புதன், 11 மார்ச், 2015

சாயுங்காலம்

கதிரவன் மேற்கில் சென்று  சாயுங்காலம்,  அப்படி யென்றால்  மாலை நேரம்.
இந்தச் சொற்றொடர் மிக்கச் சிறிய சுருக்கத்தை அடைந்து, "சாய்ங்காலம் "  ஆயிற்று.

வினைத்தொகையாய் வருவதாயின் " சாய் காலம்" என்று வரவேண்டும். இடையில் எழுத்துத் தோன்றுதல் இல்லை. அதாவது,  "தருபொருள்"  என்று வரும், தருப்பொருள்  என்று வருதலில்லை. பகர ஒற்று,   தோன்றாது. உறுபொருள் என்னலாம்; உறுப்பொருள் எனலாகாது. இது வினைத்தொகையின் இயல்பு.

சாய்ங்காலம் என்று "ங்"  ஒற்று தோன்றிவிட்டதால், இது  தமிழ்ச் சொல் அன்று  என்று  தமிழ்ப்புலவர்  நுழைவுக்கு மறுப்புத் தெரிவித்ததால், சமஸ்கிருதம்  அதை ஏற்றுக்கொண்டது. சாய்ங்காலே  என்றாலும்  கேட்க நன்றாகத்தானே உள்ளது.  அப்புறம் என்ன?

இந்தப் புணர்ச்சி இலக்கணத்தை வைத்துக்கொண்டு  தமிழ்  தமிழன்று என்பது
ஒரு சிந்தனைக் கோளாறு ஆகும்.

புணர்ச்சி வழு ஆனாலும் தமிழ் தமிழ்தான்  என்பதை உணர வேண்டும்.
பொழுது  சாய்ந்தது  என்பது வழக்கு.

"மாலைத் திசை தன்னில் பொழுதும் சாய்ந்ததே,
வீதி பார்த்திருந்த என் கண்ணும்  ஓய்ந்ததே !"

--- பாரதிதாசன்

சாய் என்பதை முதனிலைத் தொழிற்பெயராய்க் கொண்டு,  காலம் என்பதனோடு  கொண்டு கூட்ட  சாய்ங்காலம்  என்றாகும்  ;  ஒரு  ஙகர ஒற்று தோன்றலாம்.   சாய் என்பது ஒரு காலத்தில் மாலையைக் குறிக்க வழங்கிய ஒரு சொல்லாய் இருந்து  அது வழக்கிழந்து  அது காலம் என்பதனோடு புணர்ந்த  சாய்ங்காலம் மட்டுமே நம்மை வந்து   அடைந்திருக்கலாம்.  பல்லாயிரம் ஆண்டுகளாய் வழக்கிலிருக்கும் தமிழில்  எத்தனை சொற்கள் மறைந்தன என்பதை நாம் அறிதல் எளிதன்று.   பன்னூறு நூலகளும் அழிந்தன.  வெட்ட வெளிச்சம் என்ற தொடரில் வரும் வெட்டம்  என்பது  தனியே தமிழில் வழங்கவில்லை    ஆனால் மலையாளத்தில்  வழக்கில் உள்ளது   வெட்டம்   இவிடே  கொறவு  என்றால் இங்கே வெளிச்சம் குறைவு  என்பது.

வெள் >  வெளி  >  வெளிச்சம்
வெள்  .> வெடு  >  வெட்டம்

( சுள் >  சுள்ளி  என்பது எரிக்க உதவும் விறகு;  சுள் > சுடு > சுடுதல் ;  மற்றும் பள் படு >  படுகை;   பள் >  பள்ளம்   என்பன  ஒப்பு நோக்கி அறிக.

செந்தமிழ் நாட்டில் வழங்காமல் அதற்கடுத்த நிலப்பகுதிகளில் வழங்கினாலும் அவற்றையும நாம் வழங்கலாம் என்றார் தொல்காப்பியனார்.  செய்யுள்  ஈட்டச் சொற்களாம் இவை   தேவை எனில் வழங்குக.

    



கருத்துகள் இல்லை: