திங்கள், 5 பிப்ரவரி, 2018

நீரிழிவு நோயாளிகள் சபரிமலை செல்லுதல்.


சபரிமலை செல்லுதல்.

சபரிமலை சென்று ஐயப்பனைத் தெரிசனம் காணச் செல்வோருள் நீரிழிவு நோயாளிகளும் சிலர் உள்ளனர்.

இவர்களும் பயணச் சீட்டு எடுத்து சபரிநாதனைக் காணச் செல்கிறார்கள். சிங்கப்பூரிலிருந்து செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.  கால்களில் மிதியடி (செருப்பு) இல்லாமல் இங்கிருந்து கிளம்பவேண்டும். செலவுக்குரிய அங்கிகளை அணிந்துகொண்டு (கருப்பு உடை)  மாலையுடன் சபரி சென்று அடையவேண்டும்.

இடையில் செருப்பின்மையால் தொல்லை:  பல தூய்மையற்ற இடங்களிலும் இவர்கள் நடக்கிறார்கள். எடுத்துக்காட்டாகக் கழிவறை: சிங்கப்பூரில் பெரிதும் தொல்லை விளைவதில்லை. பின்பு வானூர்தி நிலையத்திலிருந்து சபரிவரை சற்று அதிகமான அழுக்கிடங்களில் நடமாடவேண்டியும் ஏற்படலாம். பல முறை கழிவறைக்குச் செல்லுகை தேவையாகலாம். அதுவும் நோயாளிகளுக்குச் சிறுநீர் கழிப்பது முக்கியமாகும்.

சபரி மலையேறவேண்டிய அடிவாரத்திலிருந்து கோவில் வரை:   கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற ஒரு திடநிலையில்தான் போகவேண்டியுள்ளது. இங்கு காலொடிந்தவர்களும் காயப்பட்டுப் படாதபாடு படுகிறவர்களும் பலராவார்.

இந்தக் கட்ட நெட்டூறுகளெல்லாம் இவர்கள் இட்டப்பட்டு மேற்கொள்வனவே ஆகும்.  இறைவனை எப்படிச் சென்று தரிசிப்பதென்பது அவர்கள் சொந்த விருப்பத்தில்பால் மேற்கொள்வது ஆகும்.

எமக்குத் தெரிந்த ஒரு வயதான அம்மையாருக்குக் காலில் சிறுவிரலுகருகில் ஒரு கல் குத்தித் தோலைப் பெயர்த்துவிட்டது.  நோய்நுண்ணியிர்கள் உள்ளே புகுந்து புண்ணாகி, விரலை வெட்டுவதா வேண்டாமா என்று மருத்துவர்கள் முடிவு மேற்கொள்ளவேண்டும் என்ற நிலை. நோயணுக்களைக் கொல்ல அணுக்கொல்லித் திரவங்களை உள்ளேற்றி வைத்தியம் பார்த்துக்கொண்டுள்ளனர். பெரும்பாலும்  விரல் போகும் என்ற அச்சம் கப்பிக்கொண்டிருந்தாலும் ஐயப்பனருளால் போகாது என்று நினைக்கிறோம்; காலிலும் வலி மிக்குள்ளது.

அடுத்தபயணத்துக்கு மாலை போட்டுக்கொண்டு சிங்கப்பூரிலே உள்ள ஐயப்பன் திருமுன்பாகத் தம் கடனைச் செலுத்திவிடலாம் என்று இவ்வம்மையாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற சாமிகள் ஏற்பரோ என்பதன்று கேள்வி. ஐயப்பன் என்பவர் கடவுள்.  அவர் தூணிலும் உள்ளார். துரும்பிலும் உள்ளார்.  சிங்கையிலும் அருள்தருகிறார்.  இங்குமிருப்பார்.  இதிலென்ன ஐயம்? 

கருத்துகள் இல்லை: