செவ்வாய், 23 அக்டோபர், 2018

அதரம் என்ற சொல் இதழில் தொடங்கி,.....

பெரும்பாலும் கவிதை எழுதும் கவிகள் தம் சொந்த உணர்வுகளையே எழுதி  மகிழ்கின்றனர்.   திரைப்படத்துக்கோ நாடகத்துக்கோ எழுதுகிற கவிஞரானால் நாயகன் நாயகியை மனத்துள் வைத்துக்கொண்டு கற்பனை மேடையில் நின்றுகொண்டு எழுதவேண்டும்.  தாம் நுகர்ந்து உணர இயலாத, பிறர் நுகர்வு பற்றிய கற்பனைக்குள் தம்மை வீழ்த்திக்கொண்டு பாடலை எழுதவேண்டும்.

என் அதர மீது வைப்பேன் ---  ஒரு
அன்பு முத்தம் கொடுப்பேன்
இன்பம் இன்பம் 

என்று ஒரு கவி எழுதினார்.  இது உடல் தொடர்பைக் குறித்து எழுகின்றது. பணத்துக்காகப் பாடவரும் பின்னணிப்பாடகியைத் திடீரென்று கட்டிப் பிடித்துவிட்டால் இன்பத்துக்குப் பதில் துன்பமே விளையும்.


உன்னை நயந்துநான் வேண்டியும் ஓர் முத்தம்
தந்தால் குறைந்     திடுமோ
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை
பாய்ந்துஅல்லல்    படுமோ

பாபநாசம் சிவன் என்ற பெருங்கவிஞரின் பாடலில் வரும் இவ்வரிகளும்
நன்றாகவே அமைந்துள்ளன.  முத்தம்  என்பதையும் இதில் புகுத்த 
இவரும் தயங்கவில்லை.  ஆண்மகன் நயந்து வேண்டுவது இம்முத்தம்.  இத்தகைய வேண்டுதலுக்கு உடன்பாடு உண்டாகிவிட்டால் வழக்குமன்றம் செல்லாமல் இருக்கலாம்.  இல்லையேல் அதுவும் துன்பம்தான்.

இந்திர லோகமும் சொர்க்கமும் நாம் பெறும்
இன்பத்தின்முன் நிற்குமோ?
மலரும் மணமும் போல்
நகமும் சதையும் போல்
இணைபிரியோம் நம் காதல் வானில் 
வானம் பாடி போல
பிரேம கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்

முத்துடன் ரத்தினம் வைத்துப்ப   தித்தவி
சித்திர சப்பிர மஞ்சம் ----  அதில்
நித்தமு மெத்தத  னத்தில்தி   ளைத்தொரு
மித்தம  னத்துடன் வாழ்ந்திடுவோம் 



என்ற கே.டி. சந்தானம் என்னும் கவியின் வரிகளும் காதலையே சொன்னாலும்  வானம் இந்திரலோகம் மலர் மணம் நகம் சதை என எல்லாவிடத்திலும் உலாவுவதாலும் இறுதியில் பிரேம கீதத்தில் திளைப்பதாலும் உடலைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  கவிதை திரைப்  பாடலாயினும் எதுகைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.  கவியில் வலிபு வண்ணம் பயில்கிறது. உடல்பற்றிய எதுவும் புகுத்தப்படவில்லை.

அதரம் என்ற சொல்லைப் பற்றியே விளக்க முற்பட்டோம்.  அதரம் என்றால்
உதடுகள்.  உதடுகள் என்பவை மந்திரித்த தகடுகள் என்று இன்னொரு கவி எழுதியிருந்தாலும் அவை உடலின்  பகுதிகளே.  அவற்றில் ஒன்றும் இல்லை. மயக்குறுவதும் மலைவீழ்வதும் மனமே அன்றிப் பிறிதில்லை. மனத்தையே கட்டுப்படுத்த வேண்டும்.

சொல்லமைப்பின்படி  இதழ் என்ற உதடு குறிக்கும் சொல் பூவிதழ்களையும் குறிக்கும்,   பூவிதழ் என்பதே அதன் ஆதிப் பொருள். மனித இதழ்களைப் பூவுடன் ஒப்பிட்டு இதழ் என்பது மனித உதட்டையும் குறிக்கவேண்டிய நிலை உண்டாயிற்று.  முத்தமிடுவதால் பல நோய்கள் பரவுதலால் கவனமாகவே இருக்கவேண்டும்.  தூய்மை முன்மை வாய்ந்ததாகும்.

இதழ் என்பது பின் அதழ் என்று திரிந்தது.  இகரத்தில் வரும் சொற்களில் பல அகரத்திலும் வருதல் காணலாம்.  அதழ் என்று திரிந்தபின்

அதழ் >  அதழம் > அதரம் என்று திரிந்தது.

ழகரம்  டகரமாகத் திரியும்:  வாழகை : வாடகை;  பாழை > பாடை.
டகரம் ரகரமாகும்:    மடி ( மடிதல் =  மரித்தல் )  விடு> விடதம் > விரதம் (சில உணவுகளை விடுதல் ).

திராவிட மொழிகள் சங்கதம் என்று பல மொழிகள் நாட்டில் உலவுதலுக்குக் காரணமே திரிபுகள் தாம்.  இவற்றைத் தொல்காப்பியனாரே உணர்ந்திருந்ததால்,  பொருள் ஒன்றாகச் சொல் ஒன்றாகவும் மற்றும் சொல் ஒன்றாகப் பொருள் ஒன்றாகவும் இருந்த பல சொற்களை அவர் கண்டு அவற்றைப் பற்றியும் சூத்திரம் செய்தார்.  இப்படி உலகின் முதல் சொல்லாய்வையும் மொழியாய்வையும் அவரே தொடக்கிவைத்தார்.  77 திராவிட மொழிகள் இருப்பதாக 50 ஆண்டுகட்கு முன்பே ஓர் ஆய்வுக்குழு சொல்லியது. இசின் என்ற தொல்காப்பியச் சொல்லைக் கங்கையாற்றுப் பகுதியில் வழங்கக் கண்டதாகவும் குழு சொல்லியது. இற்றைக்கு அவற்றுள் பல மறைந்திருக்கக் கூடும். பல எழுத்தில்லாதவை. எழுத்து உள்ளவை ஐந்துதான்.  இவையும் திரிபுகளால் தோன்றியவை.  தமிழினுள்ளும் எத்துணை திரிபுகள்.  ஒரே மாவைப் பல்வேறு பலகாரங்களாகப் பண்ணிவிட்ட நாடகமே இம்மொழிகள் எல்லாம்!!  ஒன்றுக்கொன்று தொடர்பின்றி  மக்கள் கூட்டம் வாழ்ந்தமையே மூலகாரணமானது. வானொலி தொலைக்காட்சி ஏதுமில்லை.

இவ்வாறு திரிபுகள் பல.

எ-டு:  ஆ+ இடை :  ஆயிடை;   அ+ இடை: அவ்விடை.    
அவ்விடை > அவிடை > அவிடா. இதை விரிக்கவில்லை.

இழு என்பதும் ஈர் என்பதும் தொடர்புடையவை.  இவ்விரு வினைகளில் இகரம் நீண்டு ழுகரம் ரகர ஒற்றானது.  இ என்பதும் ஈ என்பதும் ஒன்றுக்கு ஒன்று நிற்பதுண்டு:  எடுத்துக்காட்டு:  இங்கு > ஈங்கு;    அங்கு என்பதும் ஆங்கு என்று திரியும்.  இ > இர் > இருதயம்;  இரத்தத்தை ஈர்த்துக்கொள்ளும் உறுப்பு.   இழு> இர் > இரு;   இரு> ஈர். ( எண்ணிக்கைச் சொல்லாகிய இன்னோர் இரு என்பதும் ஈர் என்றே திரியும்.  ஈராறு கரங்கள் என்பது காண்க.  இர் > ஈர் > ஈரல்: மூச்சு இழுத்தல். ( நுரை ஈரல் ). பிற உடல் ஊறுசாறுகளை இழுத்தல்  (கல்லீரல் ).. ஆதலின்  ஈரல் எனப்பட்டது


ஈர்த்தல் :  ஈர் > ஈர் + து +  அயம்  (அ + அம்).  அங்கு அல்லது அயலில் இயங்கி  ஈர்த்துக்கொள்வது ).  அயம்:   ஏனை உறுப்புகட்குப் பக்கலில் இருப்பது என்பதாம்.   ஈர்தயம் > இருதயம் எனினும் பொருள் போதரும். காண்க.

தமிழ் விரிந்த பரவுதலை உணர்ந்து மகிழ்க..

குறிப்பு: 

 சில சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்குறலாம். இதை முன்பே சொல்லியிருக்கிறோம்.  
அதரம் :  அ = அங்கிருக்கும்;  து = பொருள் /   அது;   அரு =  அருகிலே;  அம் = அமைந்துவிட்டது.    உதடுகள் ஒன்றுக்கு ஒன்று வேறாக நின்றாலும் வேண்டியபோது ஒன்றுபட்டு மூடிக்கொள்பவை.  இது இதையே காட்டுகிறது. இச்சொல்லமைப்பு.  உதடுகள் இறுதிகள் இணைந்து இடைவெளிகொண்டு இருப்பவை. ஒன்றினருகில் இன்னொன்று  இணைப்பில் இருத்தல். பூவிதழ்களும் இத்தகையவே.

ழகரம் -  ரகரம்:   அழ் = அர் = அரு ( இடநெருக்கம்; அடுத்திருத்தல் .) 
அதழ்  ( அழ் );  அதர் (அர் - அரு ).> அதரம்.

 திருத்தம் பின்.

மீண்டும் பார்த்த திகதி:  21.4.2020.


கொரனா என்னும் மகுடமுகி நோய்நுண்மி உலவும் இந்நாளில் யாரிடமிருந்தும் தொலைவிலேயே இருக்கவும்.  வந்துவிட்டால்  யார் பிழைப்பார், யார் இறப்பார் என்று முன் கூட்டியே அறியும் வழி ஒன்றுமில்லை.  "பத்திரமாக இருங்கள்".

கருத்துகள் இல்லை: