இப்போது நம்பிக்கை என்ற சொல்லை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
ஒரு வினையிலிருந்து அமைகின்ற பெயர்ச்சொல் - தொழிற்பெயர் என்று நம் இலக்கணங்கள் கூறும். இதை வினைப்பெயர் என்று கூடப் பெயரிட்டிருக்கலாம். ஆனால் வினையாலணையும் பெயர் என்று இன்னொரு வகை இருப்பதால் அதனோடு குழம்பிவிடாமல் இருக்க, இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பெயரிடுங்கால் இதையும் கருத்தில்கொள்வது விழையத்தக்கதே, எனினும் வினைப்பெயர் என்றும் சொல்வதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இங்கு தொழிற்பெயர் என்றே சுட்டுவோம்.
நம்பு. நம்புதல் என்பன வினைப்பகுதியும் வினையின் பெயருமாகும். எச்சவினைகளிலிருந்து பெயர்ச்சொற்கள் அமைதலானது மிகக் குறைவு ஆகும். அப்படி அமைந்த பெயர்களை ஒரு முன் இடுகையில் குறிப்பிட்டிருந்தோம்.
இதுபற்றிய உரையாட்டினை மேற்கண்ட இடுகையில் கண்டு மகிழலாம், எடுத்துக்காட்டாக வைத்தியம் என்ற சொல் வைத்து என்ற எச்சவினையினின்றும் வருகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளோம். மருத்துவர் மருந்துமட்டும் கொடுத்துவிட்டு உடம்பைப் பார்த்துக்கொள் என்று விடைகொடுத்துவிட்டுப் போய்விட்டார் என்றால் அது மருத்துவம் ஆகிறது, தம் வீட்டில் வைத்து மருந்துகொடுத்துக் கவனித்துக்கொண்டாரென்றால் அது வைத்தியம் (வைத்து உடல்நலமூட்டுதலை இயக்குவது) என்பதே சரியாகும், இன்றும் இப்படி வைத்துப் பார்ப்பவர்கள் உள்ளனர். வைத்துக்கொள்வதில் இருவகை, வைத்தியன் வீட்டில் போய்த் தங்கிய நோயாளியை முன்னவன் கவனித்துக்கொள்வது ஒரு வகை; ஒரு வைத்தியனையே வரவழைத்துத் தம் மனையில் இடம்கொடுத்துத் தனக்கு உடல்நலம் பேணிக்கொள்வது இன்னொரு வகை. இது பெரும் செல்வம் படைத்தோருக்கு இயன்றது ஆகும், எல்லா உயிர்களையும் தன்னிடத்தே வைத்துக் காப்பவனாகிய கடவுள் வைத்தியநாதனாகிறான். வைத்துக்கொள்வதால் வைத்தியன்; பிற அறிகுறிகள் ஏதுமின்றி நாவினால் மட்டும் வணங்கப்படுபவன் நாதன் ; எனவே வைத்தியநாதன் என்றறிக. போற்றிப்பாடல்கள் மந்திரங்கள் முதலியவை அவன் நாதன் என்பதை அறிவுறுத்தும், நாவினால் குறிக்கப்பெறுகிறவன்; பின்னாளில் அமைத்த பொருள்களினாலும் குறிக்கப்பட்டான், நாவினாலான ஒலி நாதம் ஆகிறது, பின்னர் இச்சொற்களின் பொருள் விரிந்தன.
எடுத்துக்காட்டாக ஒரு சிலையினால் அறியப்பட்ட கடவுளும் நாதனே ஆனான். பின் ஒலியும் பொருளும் இல்லாத காலையும் நாதனே ஆனான், அவனைப்பற்றி நாவினால் செய்யப்பெறும் ஒலி நாதம், பின்னர் கருவிகளால் செய்யப்பெற்ற பிற ஒலிகளையும் இது உளப்படுத்தியது யாரும் எதிர்பார்க்கும் வளர்ச்சியே ஆகும், இவை நிற்க:
நம்பு > நம்புதல்;
நம்பு > நம்புகை (கை என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி).
நம்பிக்கை என்பது பொதுவாக ஒன்றை நம்புவது என்றாலும், அது இறந்த காலத்தைச் சுட்டும் நம்பி என்ற எச்சத்திலிருந்து தோன்றுகிறது,
உனது திருவடி நம்பி வந்தேன்.
இங்கு நம்பியது முதல் செயல்; வந்தது அடுத்து நிகழ்வது என்பது உணர்க.
எனவே நம்பிக்கை என்பது ஒன்றை முடிவாக நம்பிவிட்ட தொழிலுக்குப் பெயராய் வருகிறது. இந்த அளவில் அது நம்புதல் என்ற வினையின் பெயருடன் மாறுபாடுகிறது. முன்னும் நம்பி இன்னும் நம்பிக்கொண்டிருப்பதே நம்பிக்கை ஆகும்,
இது மற்ற வினையின் பெயர்களிலிருந்து வேறுபட்டமைந்த சொல் என்பது தெளிவு ஆகும், ஆனால் வகைப்படுத்துங்கால் தொழிற்பெயரே என்று இணங்கலாம் என்று அறிக. எச்சவினையிலிருந்து தோன்றிய தொழிற்பெயர். காலம் காட்டாது என்பதற்கும் வினைப்பகுதியினின்று தோன்றுவது என்பதற்கும் விலக்காகுகின்றது காண்க.
PROOD READING TO BE CARRIED OUT,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக