சனி, 17 பிப்ரவரி, 2018

பாடம், நெட்டுரு, மனனம், எதுகை,மோனை



மறதிக்கு எதிரான போராட்டம்:

பண்டை மக்கள் மறதிக்கு எதிராகப் ஒரு பெரும் போராட்டமே நடத்தவேண்டி யிருந்தது.  ஒரு பாடலைப் பலமுறை வாயாற் சொல்லி அதனை நெட்டுருச் செய்தனர் கல்வி கற்பவர்கள். அப்பொழுதுதான் பாடல் மனத்திற் பதிந்தது. இதை “  மனப்பாடம் “ என்றனர்.   மனத்திற் படிவதுதான் மனப்பாடம்.   படி+ அம் = பாடம்.  படி(தல்) வினைச்சொல்.  இது முதனிலை (முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்றது.  படி என்பதன் இறுதி இகரம் தொலைந்தது.  கெட்டது  என்பது இலக்கணச் சொலவு ஆகும்.

பாடம் என்பது மனத்திற் படியச் செய்யும் கருவியாகும்.  செந்தமிழும் நாப்பழக்கம் என்பது இதைத்தான் குறிக்கிறது. நாவினால் பலமுறை சொல்ல வேண்டும்.  சித்திரமும் கைப்பழக்கம் என்பதற்கு இது முரணழகு தருகிறது.

படிதல், படித்தல், வாய்பாடு முதலியன

படிதல் என்பது தானே சொல்லச்சொல்ல மனத்துள் படிவது.  படித்தல் என்பது படிதல் என்பதன் பிறவினை.  படித்தலாவது படியும்படி செய்தல். இரண்டுக்கும் படி என்பதே வினைப்பகுதி அல்லது ஏவல்வினை ஆகும்.  படி என்ற சொல் படு என்ற மூலவினையினின்று வருகிறது.

படு > படி.    படுதல்> படிதல். படித்தல்.

படுதல் என்ற சொல்லும் படுதல் (தன்வினை) ,  படுத்தல் (பிறவினை) என வருதல் கண்கூடு

பாடுதல் என்ற வினையும் படுதல் என்பதில் தோன்றியதே ஆகும்.  வாயிற்படு முகத்தான் வெளிப்படுவதே பாடல்,  அது பாடுவது.

எண்சுவடி முறையில் பெருக்கல் வரிகளை வாயில்பட மனப்பாடம் செய்கிறோம். அதுவே “வாய்பாடு”  ஆகும்.    வாயிற்படிந்து மனத்திலும் சென்று கணக்குப் படிகிறது.  வாய்படுதல் > வாய்பாடு.   படு> பாடு:  முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.

நடு > நடி போலவே படு> படி என்பதும்.   இத்தகைய அனைத்தும் ஒப்புமையாக்கமாகும்.  நள் என்ற அடியை விளக்கும் இடுகையை 2 நாட்களின் முன் வெளியிட்டுள்ளோம்.

நெட்டுருச் செய்வதை மன்னம் என்றும் சொல்வர்.

நெடு+ உரு = நெட்டுரு.

( நீளமாக உருப்போட்டு மனத்துள் அமைத்தல்)
மனம்> மனன்  >  மனன்  + அம் =  மன்னம்.   மனத்தில் அமைத்தல்.

திறம் > திறன்  போல மனம் > மனன்  ஆகும்.  மகரனகரப் போலி.
மன்னுதல்:  நிலைபெறுதல்.  எண்ணங்கள் நிலைகொள்ளுமிடம் மனம்.
மன்+அம் =  மனம்.

முன்னுதல் என்பது மன்னுதல் என்று திரிந்ததென்பர்.

மறதியை மாற்ற:

இன்று பாடலுக்கு அழகுறுத்துதலாக எண்ணப்பெறும் எதுகை, மோனை, தளை, தொடை முதலியவும் மறதிக்கு எதிரான போராட்டத்தின்  விளைவே
ஆகும்.

மறதி என ஒரு பாவி என்று உருவகப்படுத்தினார் வள்ளுவனார்.  மறதியை எதிர்த்துப் போராடப்போன மனிதகுலம் இன்று கணினிவரை வந்துவிட்டது.
வேறுபயன்`களும் இதில் விளைந்துள்ளன.

மீண்டும் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை: