வியாழன், 8 பிப்ரவரி, 2018

அம்பு ஆரம்பம்: தொல்பழந்தமிழ்



ஆரம்பம் என்ற சொல்லுக்குத் தொடக்கம் என்பதே வழக்கில் நாமறியும் பொருளாகும்.

ஆனால் இதன் சொல் புனைவின்போது பயன்படுத்திய அடிச்சொற்கள் எத்தகு பொருளன என்பதை ஈண்டு அறிந்துகொள்வோம்.

ஆர்தல் என்பது பல்பொருளொரு சொல். அதன் பொருள்தோற்றங்களில் பொருந்துதல் என்பதும் ஒன்றாகும்.   இந்த “ஆர்” என்னும் சொல்லே "ஆரம்ப"த்தின் முன்னிலை அடியாய் உள்ளது.

இதற்கடுத்தது அம்பம் என்பது.

அம்பம் என்பதில் சொல்லிறுதியில் இருப்பது அம் என்னும் விகுதி. ஆகவே அதைப் பிரித்து எடுத்துவிடும்போது,  எஞ்சி நிற்பது:  அம்பு என்பதாகும்.

அம்பு என்ற சொல் ஒரு சுட்டடிச் சொல்.  அ என்ற சேய்மைச் சுட்டும்  பு என்ற விகுதியும் இதில் உள்ளது.

அந்தக் காலங்களில்,  -  இப்போதும் ,  எய்யப்படும் கூர்மையான கோல்,  இங்கிருந்து அங்கு செல்கிறது.    இப்படி அங்கு போய்க் குத்துவதால் அது “  அம்பு “  ஆயிற்று.” இது அம்பினை எய்தவனின் கோணத்திலிருந்து உண்டாகிய சொல்.  மேலும்  அங்கு போகும்படி விடுக்கப்படுவது என்பதே அதன் அடிப்படைக் கருத்து.   அ + பு = அம்பு ஆயிற்று.   

அ+பு = அப்பு என்றொரு சொல்லும் உள்ளது.  அது வினையாகப் பயன்படுகிறது.  அப்புதல் என்பது அந்த வினைச்சொல்.  அதே துண்டுகளைக் கொண்டு புனையப்பட்ட இந்த அம்புச் சொல்,  பகர ஒற்று புகுத்தப்படாமல் மகர ஒற்றுடன் விளங்குவதாகிறது. ஆகவே அது அம்பு என்றாகி, அப்புவிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது.  இது புணர்ச்சியில் மெலித்தல் விகாரம் எனப்படும்.

முழுச்சொற் புணர்ச்சிகளிலிருந்து சற்று வேறுபட்டவை சொல்லமைப்பில் 
வரும் புணர்ச்சி. இதையாம் விளக்கியிருக்கிறோம்.  முன் இடுகைகள் காண்க.

இது செ+ பு =  செம்பு, என்பது போல.  இரு+பு = இரும்பு எனினுமாம். இரும்பு என்பதில் பொன் என்னும் சொல் குறுகிப் பு என்று விகுதியாய் நின்றது.

இங்கிருந்து ஏவப்படும் அம்பு அங்குச் சென்று பொருந்துவதே எதிரியைத் தண்டிப்பதன் தொடக்கம் ஆகும். விளக்கத்தின்பொருட்டு இங்கு அம்பு என்ற போர்க்கருவி குறிக்கப்பெறுகிறது.  ஆனால் சொல்லமைப்பில் அங்கு போவது எதுவும் அ+ பு என, அங்குப் பொருந்துவதே. அம்பு என்பது காரண இடுகுறிச் சொல்.

இதில் இங்கிருந்து அங்குச் செல்வது என்பது சொல்லாக்கச் சிந்தனையாய் இருக்க, அது அம்பு என்னும் போர்க்கருவிக்குப் பெயராய் இடப்பட்டுள்ள படியால் தன் பொதுப்பொருளை இழந்து காரண இடுகுறி ஆகிவிட்டாலும், ஆரம்பம் என்னும் சொல்லில் அம்பு என்பதை அடிப்படை அமைப்புப் பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்; அல்லது காரண இடுகுறியாகிய அம்பாகவும் எடுத்துக்கொள்ளலாம்.  ஏவப்படும் அம்பாக மேற்கொள்ளின், புரிந்துகொள்ள எளிதாக்க்கூடும். அப்படிக்கொள்ளாமல் அதைச் சுட்டடியாகக் கொள்வது சொல்லியல் அறிஞனின் திறம் காட்டும்.

இனி, ஆர்+ அம்பு+ அம் அல்லது ஆர்+ அ + பு+ அம் என்பது,  இங்கிருந்து அங்குப் பொருந்துதல் என்று பொருள்பட்டு,   “தொடக்கம்” என்பது அதன் வழக்குப் பொருளாகிறது.  ஆக அது வினைப்பெயர் அதாவது தொழிற்பெயர் ஆகும்.

இதை அம்பு என்ற ஏவுபொருளின் அடிப்படையில் உணர்வது எளிது.  அம்பு இங்கிருந்து புறப்பட்டுவிட்டால் போர் தொடங்கிற்று; அது தொடக்கம்  என்று பொருளாகிவிடுகிறது.

தமிழ் மொழியும் சீனமொழிபோல் ஓரசைச் சொற்களில் தொடங்கிப் படிப்படியாக சொற்கள் அமைந்த வரலாற்றையே காட்டவல்லது ஆகும்.  அம்பு என்ற கருவியும்  அ -   போ  :  அங்கு போவது, அ -    பு  அங்கு புகுவது,    -  பு:   அங்கு புறப்படுவது  என்ற ஒன்றுடன் இணைந்து  இறுதியில் புணர்ச்சியில் மகர ஒற்றைப் பெற்று,  இன்று அம்பு என்றே ஒரு சொல்லாய் நிற்கிறது.  அதாவது ஓரசைச் சொற்கள் இணைந்து கூடிப்  புணர்சொல்லாய் மாறி  நம்மை வந்தடைகிறது. இது தமிழ்மொழியின் தொல்பழங்காலத் தோற்றத்தை எமக்கு விளக்குகிறது. உங்களுக்கும் விளங்கிவிட்டிருக்கும் என்பது எம் துணிபு ஆகும்.   

எழுத்துக்கள் தவறுதலாகப் புள்ளி பெறுதல்
மேலேற்றியபின் உண்டான கோளாறு ஆகும்.

பிழைத்திருத்தம் பின்.

கூடுதல்  மெய்யெழ்ய்த்துப்புள்ளிகளைத் திருத்தியுள்ளோம்.
அவை மீண்டும் தோன்றக் கூடும். கவனம். நன்றி.  05012121.

கருத்துகள் இல்லை: