ஞாயிறு, 30 டிசம்பர், 2018

கள் என்ற அடியிலிருந்து சில சொற்கள்.

கள் என்ற சொல் பல பொருள் உடைய சொல்லாகும்.

ஆனால் இற்றைநாள் அகரவரிசைகள் இச்சொல்லின் எல்லாப் பொருள்களையும் தருதல் அரிது.

கள் என்ற தென்னைத் தேறல் வெள்ளை நிறமானாலும்,  கள்வன் என்பவன் இத்தேறலுக்கு உரியவன் அல்லன்.  யாரேனும் அருந்துவதுபோல் அவனும் அருந்தலாமேயன்றி   அச்சொல்லுக்குக் கள்குடிப்போன் என்ற பொருளில்லை.

கள் என்பதற்கு உள்ள அடிச்சொல் பொருள்களில் கருப்பு என்பது மிக்க முன்மைவாய்ந்தது ஆகும்.

கள் = கருப்பு.
கள்ளர் -  கருப்பு நிறமானவர்கள். இது  அறிஞர்  பண்டித நா. மு. வேங்கடசாமி நாட்டாரின் முடிபு.

கள் > காள்:  இது முதனிலை (முதலெழுத்து ) நீட்சி.

காள் > காளி:   கருப்பம்மை.
காளமேகம் :  கருமேகம்.  சூல் கொண்ட முகில்.

சூல் கொண்ட முகில் கருப்பு நிறமாதலின்  கருப்பம்மைக்குச் சூலி என்பதும்
இவ்வகையில் பொருத்தமான பெயர்.   சூலம் என்னும் ஆயுதமுடையாள் என்பது இன்னொரு பொருள்.

களர் =   கருப்பு.    கள்+ அர் =  களர்.

கள் என்பதனுடன் அர் விகுதி புணர்க்க,  கள்ளர் என்று மனிதரைக் குறிக்க இரட்டிக்கும்;  களர் என்று நிறம் மட்டும் குறிக்கும்.  இரட்டிக்காது.

களரி =  கருப்பு.

கள் என்பது கறு என்று திரியும்.    கறு > கறுத்தல்.

கறுப்பு   -  கருப்பு,  இது இருவகையாகவும் எழுதப்பெறும்.

கறு >  கறை  :  கரும்புள்ளி  அல்லது கருமை பிடித்தல்.


கள் என்ற அடியிலிருந்து சில:

கள் > கட்டு  - கட்டுதல்.   (கள்+து ).
கள் + சி :  கட்சி.  ( கட்டுக்கோப்புடன் இயங்கும் ஒரு மனிதக் கூட்டம்).
கள் > கட்டு > கட்டி:   திரட்சி ஏற்படுதல்.  ( மூளையில் கட்டி போல).
இன்னொரு உ-ம்:   கட்டித்தயிர்.  திரண்ட தயிர்.

கள் + து என்பது கண்டு என்றும் வரும். இது மெலித்தல். கட்டி என்பது வலித்தல்.

கண்டு:   நூல் கண்டு.  இது நூல் திரட்சி.

கண்டி:  திரட்சிகளை உடையது;  உருத்திராட்சம்.

உருத்திராட்சம் :  உருத் திரட்சி அம்.  இதில் அம் விகுதி.

கண்டி என்பது கட்டுருவான ஒன்று.

மரகத கண்டி :  மரகதத்தால் ஆன உருத்திராட்ச மாலை.

கண்டி > கண்டிகை.

அறிவீர் மகிழ்வீர்.
 

கருத்துகள் இல்லை: