வியாழன், 22 பிப்ரவரி, 2018

அதுள் > அதுர் > சதுர். சதுரம்



சதுரம் என்ற சொல்லுக்கு “ நாற்கோணம்”  என்று தனித்தமிழிற் சொல்லலாம்.  கோணம் என்பதும் நல்ல தமிழ்ச்சொல்லே ஆகும்.  நேராக வந்து திரும்பிச் செல்லுவதால் , அதாவது கோணிக்கொண்டு செல்வதால் அது கோணமாயிற்று.

சதுரம் என்பதில் கோணத்திற்கான எந்தக் கருத்தும் அமைந்திருப்பதாகத் தெரியவில்லையே; எப்படி இது நாற்கோணம் என்று பொருள்படுகிறது என்று ஆராய்வோம்.

நிலத்திற்கு நாற்புறமும் வேலியமைக்கும்போது அது சதுரமாக அமைவதுண்டு. சதுரத்திற்கு நான்`கு பக்கங்களும் ஒதத நீளமுள்ளவையாய் இருக்கவேண்டும்.  ஒருபக்கம் நீட்டமாகவும் இன்னொன்று குட்டையாகவும் இருப்பதை இப்போது சதுரம் என்பதில்லை.  பழங்காலத்தவர் எவ்வாறு கருதினர் என்பது தெரியவில்லை. ஆனால் இந்தச் சொல் அமைந்த காலத்தில் ஓர் எளிமையான கருத்தினடிப்படையில் படைக்கப்பட்டு,   நாளேற நாளேறப் பிற கருத்துகளால் பின்னப்பட்டுச் சொல் அமைந்தது.  எடுத்த எடுப்பிலேயே பல கருத்துகளும் பின்னியமைந்த சொற்களைச் சொல்லியலில் காணபது அரிது.

நாற்புறமும் வேலி அமைக்கப்பட்டவுடன் நிலம் அதனுள் அடங்கிவிடுகிறது.   ஆடுகளுக்கோ அல்லது கோழிகளுக்கோ அடைப்பு அமைப்பதானாலும் நாற்புறமும் தடைகளை அமைத்து  அவை ஓடிவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள்.  அவை அதனுள் இருந்துவிடும்.

கருத்து:  அது, உள் என்ற இரண்டுசொற்களிலே அமைந்துவிடுகிறது.  அது என்பது அடைப்பையும் உள் என்பது அடைக்கப்பட்ட பொருளையும் குறித்தாலும் இந்த நிலைக்கு வழிசெய்தது நாறபுறமும் இருக்கும் அடைப்புகளே ஆகும்.

அது + உள் என்பது  அதுள் என்று குறுகிற்று. இரண்டு உகரங்களில் ஒன்று வீழ்வது இயல்பு.

உள் என்பது பின் உர் என்று திரிந்தது.

அது என்பது சது ஆனது. இது அகர வருக்கம் சகர வருக்கமாகும் திரிபு.

அதுள் > அதுர் > சதுர்.

இஃது அம் விகுதி பெற்றுச் சதுரம் ஆயிற்று.

பெரும்பாலும் லகரமே ரகரமாகத் திரியும். எனினும் ளகரமும் லகரமும் ஓரினமானவை ஆதலின்,  இரண்டுமே பொருந்தியவிடத்து ரகரமாகத் திரிதற்குரியவை.

இதையே ஆயுர்வேதம் என்ற சொல்லிலும் காணலாம்.

ஆயுள் -  ஆயுர்.

வேய்+து+ அம் =   வேதம்.

ஆயுளைக் காத்துக்கொள்ளற்குரிய வழிமுறைகளைக் கூறும் நூல்.   வேயப்பட்டது அல்லது செய்யப்பட்டது.

ஒரு சதுரம் நாற்புறத் தடைகளால் பொருளை உள்ளடக்கிவிடுகிறது.  இதுவே சொல்லமைப்புக் கருத்து.  நான்`கு பக்கங்களும் ஒத்திருக்கவேண்டுமென்பது  பின்னர் அடைந்த கருத்து வளர்ச்சி ஆகும்.




   

கருத்துகள் இல்லை: