புதன், 28 பிப்ரவரி, 2018

முற்காலத்தில் பெண்ணாதிக்கம்.

மிக்கப் பழங்காலத்தில் பெண்களே குமுகத்தில் ( சமுகத்தில்) குடும்பங்களுக்கும்  வெளியுலகிலும் பல அமைப்புகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தலைமை தாங்கினார்கள் என்று மனிதவளர்ச்சி நூலார் கண்டுபிடித்துக் கூறுவதுண்டு. எனினும் சில இனத்தார் ஆண்கள் தலைமையில் இயங்கினர் என்று தெரிகிறது.

கழிந்த காலத்தில் யாது நடந்தது என்று கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதன்று.  இன்று நாம் சில ஆய்வுகளை மேற்கொள்ளுவோம்.

இன்றைத் தமிழில் ஆள் என்ற சொல்லுக்கு பால்பாகுபாடு கூறமுடியவில்லை. இதற்குக் காரணம்,  ஆள் என்பது ஆணாகவும் இருக்கலாம்; பெண்ணாகவும் இருக்கலாம்.  ஆள் என்பது ஒரு பொதுப்பால் சொல்.  பொதுப்பால் என்பது தமிழ் இலக்கணப் பாகுபாடு அன்று.  ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்பனவே இலக்கணக் குறியீடுகள்.

ஆள் என்பது இற்றை வழக்கில் பாலறி கிளவி அன்று எனினும் அதற்கு மாறாக அது பெண்பால் விகுதியாக தமிழ்மொழியில் வழங்குகிறது:

அவள் வந்தாள்.
கவிதா சென்றாள்

இந்த வாக்கியங்களில் வரும் வினைமுற்றுக்களில் ஆள் என்பது பெண்பால்
குறிக்கவருவதைக் காணலாம்.

தனிச்சொல்லாக வரும்போது ஒரு மனிதப்பிறவியைக் குறிக்கும் இந்தச்சொல் விகுதியாக வரும்போதுமட்டும் எப்படிப் பெண்பால் குறிக்கவருகிறது?  இதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

பொதுப்பாலாக வரும் ஆள் என்னும் சொல்,  வினைச்சொல்லாக வருகையில் மட்டும் எப்படி ஆட்சிசெய்தல் என்ற பொருளில் வருகிறது?  ஆள், ஆள்தல், ஆளுகை, ஆளுமை, ஆட்சி என்பவற்றில் முற்றிலும் மாறுபட்ட பொருளில் அன்றோ வருகிறது?

இப்போது விடையத்திற்கு வருவோம்.  ஆள் என்பதன் பொருள் ஆள்தல் என்பதுதான்.  பெண்ணே குமுகத்தில் ஆட்சி செய்தாள். ஆகவே வந்தாள் கண்டாள் முதலியவற்றில் ஒருவிதப் பணிவுடன்`தான் பெண்ணைக் குறித்தனர்.

வந்தாள் என்றால் ஆள்கிறவள் வந்தாள் என்பதே பொருள்.

பணிவுடன் தொடங்கிய இந்த வழக்கு, இந்நாளில் பொருள் இழிவு கண்டது. வந்தாள் என்பது பணிவுக்குறைவாகிவிட்டது,

நாற்றம் என்ற சொல் இனிய மணம் என்று பொருள்பட்டு இன்று தீயவீச்சம் என்று பொருள்பட்டதுபோலவே ஒரு பொருள் இழிவே இதுவும்.

இங்கனம் பொருளிழிவுகண்ட பதங்கள் மொழியில் பல.

ஆள்பவள் வந்தாள் என்று பொருள்பட்ட இந்தவழக்கு, மரியாதையற்றதாகக்
கருதப்பட்டது மொழியிலும் வழக்கிலும் ஏற்பட்ட மாற்றம்.  ஆள் என்பது இன்றும் மேலாண்மையையே குறிப்பதால்,  வந்தாள் என்பது மேன்மைக்குரிய பெண் வந்தமையையே குறிக்கும்.

ஆள் என்பது பெண்ணுக்குரிய சொல்லாகவும் விகுதியாகவும் பயன்பட்டபின்பு, ஆடவர்களுக்கு ஒரு சொல் தேவைப்பட்டது.

அது ஆள் என்ற சொல்லிலிருந்தே வந்தது.

ஆள் > ஆண் என்று அமைந்தது.

அதாவது முன் காலத்திலேயே பெண்ணுக்கு வந்த ஆள் என்பதிலிருந்துதான்
ஆண்மகனும் தன்னைக் குறிக்கும் சொல்லைப் பெற்றுக்கொண்டான்.

ளகரம் ணகரம் ஆகுமா?  ஆகுமே. பல திரிபுகளைக் காட்டலாம். எனினும்
ஒன்றுபோதும்.  உண் என்பது தின்பது குடலுக்குள் செல்வதைக் குறிக்கிறது. இது உள் என்ற சொல்லின் திரிபு ஆகும்.  உள்>  உண்.  உணவை உள்ளிடுவதே  உண்பது ஆகும்.  உள் என்பது புணர்ச்சித் திரிபிலும் உண் என்றாகும். உள்+ நாக்கு= உண்ணாக்கு என்று காணலாம்.  ஆகவே மொழியில் ளகரமும் ணகரமும் நன்`கு தொடர்புபட்டவை ஆகும்.

ஆள் என்பதிலிருந்து திரிந்துவிட்ட ஆண் என்பது, பிற்கால ஆட்சியைக் குறிக்கிறது.  இது, பெண் ஆட்சி முந்தியது என்பதையே காட்டுகிறது.

அறிந்து இவ்வரலாறுகளை நமக்குக் காட்டும் தமிழ்மொழியைக் கொண்டாடுவோம்.


7 கருத்துகள்:

Divya சொன்னது…

தமிழ் மொழியை கொண்டாடுவத்தோடு, பெண்களையும், பெண்மையையும் கொண்டாடுவோம்.

Divya சொன்னது…

மறுபடியும் பெண்கள் ஆட்சி மலர வேண்டும்

Divya சொன்னது…

பல்லாயிரம் ஆண்டுகள் பெண்ணாட்சி நீடிக்க வேண்டும்

SIVAMALA சொன்னது…

திரு திவ்யா அவர்களுக்கு நல்வரவு. நாம் உணர்ந்தபடியே பெண்ணாட்சி தொடர்ந்து சிறக்கும். இதில் ஐயமில்லை. பெண்ணாட்சியைக் கொண்டாடுவோம்.
நன்றி. நன்றி.

Divya சொன்னது…

பெண்கள் ஆட்சி செய்யும் போது, உலகத்தில் சண்டைகள் நடக்காது. அணு ஆயுதங்களுக்கு வேலை இருக்காது. உலகம் அமைதிப் பூங்கா வாக இருக்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை இருக்காது. நல் உலகை படைக்க முயற்சி செய்யும் பெண்களின் இப்பணிக்கு ஆண்கள் அடிமையாக இருந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

SIVAMALA சொன்னது…

திவ்யா அவர்கள் கூறியவை நல்ல பொருள்சுமந்த கருத்துகள். அரிவையர் ஆட்சி அமைதிப் பூங்காவையே கொண்டுதரும், நம் மனிதகுலத்துக்கு. இதில் ஐயமில்லை. ஆண்களும் அந்த அபூர்வ சிந்தாமணிகளோடு அடியொற்றி நடைபோட்டு, அகிலமனைத்திலும் ஆர்ந்த அமைதியை ஆக்குதற்கு ஆதரவு அணியாகச் செயல்படுவர் என்று அனைவரும் எதிர்பார்க்கலாம். சிலவேளைகளில் பெண்ணாட்சி என்பது நேர்முகமாக இல்லாமல் பின்புலத்தில் ஒரு பெண்ணால் உயிரூட்டப் பெறுவதாகவும் இருக்கலாம். காலஞ்சென்ற திரு லீ குவான் யூவிற்குப் பின்னால் திருமதி லீ இருந்தது போலவேதான். திரு லீ அவர்களும் தன்னினும் அதிக கல்விச்சிறப்பை எய்திய திருமதி லீயை விரும்பி மணமுடித்துக்கொண்டார். இவரின் ஆட்சி முழுவதிலும் பின்புல அறிவுச் செல்வியாக திருமதி லீயே திகழ்ந்தார். இருவரும் ஒரு பொன்னாட்சியை வழங்கிச் சென்றனர். வரலாறு மீண்டும் நிகழும் என்பர். அதுபோலவே வேறு சூழ்நிலைகளிலும் பெண்ணாட்சியே பூத்துக் குலுங்கும் என்பது ---இனியும் வரும், யாவருக்கும் இனிமை தரும். அவ்வாறே நடைபெறுவதாகுக.
திரு திவ்யா அவர்கட்கு நன்றி, வணக்கம், வாழ்த்துகள். மயக்கமுற்றுக் கலங்கும் இவ்வுலகில் தயக்கமின்றிக் கருத்துகளை முன்வைப்பது ஒரு பெருந்தொண்டு ஆகும். வருக வருக. சீரும் பெருகிவழிக.

Divya சொன்னது…

முற்காலத்தில் நடந்த பெண்களாட்சி பற்றிய கதைகள் இருந்தால் பதிவிடலாம்.