திங்கள், 2 ஜூலை, 2018

கஞ்சன்

இன்று கஞ்சன் என்ற சொல்லின் அமைப்பை அறிந்தின்புறுவோம்.

கஞ்சன் என்பதற்கு இன்னொரு சொல்:  கருமி என்பது. 

கருமி என்பது விளக்கப்பட்டுள்ளது.


கரு என்பது கருமை குறிக்கும் தமிழ் அடிச்சொல்.  அது சிலவிடத்துக்  கரு என்றே நிற்கும்;  சிலவேளைகளில் கிரு என்று  திரியும்.  எடுத்துக்காட்டு:

கரு >  கருமி.  (  வெளிப்படையாக இல்லாமல் செல்வத்தை இருட்டில் வைப்பதுபோலப் பதுக்கிவைப்பவன் எனவே செலவுகளையும் சுருக்கிக் கொள்வான்.),  கருமியின்  நடத்தை:  கருநிறமானது என்று
மக்கள் கருதுவர்.

கருப்புச்சந்தை என்ற தொடரையும் காண்க.

கருப்பு என்பதன் அடி கிரு என்றும் திரியும்.

கரு> கிரு > கிருட்டினபட்சம்  ( கருப்புப் பகுதி).   கிருட்டினன் என்பது கருப்பன் என்பதே.

இந்தியச் சாமியர் செம்மையாகவும் ( சிவன், முருகன் )  கருமையாகவும் ( கிருஷ்ணன், விஷ்ணு என்னும் விண்ணு) இருவேறு விதங்களில் இருப்பர்.   சாய்ந்து நின்றோ கிடந்தோ வணங்குவது  சாய்+ம்+இ  =  சாய்மி > சாமி ஆகும். யகர ஒற்றுக் கெடும், இன்னொரு எ-டு:  ஆய்த்தாய் > ஆத்தா;   வாய்த்தி > வாத்தியார்.

கருமை கெடுதல்மட்டுமின்றிப் பிற பொருள்களும் தழுவும்:
எடுத்துக்காட்டு:

கருங்கழல்  -  வீரக்கழல் (  பொருள்:  வீரம்)
கருங்கை -  வன் தொழில் ( பொருள்:  வன்மை)
கருந்தாது -   இரும்பு   ( பொருள்:  வலிமை, வளையாமை)
கருக்கிடை -  ஆலோசனை  ( பொருள்:  சூழ்தல்)
கருநாள் -  ஆகாத நாள்:  (பொருள்: பொருந்தாமை)
கருங்கலம் -  மண்பாத்திரம் ( பொருள்:  அடுப்புக்கு உரியது).

இங்கனம் கருமை பலபொருள் சுட்டும் அடிச்சொல் ஆனது காண்க.

கஞ்சன் என்போன் கருமி.   அவனும்  கருஞ்செயல் செய்வோன்.  கருஞ்செயலாவது விரும்பத்தகாத நடபடிக்கை ஆகும்.

கருஞ்செயன் >  கஞ்சென் > கஞ்சன்.

ருகரம் கெட்டது.
செ என்பது ச ஆனது.

செ பெரும்பாலும் ச ஆகும்.  எடுத்துக்காட்டு:

அகஞ்செலி >  அஞ்செலி,>  அஞ்சலி.

இனிக் கருஞ்செயன் என்பது கஞ்சன் என்றாவது  உணரலாம்.

கருஞ்செயன் என்பது  கஞ்~ சென்  என்றிருப்பின் அதைத் தமிழாசிரியர்கள்   கஞ்~  சன் என்றே திருத்துவார்கள்,  செயன் என்பதும் பேச்சில் சன் என்றே திரிதற்குரியது,

இனி  கருஞ்சன்      (  கரு+ சு  + அன் )  என்று காட்டி,  சு  அன் என்பன விகுதிகள் எனினும் ஏற்புடைத்தே ஆகும்.  கருஞ்சு என்பது கஞ்சு என்று வருதலும் ஆகும்.

இவை போல்வனவற்றில் மூல அமைப்புகள் அழிந்தன.  பேச்சு வழக்கில் பெரும்பாலும் அவ்வாறு அழியும்.

இது அகங்கை என்பது அங்கை என்று வந்தது போலாம்.  சகக்களத்தி என்பது சக்களத்தி என்று வந்ததும் காண்க.  ருகரமும் கெடும்:  பெருமான் > பெம்மான்.  தருமம் > தம்மம் ( பாலித்திரிபு)

 திருமையா என்று தமிழரிடைக் காணப்பெறும் இயற்பெயர், பிற மாநிலத்தாரிடை திம்மையா என்றன்றோ வழங்குகிறது?  வெவ்வேறு மாநிலத்து வழக்குகள் ஆதலின்  முதலமைப்பு நிலைபெற்றுள்ளது.

அரிசியை வறுத்துக் காய்ச்சிய கஞ்சி,   கரு என்பதனடியாகப் பிறந்து அமைந்த சொல். அது கருஞ்சி என்றிருந்து கஞ்சி ஆனதென்பது தெளிவு, பின் அது வெண்கஞ்சியையும் உள்ளடக்கியது, இதுவும் பேச்சுச்சொல்லே.  இவை போல்வனவற்றுக்கு முன்னமைப்பு  கிட்டுவதில்லை.

இதுகாறுங்கூறியவற்றால்  கஞ்சன் என்பதும் கருமி என்பதும் ஓரடியிற் பிறந்த சொற்கள் என்பதை உணரலாம். 







கருத்துகள் இல்லை: