகிழ்க.


கருத்துகள் இல்லை: