வியாழன், 1 பிப்ரவரி, 2018

அகத்து இருந்தவர் அகத்தியர்,



இன்று அகத்திய முனி பற்றித் தெரிந்துகொள்வோம்.

அகத்தியர் பற்றி இங்கு முன்பும் எழுதப்பட்டுள்ளது, அவற்றையும் சேர்த்துப் படித்துச்  சிந்தனையை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

அகத்தியர் வெளிநாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர் என்பது கதை. எல்லாக் கதைகளையும்போல இந்தக் கதைக்கும் வரலாற்றுப் படியிலமைந்த ஆதாரங்கள் ஏதுமில்லை.  வெளியிலிருந்து வந்துமிருக்கலாம். வெளியிலிருந்து யாரும் வந்து தங்குவது இயற்கைக்கு மாறானதன்று.  விவேகான்ந்தர் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தாலும் இங்குத் தங்கவில்லை.

ஆனால் யாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதென்னவெனில்,  அகத்தியர் என்பது உள்நாட்டினர் என்று பொருள்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது. அகம் என்றால் உள் என்று பொருள். வேறு பொருளும் உள்ளதென்றாலும் இதற்கு வெளி என்ற பொருளில்லை.  ஆகவே அவர் உள் நாட்டினர் என்பதைச் சொல்லின் பொருள் நமக்குத் தெரிவிக்கிறது.

அவர் எந்த ஊரினர், தாய்தகப்பன் யார் என்று பிற்காலத்தில் அறியாத நிலையில் அவர் வெளிநாட்டினர் என்று சிலர் கருதி, அதையே ஒரு கதையாக்கியிருக்கலாம். ஆனால் இக்கதை அகத்தியர் என்ற சொற்பொருளுக்கு மாறானதென்பதைத் தமிழறிஞர்கள் சிந்தித்துக் கூறவில்லை என்று சொல்லலாம்.

அகத்து இருந்து  (தமிழகத்திலே இருந்து) ஆசிரியராய் விளங்கியவரே அகத்தியர் எனலாம்.

வெளியிலிருந்து வந்தவராயின் எந்த மொழி பேசினார், எந்த மொழிக்கு உரியவர் என்பதற்கான கதைகூட இல்லை.

கடல்குடித்த:   குடித்த என்ற எச்சவினை  நீர்ப்பொருளைக் குடித்த என்று பொருள்தரலாம். எனினும்,  குடி+து+ அ =  குடித்த  என்பது குடியை உடைய என்றும் பொருள்தரும்.  அவர்தம் வீடு அல்லது அவரைச் சேர்ந்த குடிகள் கடற்பக்கமாக இருந்தனர் என்று பொருள்தர வல்லது இதுவாகும்.

இவர் மாணாக்கர் தொல்காப்பியர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதுவும் பழங்க்தைகளிலிருந்து வருவதே.

கருத்துகள் இல்லை: