சனி, 15 டிசம்பர், 2018

அனுபவம் என்பது அமைந்தவிதம்.

அனுபவம் என்பது நுகர்வு.

அனுபவம் என்ற சொல்லின் அமைப்பினை அறிந்துகொள்வோம்.

எதையும் நுகர்வதற்கு அதை அணுகினாலே இயலும்.   அணுகு என்ற சொல்லே அனு என்று திரிந்தது.  அண்,  அண்மை, அணுக்கம், அணுகு என்பன தொடர்புடைய சொற்கள்.

பாவித்தல் என்பது பயன்படுத்துதலைக் குறிக்கும் சொல். இது பாவி ( சொற்பகுதி) + அம் = பவம் என்றான சொல்.  முதனிலை குறுகித் தொழிற்பெயராய் அமைந்தது.  இது தோண்டு+ ஐ = தொண்டை என்பதுபோலும் குறுக்கமாகும்.   சா+ (வ்) + அம் =  சவம் என்பது போலுமாம்.

பயன்பாட்டுப் பொருள் வழக்கில் உள்ளதாகும்.

அனுபவம் என்பதன் சொல்லமைப்புப் பொருள்:  அணுகிப் பாவித்தல் என்பதே.

இதை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்றாலும் பாவித்தலென்பதையும் இங்கு விளக்குவோம்.

பாவுதல் என்பது :தாண்டுதல், நடுதல்,  பரப்புதல்,  பரம்புதல்,  பற்றுதல், வேர்வைத்தல், விரித்தல், பரவுதல், வியன்படுதல், படர்தல்,  விதைத்தல், தளவரிசை இடுதல் எனப் பல்பொருளொரு சொல்.

இச்சொயல்களிலே ஒரு பொருளை நுகர்தலின்றி அல்லது அறிதலின்றி ஒன்றும் செய்ய இயலாதென்பதை அறிக.

பாவுதல் என்பது உழவுத்துறை சார்ந்த சொல்லென்று தெரிகிறது.

இதன் மூலவடிவம் பர என்பதாகும்.   பர > பார் > பா> பாவு.

சொல்லும் கருத்தும் பரவி நிற்கும் நிலையிலுள்ள ஆக்கமே பா, பாடல், பாட்டு என்பவை எல்லாம்.  தொடுத்தலில் சொல்லும் பொருளும் பரப்பி வைக்கப்படுகிறது.

பார் என்பது பரந்த இவ்வுலகம்.  விரிநீர் வியனுலகு.

பாவுதல் என்பது தன்வினை வடிவச் சொல். இதனை பிறவினைப்படுத்தினால்
பாவு+ வி + தல் =  பாவுவித்தல் என்றாகும். இதில் வுவி என்பன ஒலித்தடையை ஏற்படுத்துவதால் ஒரு வுகரம் விலக்கப்படும்.  விலக்கவே பாவித்தல் என்ற சொல் அமைகிறது. பின் முதலெழுத்து குறுகி அம் விகுதி பெற்று அனுபவம் ஆயது.

இஃது ஒ ரு பேச்சு வழக்குச்சொல்.  அயல்தொண்டும் செய்கிறது.

பிறவினையின் பிறவினையும் உளது அறிக:  பரவு ( தன்வினை);  பரப்பு ( பிறவினை ).

பரப்பு > பரப்புவித்தல்.  தானே போய்ப் பரப்பாமல் இன்னொருவனை ஈடுபடுத்திப் பரப்பும்படி செய்தல்.  தாண்டு> தாண்டுவித்தல். ( ஒரு நாய் எரியும் வளையத்தினுள் தாண்டி ஓடும்படி செய்தல் என்பது ஓர் எடுத்துக்காட்டு).

சிற்றூரில் அமைந்து சீருலகில் உலவும் இச்சொல்லைக் கண்டு நாம்
மகிழ்வோமாக.

குறிப்பு:

விதந்து அமைவது விதம்.


கருத்துகள் இல்லை: