புதன், 4 ஜூலை, 2018

கம்மல் கம்மி என்பன கருமைத் தொடர்பு

வானம் கம்மலாக இருக்கிறது என்பதைப் பேச்சுவழக்கில் நீங்கள் எதிர்கொண்டிருக்கக் கூடும்.  கம்மல் என்பது ஒரு காதணியையும் குறிக்குமென்றாலும் இன்றைய நம் பார்வை அது பற்றியதன்று,  மழை வரும்போல் தோன்றுகிறதென்பதற்குக் கம்மல் என்பார்களே அதையே இங்கு எடுத்துக்கொள்கிறோம்.

சிறிது இருட்டிக்கொண்டிருப்பது போன்ற நிலை ;  அதாவது கருமேகங்கள் மூடி வானம் ஒளிகுறைந்த நிலை.  அதுவே கம்மல் ஆகும்.

இதற்குமுன் வந்த இடுகைகளில் கரு என்பது கம் என்று திரிவதை உரைத்துள்ளோம்.  ருகர மறைவை அறிந்துகொண்டோம்.

கருங்கண் >  கருங்கணம் > கங்கணம் என்று திரிந்தமை போல,  கம்மல் என்பதும் கரு என்று தொடங்கும் ஒரு சொல் திரிந்ததனால் ஏற்பட்டதே என்பது தெளிவு.

கரு > கருமல் > கம்மல் என்றாகிறது.

பண்டைத் தமிழ்ப் பேச்சில் வானம் கருமைகொள்வதைக் கருமல் என்று கூறினர் என்பதை ஆய்ந்து தெளிந்துகொள்ளலாம்.  பேசியோரும் மறைந்து அவர்கள் எப்படிப் பேசினர் என்பதும் மறைந்துவிட்ட நிலையில் நுட்பங்களை நுணுகி ஆய்ந்துதான் தெரிந்துகொள்ளமுடியும்.

வட்டக்கரிய விழி ---- கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ

என்ற பாரதியின் பாட்டில் வானக் கருமை குறிப்பிடப்படுகிறது.

கம்மல் என்பது ஒளி வீசிக்கொண்டிருந்த நிலை மாறி, வானம் கருமை கொண்டு மாறுவதைக் குறிக்கும்,

கம்மி என்ற  சொல்லும் தொடர்புடையதே.  முதலில் இது ஒளி குறைந்த நிலையைக் குறிக்க வழங்கிப் பின்னாளில் பொதுவான குறைவைக் குறித்ததென்பதை அறிந்துகொள்ளலாம்.

கரு என்பதே கம் ஆகும்.

கரு+ ம் + அல்  =  கருமல் > கம்மல்.

மல் என்பதைச் சொல்லிறுதியாகக் கொள்வதில் தப்பில்லை. அது ஆய்வினை எளிதாக்கும் என்பதை உணரலாம்,

மான் என்ற ஆண்பால் சொல்லிறுதியும் இப்படி அமைந்ததே ஆகும்.

பெரு + ம் + ஆன் =  பெருமான்.     இய  + ம்  + ஆன் =  இயமான் > எசமான் > எஜமான்.
இயக்கும் திறமுடையோன் ஆதலின் இய என்ற சொல் பயன்  கண்டது.  இய> இயவுள் என்பது காண்க.

மான் என்பது ம்+ஆன் என்பதே;  ம் தொடர்புறுத்த வந்த இணைப்பு ஒற்று ஆகும்.  ஆன் என்பதே ஆண்பால் விகுதி.  ஆனாலும் மான் என்பதோர் இறுதி எனக்கொள்ளுதலில் பெரிய தவறொன்றுமில்லை.

கம்மல் என்பதில் இறுதி விகுதி அல் என்பதே.   கம் என்பது பகுதி என்பதினும் கரு என்பதே பகுதி என்று உணர்தல் தெளிவு ஆகும்.

கஞ்சன் என்பதும் கரு என்பதனடிப் பிறந்த சொல்லென்பது முன் இடுகையில்
கண்டு உவந்தோம்.


கருத்துகள் இல்லை: