இப்போது ஆவேசம் என்ற சொல்லினமைப்பைத் தெரிந்துகொள்வோம்.
ஏதேனும் ஒரு காரணத்தால் உங்களுக்குக் கோபம்1 வந்துவிடுமானால் நீங்கள் ஆ என்ற ஒலி செய்துகொண்டு எழுந்து அந்தக் கோபத்தை உண்டாக்கியவனை ஏசுவீர்கள். ஆ என்பது ஒரு சொல்லன்று; இஃது ஓர் ஒலிக்குறிப்பு என்று இலக்கணியர் சிலர் சொல்வர். பிறமொழிகளிலும் இஃது ஓர் ஒலிக்குறிப்பு எனப்படுதல் உண்டு.மனிதன் செய்யும் எல்லா ஒலிகளும் அவன் நாவிலிருந்து எழுபவையே ஆகும். அதைச் சொல் என்றாலும் ஓர் சொல் அன்று, ஓர் ஒலிக்குறிப்புதான் என்றாலும் இதிலொன்றும் பெரிய பேதம்2 இல்லை. ஆவேசம் என்ற சொல் அமைப்பைத் தெரிந்துகொள்வதற்கு இந்தப்பாகுபாடு எவ்வாற்றானும் துணைசெய்யாது. எனவே இங்கு ஆ என்பது சொல்லெனினும் ஓர் ஒலிக்குறிப்பெனினும் ஒரு
முன்னொட்டு எனினும் எமக்கு உடன்பாடே ஆகும்.
ஆ+ ஏசம்: ஆவேசம்.
இங்கு விதிகளின்படியே வகர உடம்படு மெய் தோன்றிச் சொல் அமைந்தது.
இதை முன்பும் யாம் விளக்கியதுண்டு.
அறிந்து இன்புறற்பாலதிதுவாம்.
-------------------------------------------------
அடிக்குறிப்புகள்:
1 கோபம்: கூம்பு > கூபு > கோபு+அம் = கோபம். கோபத்தில் மனிதன் செவ்விய நிலையினின்று கூம்பிவிடுகிறான். கூம்புதலாவது : ஒடுங்கிப்போதல்.
2 பேதம் : பெயர்தல் : பெயர் > பேர்> பே > பே+து+ அம். சுருக்கமாக: பெயர்தல் > பேர்தல்> பேதம். அல்லது பெயர்தம் > பேதம் எனினுமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக