வெள்ளி, 13 ஜூலை, 2018

ஒரு பக்தையின் பட்டறிவு: கொத்தமல்லி அம்மை நோய்.

கடவுள் நம்பிக்கை:

பெரும்பாலான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உலகில் வாழ்கின்றனர்.  வாழ்க்கையில் துன்பங்கள் வந்தபோது  துன்பம் வருங்கால் நகுக என்று தமிழிறைவனார் வள்ளுவனார் கூறியதுபோலச் சிரித்துவிட்டு மேற்கொண்டு ஆகவேண்டியவற்றைக் கவனிப்பதும் ஒரு நல்ல வழிதான். பலருக்கு இறைவன் ஒருவன் இருக்கின்றான். இப்போது இதை யாம் கூறும்போது,   இருக்கின்றான், இருக்கின்றாள்,  இருக்கின்றது என்று எப்படியும் கூறவேண்டுமென்றே தோன்றுகிறது.  ஏனென்றால் கடவுள் பால்பகுப்பு இல்லாதவர்.  ஆனால் மனிதனால் ஆக்கி வளர்க்கப்பட்ட மொழிகளில் இயற்கையாய் அமைந்துகிடக்கும் குறுமை காரணமாக இப்போது யாம் இங்கு  இருக்கிறான் என்று ஆண்பாலில் கூறுகிறோம்.  

கடவுள்  அம்மையும் ஆவார்; அப்பனும் ஆவார். அல்லாததும் ஆவார்.  இதை நாம் உணர்ந்து இன்புறவேண்டும்.

மகிழாசுரமருத்தினி:  (மகிஷாசுரமர்த்தினி)

எம் மகிழ்வுக்குப் பற்றுக்கோடாக நிற்பது கடவுள்தான்;  அக்கடவுள் அம்மை. தேவி என்றும் கூறுவோம்.  பற்றுக்கோடு என்றால் ஆதாரம், ஆதரவு என்று பொருள்படும்.  இதனை நம் இன்றமிழில் "ஆசு"1 என்று  கூறுவோம்.  ஆசு = ஆதாரம், ஆதரவு. மகிழ் ஆசு உற மருத்தினி என்பதே மகிழாசுறமர்த்தினி என்றும் மகிஷசுரமர்த்தினி என்றும் நம்மிடைப் பெயர்களாக உலவுகின்றன. இதை மகிழ்வுக்கு பற்றுக்கோடான கடவுள் என்னாமல் மகிழ் என்பதை மகிஷ  என்று பொருள் சொல்லி நம் தொன்ம அறிஞர்கள் கதை கூறியுள்ளனர். இவை நிற்க. இதில் நாம் போற்றத்தக்கது: தீமையை இறைமை வென்றது என்பதே.

ஆரியத் தொடர்பு:

இவை போல்வன ஆரியர்களால் புனைவு செய்யப்பட்டவை என்பர் சிலர்.  இவை நம்மிடைக் கதைபுனை ஆற்றல் உள்ளோர் புனைந்தவைதாம்,  அவர்கள் ஆரியர் அல்லர்; காரணம் ஆரியர் என்று ஒரு சாரார் இருந்தனரென்பது ஒரு தெரிவியற் கருத்தே அன்றி மெய்ப்பிக்கப்பட்ட ஒன்றாகாது.  புனைந்தவர்கள் நம் சிற்றூர்களில் கதை புனையும் திறம்வாய்ந்த புலமை உடையோர்தாம்.  வால்மீகி போன்றோரே ஆரியருமல்லர்; பார்ப்பனரும் அல்லர்.  வெள்ளையன் கூறியதெல்லாம் நம்பியதும் மூடநம்பிக்கைதான்.

நம் அம்மையார் ஒருவரின் 40+ ஆண்டுகள் கோயிற்சேவை:

இவையெல்லாம் ஒருவாறு இருக்க,  சென்ற நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் மகிழாசுரமருத்தினியான அருள்மிகு துர்க்கையம்மனுக்கு அம்மையார் ஒருவர் பலரின் பொருளுதவியுடன் பெரும்பூசைகளை நம் சிங்கை துர்க்கையம்மன் ஆலயத்தில் நிகழ்த்திவந்திருக்கிறார்.

விளம்பரம் விரும்பாத இவர்தம் சேவையை இவ்வாலயம் 2016ல் வெளியிட்ட ஒரு நூல் அதன்  கவிதையில் குறிப்பிடுகின்றது:

"நாற்பது நல்லாண்டுகள்---- இங்கு
நனிபல பூசைகள் நடத்திய பூரணி;
துர்க்கையம்மன் பதம் 
நேர்ப்படும் பக்தைகளின் 
குடி நிலைப்பட நலம்பல தலைப்பட
சீர்மிகும் விநாயகனைச் சேவித்துச்
சிவனருள் பொழிதர
தவநிலை கொள்ளுவோம்.............

துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்கள்
சூழ்பன்னிலைகளும் தாண்டிவரப்
பொற்கை விரித்து அபயம் தருவாள்"

என்று கூறுமிக் கவிதை,  

நூல்: தெய்வீக வரலாற்றுச் சின்னம் , பக்.90


இப்போது அவருக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்துவிட்டதால், மேற்கொண்டு அதனை நடத்த இயலவில்லை;  ஒரு பழைய நோயும் அவரைப் பாதித்துள்ளது,

பல ஆண்டுகட்கு முன்னர் அவருக்குக் கொத்தமல்லி அம்மை வந்தது.   அது கொஞ்ச நாளில் தானே நலமாகிவிட்டது.  அந்த நோயை விளைவித்த நோய் நுண்மிகள் virus முதுகெலும்பின் உள் சென்று கரந்துறைவு செய்து இப்போது வெளிப்பட்ட பின்பு  ஒரு விலாப்பக்கத்து நரம்புகளைப் பாதித்து இடைவிடாத வலியை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.  உலகில் இதுபோன்று பாதிக்கப் பட்டவர்களில் எண்பத்தைந்து விழுக்காட்டினருக்கு அது முழுமையான முறையில் குணமாகிவிடும்.  ஒரு பதினைந்து விழுக்காட்டினருக்கு அது நீங்காது நின்று வலியைத் தந்துகொண்டிருக்கும்.  அப்படிப்பட்டோரில் இவரும் ஒருவரானார். இதன் காரணமாகவும் இவரால் மேற்கொண்டு பூசைகளை ஏற்று நடத்த இயலவில்லை.  மேலும் அகவை காரணமாக முதுகெலும்பிலும் கொஞ்சம் தேய்வு ஏற்பட்டுள்ளது என்று அறிகிறோம்.  இவர் தாம் நடத்திவந்த பூசைகளை ஆலயத்துக்கே விட்டுவிட்டார்,

இறைவனும் நோயும் அதற்குத் தீர்வும்

நோய்நுண்மிகளை உண்டாக்கியவரும் நம் கடவுள்தான். இவைபோல்வன இயற்கையின் ஒரு பகுதியாகும்.  வலிவரும்போது மாத்திரைகள், தைலம் முதலியவற்றைப் பயன்படுத்தி வலியைக் குறைத்துக்கொண்டு வாழ்க்கைப் படகினைச் செலுத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்.  வேறு வழியில்லை.

கொத்தமல்லி அம்மை நோயின் பின்விளைவுகளில் ஒன்று இது என்பதை உணர்ந்து,  வலியைக் குறைத்து வாழ்க்கையை வாழ்வேண்டியதுதான்.

அதுவே தவமெனப்படும்.  வள்ளுவன் கூறியது:

உற்ற நோய் நோன்றல்;  உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு   உரு.

முதலில் வந்த நோயைப் பொறுத்துக்கொள். இதைச் செய்துவிட்டால் நீ தவம் என்பதன் முதல் கட்டத்தில் தேர்வு அடைந்துவிட்டாய்;  அடுத்து எவ்வுயிர்க்கும் எத்துன்பமும் விளைவிக்காதே. அதையும் நீ செய்துவிட்டால் தவ  ஞானி ஆகிவிட்டாய்.  தவத்திற்கு உரு என்பது அதுதான் என்று வள்ளுவனார் நமக்குக் கற்பிக்கின்றார்.

இவ்வம்மையாருக்கு நம் வாழ்த்து உரித்தாகுக,  மகிழ்வுக்கு ஆசாக நிற்கும் மருத்தினி  =  மருத்துவ மேதகியாகிய துர்க்கையம்மனின் அருள் இவ்வம்மையாருக்கும் மற்றும் அனைவருக்கும் கிட்டுவதாகுக.

மகிழ்.
ஆசு.
உற.
மருந்து.
இன்,  இ. 


தொடர்புடைய மற்ற இடுகைகள்: வாசிக்கச் சொடுக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2015/10/brief-further-explanation.html 


அடிக்குறிப்புகள்:

ஆசு  -  இது  ஆதல் என்ற வினைச்சொல்லினடியாகப் பிறந்த சொல் .  சு என்பது விகுதி.




கருத்துகள் இல்லை: