வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ஒரு மூலச்சொல்; பல பொருள்: நள் - நளி

ஓர் அடிச்சொல்லுக்கு ஒரே பொருள்தான் இருக்கும்
என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது
தவறு என்பதை இப்போது எடுத்துக்காட்டுவோம்.
அசைவையும் அசைவின்மையையும் ஒரே
அடிச்சொல் காட்டவல்லது.



நள் என்ற அடிச்சொல் மிக்க முன்மைவாய்ந்தது
ஆகும்.நடுமைக்கருத்து, நடுதற்கருத்து ஆகிய
இவ்விரண்டும் இந்த நள் என்ற அடியிலிருந்தே
தோன்றியுள்ள படியால், இதன் முன்னிலைமை
தெளிவாகிறது.இப்போது திரிபுகளைப் பார்ப்போம்.

அடிச்சொற்கள் மிகுதி (விகுதி) பெற்றபின்பே
பொருள் வேறுபாடுகள் அல்லது பேதங்கள்
தெள்ளத் தெளிவாகிவிடுகின்றன. ஒன்றுக்கு
மேற்பட்ட பொருள்கள் உள்ள அடிக்சொல்லை
நன்`கு ஆய்வுசெய்தாலே பேதங்கள்
வெளிச்சத்துக்கு வரும்.  இவற்றைக் கூர்ந்து
கவனியுங்கள்:

நள்  >  நடு.  நடுதல் ( இது மண்ணில்
குத்தி நிற்கவைத்தலைக் குறிக்கும்.
பயிர் நடுதலையும் குறிக்கும். )

நடு > நடுதல் (வினைச்சொல்). planting

நடு > நட:   இது முன்னாகச் செல்லுதல்.

இதிற் கவனித்தலுக்குரியது என்னவென்றால்  
குத்தி நிற்றலும் முன் செல்லுதலும் ஆகிய
இருவேறுபட்டவைகளும் ஒரே அடியினின்று
அமைதல்தான். இவை முரண்மை (contradic-
tion )  காட்டுவன என்றாலும், ஒரே பொருளே
இருவகையையும் தெளியக்காட்டுகிறது.

நண்பகல் என்ற சொல்லைச் சிந்தியுங்கள். 
இது நள் + பகல் என்று பிரியும். நண்பகல்
என்பதை வேறுவிதமாகச் சொல்ல
வேண்டுமாயின்,  நடுப்பகல் என்று
சொல்லலாம்.  இங்கு நள் என்ற அடிச்
சொல்லே திரியாமலே நடு என்ற
நிலையைக் காட்டுகின்றது. 
ஆகவே  நள் = நடு என்பதை
அறியாதவரும் அறிந்தின்புற வாய்ப்பு
ஏற்படுகிறது.

இனி :
நள் > நடு > நட.
நள் > நடு > நடி.
நள் > நளி:   (  நடுப்பகுதி குறிக்கும்
சொல்)  நளிமுந்நீர் என்றால் நடுக்கடல்.
நளி > நளிதல்.  இதன் பொருள்:
செறிதல், பரத்தல், ஒத்தல்.

இதிற் போந்த எல்லாப் பொருள்களையும்
நுணுக்கமாய் ஆராய்வதே ஆராய்ச்சி
ஆகுமென்றாலும் இடமும் நேரமும்
குறைவாகுதலால் ஒத்தல் என்ற பொருளை
மட்டும் இங்கு காட்டுவோம்.

ஒத்தலாவது, ஒரு மனிதன் செய்வது
போலவே தான் செய்துகாட்டுதல்
என்பதும் ஒருவகை. அதாவது நடித்தலும்
ஒத்தலே ஆகும்.  பிறன் செயலை ஒத்தல்.  
 ஆகவே நளியும் நடியாகும்.   
 நளி > நடி > நடித்தல்.   அல்லது
மேற்காட்டியதுபோல நடு> நடி >
நடித்தல்.

நடி > நடனம்.   நடி+ அன் + அம் = நடனம். 
அன் இடைநிலை வந்தது.  அனம் என்பதை
 முமுமையாய் ஈறாகவும் கொள்ளல் அமையும்.

நடு> நடு+இயம் =  நாட்டியம்.
நடு > நட்டு > நட்டுவம்.
நடு + உ:  நடித்து முன் தோன்றுதல்.
இங்கு உ சுட்டு.  நட்டு என்று சொல்
அமையும்.

நட்டு+ அம் = நட்டுவம் என்று
படிப்படியாகவும் சென்று காணலாம்.

பிறபின் அறிந்து மகிழ்வோம். 

பிற அறிஞர் நூல்களிலும் இது
காணலாம்.

பிழைத்திருத்தம் மீள்பார்வையில். Please
reload your page if you find too many "errors".
Additional dots are generated by software.
Hopefully errors - at least some- may disappear 
when  reloaded. Auto-correct may change oru to or or Or.  Pl
read with circumspection. Sorry for inconvenience. 

கருத்துகள் இல்லை: