அநாதி என்று எழுதப்படும் சொல் இன்று இங்கு சிந்திக்கப்படும் சொல்லாகிறது.
இதை முன் அ+ நாதி பிரித்தனர்.
வெளியாரிடம் சென்று யான் இன்ன குடியைச்
சேர்ந்தவள் என்று சொல்வதற்கு ஆதாரம் இருக்குமானால், அவள் நாதி உள்ளவள்.
நா > நாதி. இங்கு நா :
நாக்கு; தி ~ விகுதி.
தான் யார் என்று சொல்லும் அறிகுறிகளும்
அடையாளங்களும் ஆகிய தற்குறிப்பு நாவினாலே சொல்லப்படுவதாதலின்,
நா என்ற நாக்குக் குறிக்கும் சொல்லே இதற்குப் பயன்பட்டது.
மிகப்பழங்காலத்தில் எழுத்துக்களும்
தாளும் இல்லை. கணினியும் இல்லை. ஒரு மனிதனின் தன் அடையாளத்தைத் திறமாக முன்வைக்கும் அட்டைகளை இப்போதுபோல் யாரும் வெளியிட்டதுமில்லை. தன்னை அறியாதவரிடத்து முன்நிற்குங்கால் நாவே துணைக்கருவி. அதனாலேதான் ஒருவனின் அடையாளம் திகையும். திகையும் என்றால்
கேட்போன் தீர்மானிப்பான் என்பது. அவனை அறிந்தோரிடத்து அவன் உறையும் காலை அவனது அடையாளம் ஒரு பிறச்சினை (பிரச்சினை) ஆகமாட்டாது.
நாவால் திகைக்கப்படுவது "நாதி" என்`கையில்
தி ஒரு விகுதி எனினும் அமையும்.
இது நாவால் போற்றப்படுவோன் நாதன் ஆனதுபோல. நா : நாவின்; து : உடைய; அன்: அவன். போற்றப்படும்
என்பதை விரித்துக்கொள்க. நாவினதானவன் எனினும்
அமையும். ஈண்டும் எழுத்தால் போற்றப்படுவது பின்நிகழ்வாகும். இறைப்பெயர்கள் பல்வேறு
காரணங்களால் அமைந்துள்ளன; அவற்றுள் அவன் நாவிலிருப்பவன், நாவினாலுரைபெறுவோன் என்ற கருத்து இரண்டு மொன்றாம்.
நாதன்: மேலும் அறிய: http://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_32.html
அல் என்பது அ~ என்று கடைக்குறையும். குறைந்து அன்மை உணர்த்தும்.
அ+நாதி = அநாதி. ( நாதி அற்றவன் ).
இறைனுக்கு யாருமில்லை; தாயுமில்லை; தந்தையுமில்லை. அவன் ஒற்றையன்.ஆகையால் அநாதி.
தத்துவ நோக்கில் இறைவனுக்குத் திணையுமில்லை. (யாம் இங்கு இலக்கண விதியைக் குறிப்பிடவில்லை.) ஆதலின் நா+து+அன் என்பதில் திணைமயக்கம் உள்ளதெனினும் அஃது ஒரு பொருட்டாகாது என அறிக. அது நா+த் + உ + அன் எனக்கொண்டு, த்: இடைநிலை; உ: சாரியை; அன் - விகுதி ஆண்பால் எனினும் ஆகும். எப்படி விளக்கினும் நாதன் என்பது நாவின் அடிப்படையில் எழுந்த சொல்லே ஆகும். து என நிறுத்துவது திணைமயக்கம் எனினும் பெரிய பழுதொன்றுமில்லை. உ என்று விளக்கி முன்னிருப்பது என்று கூறக்கூடும். அங்கனம் திணைமயக்கம் தீரும். இவை விளக்கவேற்றுமையன்றி வேறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக