http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_9.html
தொடர்ந்து:
திருவள்ளுவர் தமிழரென்பது தெரிகிறது, ஆனால் எந்தச் சாதியினர் என்று அறிந்து கொள்ளுதல் உண்மையில் தேவையில்லாதது ஆகும் , அவர்தம் குறளில் அவர் சிறந்த கருத்துக்களையும் வழிகாட்டுதல்களையும் அளித்திருக்க, அவர் குறளைப் பின்பற்றி நடத்து கொள்வது ஒன்றே வேண்டற்பாலதாகும். எனினும் அவர் யார் என்று ஆராய்தல் இன்றி யாரும் மன நிறைவு கொள்ளார்.
இதன் காரணமாக, நாமும் இதில் சிறிது உள்நுழைந்து பார்க்க முனைகிறோம்
நம்மை வந்தடைந்த பல கதைகளின்படி (அல்லது வரலாறு எனினும் இருக்கட்டும்) அவர்தம் தந்தை ஒரு பிராமணர் என்று சொல்வர். எந்தப் புலவரின் தந்தையும் பிராமணராக இருக்கலாம். இதில் ஏதும் மறுக்கத்தக்க
கோளாறுகள் உள்ளே இல்லை. யார் அவர்தம் தாய் என்றால் ஆதி என்னும்
பறைப்பெண் என்று கதைவருகிறது. இதிலும் ஏதும் இல்லை. காரணம் ஒருவரின் தாய் பறைச்சியாகவும் இருக்கலாம். இதில் எழும் கேள்வி என்னவென்றால் ஒரு பறைச்சி எப்படிப் பிராமணனைத் திருமணம் செய்துகொண்டாள் என்பதுதான். இருக்கமுடியாது, பிராமணன் பறைச்சிகளை மணந்துகொள்வதில்லையே! ஆகவே, சேர்ந்துகொண்டதாக இருக்கவேண்டும் என்பது பெறப்படுகிறது, அது கதையில் எழும் முரண்பாட்டினைத் தவிர்ப்பதற்கான முயற்சி.
இற்றைக்கு ஏறத்தாழ 1800லிருந்து 2000 ஆண்டுகளின் முன், சாதிகளின் நிலைமை என்ன என்று முழுமையாகத் தெரியவில்லை. இப்போதுள்ளதுபோல் செட்டியார், கவுண்டர், தேவர், கள்ளர் என்றெல்லாம் சாதிகள் இருந்ததாகத் தெரியவில்லை; குலங்கள் இருந்திருந்தாலும் அவர்கள் இப்பெயர்களால் அறியப்பட்டனரா என்பது தெரியவில்லை; ஈராயிரம் ஆண்டுகளுக்கு இடையில் எப்போது எது எது ஏற்பட்ட தென்று சட்டென்று தெரிந்துகொள்ளும்படி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. வணிகர்களுக்கு அரசு எட்டிப்பூ அணிவித்து எட்டியார் என்று பட்டம் தந்து அது பின் செட்டியார் என்று (சொல் நூல் படி சரியாகத்) திரிந்துவிட்டது என்று அறிகிறோம். இப்படி இவர்கள் ஓர் அகமணக் குலமாக மாறுவதற்குக் காலம் பிடித்திருக்கலாம்; அது எப்போது "மூடிய" குலமாக மாறிற்று என்று அறிவது எளிதாக இருக்கவில்லை. போர்மறவர்கள் இருந்தனர் என்றாலும் அவர்களுக்கும் அவர்கள் தேவர்ப் பட்டத்துடன் எப்போது " நிறைவை " அடை ந்தனர் என்பதும் தெரியவில்லை. சமண மத ஆசிரியர்களுக்கும் தேவர் என்ற பட்டம் இருந்திருக்கிறது. எடுத்துக்காட்டு: திருத்தக்கதேவர்.
மிகப்பழங்காலத் தமிழகத்தில் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பகுத்து அவ்வடிப்படையில் அங்கு வாழ்ந்தோர் அறியப்பட்டனர். எடுத்துக்காட்டு: குறிஞ்சி என்னும் மலையும் மலை சார்ந்த இடங்களிலும் வாழ்ந்தோர் குறவர் என்ப்பட்டனர். குன்றுவாழ்நர் என்ற கருத்து மாறிப் பிற்காலத்தில் குறவர் என்பது ஒரு சாதியாக மாறிவிட்டது.இடம் வாழ்நர் என்ற கருத்து மாறிப் பிற்காலப் பகுப்பில் தொழில்புரிவோர் என்ற அடிப்படையில் சாதிகள் எழுந்தன, இப்படி எழுந்த பகுப்புகளையே குமுகக் கட்டமைப்புகளாக மாற்றி, அகமண முறை மேற்கொள்ளுதலுடன் சாதிகளாக நிலைநாட்டப்பட்டன. வெவ்வேறு அரசுகள் எழுந்து அலுவலர்களை அமர்த்தி அந்த அலுவலைச் செய்தவர்களும் சாதிகளுக்குள் வைக்கப்பட்டனர். இது களப்பிரர் அல்லது களப்பறையர் காலத்தில் ( பிற்காலம் ) விரிவு அடைந்தது.
பண்டைத் தமிழர் அறிந்த நிலங்கள் நான்குவகை ஆகும். (பாலை சேர்க்காமல் ). அதனால் பூமிக்கே "நானிலம் " என்ற பெயர் ஏற்பட்டது. இந்த நானிலப் பகுப்பு முன்மை உடையது என்பதை இது தெளிவாக்குகிறது.
பறையர் என்போர் இதில் எந்த நிலத்திலும் ஒடுங்கி விடாமல், எங்கும் பரவி இருந்தவர்கள். இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று பரவி வாழ்ந்ததால்
இவர்கள் "பரயர் " அல்லது பரையர் " எனப்பட்டனர். இது பின்னர் பறையர் என்று எழுதப்பெற்றது . தமிழில் சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி எழுதப் பட்டன . இவற்றுள் பரயர் பரையர் என்பன மறைந்தன .
பறை முழக்கிச் செய்தியை வெளியிடும் போதும் அதுவும் ஒரு தகவல் பரப்புதலே ஆகும். எங்கும் பரவி வாழ்ந்த காரணத்தினாலேயே இவர்களிடம் செய்திப் பரப்பு ஒப்புவிக்கப் பட்டது என்று தெரிகிறது. பறைதல் என்பதும் அடி நாளில் பரைதலாகவே இருந்தது தெளிவு. பறத்தல் என்பதும் பரத்தலின் வேறன்று. ஒரு குருவி ஒரே இடத்தில் இருப்பது அது பறத்தல் ஆகாது.
பரமன் என்ற சொல்லும் பர என்பதன் அடிப்பிறந்த சொல்லே.
ஆனால் பறையருள் எல்லோரும் பறை முழக்க வில்லை. ஒரு சிறு தொகையினரே இதனால் பிழைத்தனர் போலும். செத்துப் போனதைப் பரப்புவதும் எப்போதும் கிடைக்கும் தொழில் அன்று. போரும் அடிக்கடி வருவதில்லை . ஓர் அரசனின் காலத்தில் ஒரு முறை போர் வந்தால் அந்த ஒரு முறை பறை அடிக்கலாம். இது ஒரு பெரு வாய்ப்புள்ள தொழிலன்று. ஆகையால் இதனால் இவர்களுக்குப் பெயர் ஏற்பட்டிருக்க முன்மைக் காரணங்கள் எவையுமில்லை. மேலும் 80 க்கும் மேற்பட்ட பறையர் வகைகளில் எல்லோரும் பறை அடிக்கத் தெரிந்தவர்கள் அல்லர். பறை அடித்தததனால் பெயர் ஏற்பட்ட தென்பதை வெள்ளைக்கார ஆய்வாளரும் ஏற்கவில்லை .
ஆகவே பரையருள் பறையர் (பறை அடித்தவர் ) ஒரு சிலரே. அவர்கள் உண்மையில் common people என்ற பொருளில் இருந்து வழக்கு இழந்த பரையர் என்ற சொல்லுக்கு உரியோர். People who could be found in all places and not restricted to any one of the four kinds of lands of ancient Tamil division.
பரையர் என்பது பர + ஐயர் என்றும் பிரியும். பரந்து பல இடங்களிலும் தொழில் பார்க்கும் பூசாரிகள் என்று பொருள் கொள்ளவேண்டும் . இதுவும் இவர்களின் வரலாற்றுடன் பொருந்துவதே. சொல்லை ஆயும்போது கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு புகுந்தால் உண்மை காணுதல் கடினம் .
இதை உணர்ந்து கொண்டு மேலும் தொடர்வோம்,
பரையர் பறையர்
குறிப்பு: ஒரு ஓர் மாற்றங்கள் இரண்டு இடங்களில் மேலே கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தம்பெற்றன. ஏனைப் பிழைகள் காணப்படவில்லை. இடுகை மேலேற்றுவதற்குச் செலவு ஆவதால் பின்னர் கவனிக்கப்படும். தன்-திருத்த மென்பொருளால் அவை திரிந்துவிடலாம். கவனத்துடன் படிக்கவும். மறுபார்வை நாள் 29.12.17
.