செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

சதிர் என்பதன் சொல்வளர்ச்சி.



நள் > நடு என்பதினின்று வளர்ந்த சில சொற்களை நாம் முன் 
இடுகையில் கண்டு உவந்தோம்.   

அதேதொடர்பில் சிலவற்றை இன்று தெரிந்துகொள்வோம்.

தமிழில் நடு,  நடுங்கு, நட என்பன மிகப் பழங்காலச் சொற்களாகும்.   ஆடை நெய்வதற்கு அறியாமுன் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்த முந்தியல் மாந்தன், இலை தழைகளைக் கோத்து அணிந்துகொண்டு குளிரால் நடுங்கியிருப்பான் என்பது கற்பனையன்று.  இந்த வேதனையை மாற்றுவதற்கே அவன் அரிதின் முயன்று ஆடைகளை உருவாக்கினான்.  இன்றோ உடைநாகரிகம் என்பதுபற்றிப் பேசுவதற்கு நமக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

இதேபோல் மிக்கப் பழமையிலே அவன் நடத்தலைக் கற்று வல்லவனாய் இருந்தான் என்பதும் கற்பனையன்று.  ஒரு குறிப்பிட்ட அகவையை அடைந்தவுடன் குழந்தை நடக்கத் தொடங்கிவிடுவதால் நட என்பதும்  ஒரு முந்தியல் மாந்தனின் சொல் என்பது அறியப்படும்.  ஊர்திகளைக் கண்டுபிடிக்கா முன் அவன் எங்கும் நடந்தே திரிந்தான்.

கருத்தறிவிப்பு வளர்ச்சி:

ஒருவன் குளிரால் நடுங்கினான் என்பதைத் தெரிவிக்க அதேபோல் நடுங்குதலைச் செய்துகாட்டத் தொடங்கியபோதே நடிப்பு என்பது தொடங்கிவிட்டது.

அதேபோல சிலர் அழகாக நடந்தனர்.  ஒருவனின் நடை சிறப்பான அசைவுகளுடன் அமைந்திருந்ததை இன்னொருவனுக்கு அறிவிக்க நேர்ந்தபோதே நட என்பதிலிருந்து நடனம் என்பதும் தொடங்கிவிட்டது.

ஒருவன் செய்ததுபோல இன்னொருவனுக்குச் செய்துகாட்டியபோதே நடிப்பும் தொடங்கிவிட்டது. இதில் என்ன சிறப்பு என்றால், சிலரே இப்படிச் செய்துகாட்டுவதில் வல்லவராய்த் திகழ்ந்தனர்.  இதுவும் கருத்தறிவிப்பில் ஒரு
வளர்ச்சிநிலையே ஆகும்.

நடு> நடுங்கு என்பதுடன் நடிப்பின் தொடர்பு:
தமிழின் தொல்பழமைச் சான்று:


சொல்லமைப்பைப் பொறுத்தவரை,  நடப்பதிலிருந்தும் நடுங்குவதிலிருந்தும் நடிப்பு, நடனம் முதலியவை தோன்றின.  இன்றும் தமிழில் நடனம், நடிப்பு, நாட்டியம் முதலியவை  நடு என்ற மூலத்துடன் தொடர்பு காட்டிக்கொண்டிருப்பது தமிழின் தொல்பழமையை விளக்கிக்கொண்டிருக்கிறது.

நடு > நடுங்கு.
நடு > நட
நடு > நடி.
நடு > நடு+ இயம் =  நாட்டியம். (முதனிலை திரிந்து விகுதிபெறுதல்).

முதனிலை திரிதல்:  ந என்ற முதலெழுத்து நா என்று நீளுவதன்மூலம் திரிந்தது.  விகுதி : மிகுதி -  சொல்லின் நீட்சி.
( நடி+ இயம் =  நாட்டியம் எனினுமது).
நடு+ அன்+ அம் =  நடனம்.  ( நடி+அன்+அம் = எனினுமது).


நடு> நடு+ஆங்கு+அம் = நட்டுவாங்கம்.

இத்தகைய சொற்கள் உண்மையில் கருத்துச் சுருக்கங்கள்:  “அங்கே ஆடிக்கொண்டிருக்கிறார்கள் “ என்பதே கருத்து.

நடு என்பது நட்டு என்று இரட்டித்தது.   இது இங்கு வந்த திரிபு.  ஆங்கு என்பது வாங்கு என்று வகர உடம்படுமெய் பெற்றுத் திரிந்தது.   இதில்  ஆங்கு
என்பதை ஆ + கு என்றும் பிரித்துரைக்கலாம்.  ஆ - சுட்டு, அங்கே என்பது.  கு என்பது சேர்விடம் குறிக்கும் ஓர் உருபு.   இங்கு ஆ என்பதனுடன் இணைந்து
நின்றது.   இறுதி விகுதி அம் என்பது.

இன்னோர் ஆய்வாளர் வந்து நட+அன்+ அம் எனினும் அதேதான்.  நட என்பதும் நடு என்பதிற் பிறந்த சொல்தான்.  எனவே இதுவுமது.

நடு > நடு+அன்+ ஆர் =  நட்டுவனார்.
“ஆட்டத்துக்கு அவர்” என்பது கருத்து.( சொல்லமைப்புப் பொருள் ) அவர் நடன ஆசிரியர் என்பது வழக்குப் பொருள்.  காரண இடுகுறி ஆகிறது.

காரணம்:  ஆட்டம்.
இடுகுறி:  ஆசிரியர்.  ( என்றால் அது உலகவழக்கில் நடனஆசிரியனுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது) எனற்பாலது பொருள்.

அசைவுக் கருத்துகள்:

உடலை நடுக்கிக் காட்டுவதும் ஒரு நாட்டியம் அல்லது நடனமே.  நோயினால் நடுங்குவதுபோல் செய்வதும் ஒரு நடிப்பே. மொத்தததில் இவை அசைவுச் சொற்களே. A transformation in word formation.

சதிர் என்ற சொல்லும் இங்கனம் அமைந்ததே ஆகும். ஆடும்போது உடல் அதிர்ந்து  அசைவுகள் உருவாகின்றன. இவ்வசைவுகள் நேரப்பகவுகளை ஒட்டி முறைப்படுத்தப்பட்டு வெளிக் கொணரப் படுகின்றன.  ஆகவே இதுவே நடனம், நாட்டியம், நட்டுவாங்கம் ஆகின்றது.   பெரும்பாலும் இவ்வசைவுகள்  இசையுடன் ஒருங்குசெல்கின்றன.

முறைப்பட்ட அதிர்வுகள் சதிர்.

ஆகவே அதிர்தல் முறைப்படுத்தப்படுகிறது. அதுவே சதிர் ஆகிறது.   அதிர் > சதிர்.
சதிர் என்பது முறைப்பட்ட அதிர்(வு).
நடனம் என்பது நடு> நடுங்கு என்பதுடன் தொடர்பு உடைமை போலவே இதுவும்.

பொதுவாக எல்லாம் அசைவுகளே.

சிறப்பியல்பில் வேறுபடுவன.  ஆயினும் மொழியில் சொற்படைப்படைப்பில் பொதுவிலிருந்தே சிறப்புக்குச் செல்வது காணலாம்.

அகர வருக்கம் சகர வருக்கமாம் என்பது முன்னர்
நிலைநாட்டப்பட்டது.  பழைய இடுகைகளை நல்லபடி
வாசித்துக் கற்றுக்கொள்ளலாம்.

அடிக்குறிப்புகள்.
இந்த இடுகையில் வந்துள்ள அருஞ்சொற்களுக்கான
விளக்கம்:

முந்தியல் மாந்தன் - primitive man
உடைநாகரிகம் - fashion of apparel.

Note:  Some extra dots  and changes (errors )
introduced by  hackers after posting  have
been rectified.  These may reappear.
Pl read with caution. Inconvenience regretted.


கருத்துகள் இல்லை: