வியாழன், 15 பிப்ரவரி, 2018

கைவைத்தியம்

கைவைத்தியம் என்ற கூட்டுச்சொல் பயன்படுத்தப்படுவதை
யாம் கேட்டிருக்கிறோம். இது என்ன மருத்துவநூலில் சொல்லப்
பட்டதா என்று கேட்டால், இல்லை, நமக்குத் தெரிந்த
கைவைத்தியம்தான் என்று பதில்வரக்கூடும். அதுவும் இத்தகைய
வழக்கை அறிந்தவர்களிடமிருந்து.

கை என்பதை முன்னொட்டாகப் பெற்ற கூட்டுச் சொற்கள்
பலவாகும்.  இவைபோலும் வழக்குகளைத் தொகுத்துப்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட நூல்களை
(அதாவது அகரவரிசைகளைப்) பார்த்துள்ளோம்.

மருத்துவரிடம் சென்று அவர்தம் சோதனைக்கு உட்பட்டுப்
பெற்றுவரும் மருந்துகள், கைவைத்தியம் என்னும் சொல்வழக்கில்
அடங்கமாட்டா.  அவை முறைப்படியான மருத்துவத்தில்பால்
படுவன ஆகும்.

கை என்பது பக்கம் என்றும் பொருள்படும்.  முறையான
ஒன்று இயக்கத்தில் இருக்கும்போது, அதன் ஆளுமையோ
தொடர்போ இன்றித் தனியாக நடைபெறுவதைக் குறிக்கவும்
கை என்ற முன்னொட்டு பயன்படுகிறது.  வைத்தியம் என்பதற்கு
இங்கு நலம்பெறும் பொருட்டு மேற்கொள்ளப்படுவது என்பது
பொருளாம்.

கைப்பொருள் என்ற தொடர், பயன்படுத்துவதற்கு உதவியாகத்
தன்னிடத்திலேயே கிட்டும் பொருள் என்று அர்த்தப்படும்.
அது பணம் - காசாகவோ நகைநட்டு என்பதாகவோ இருக்கலாம்.

"வீட்டு மருந்து" என்பது :ஹோம் ரெமடி"  என்ற ஆங்கில
வழக்கின் மொழிபெயர்ப்பாகத் தெரிகிறது.  இதை பாட்டி
வைத்தியம் என்றும் கூறுவதுண்டு.  பாட்டி வைத்தியமும்
கைவைத்தியம் ஆகக் கூடும். பயன்பாட்டில் ஒன்று
மற்றொன்றை உட்படுத்தி நிற்கும் என்பது தெளிவு.

பிழைத்திருத்தம் மீள்பார்வையில்.

கருத்துகள் இல்லை: