ஞாயிறு, 8 அக்டோபர், 2017

சிந்தித்தல் சொல் அமைப்பு.



ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றும். அது எப்படி என்பதை இப்போது விளக்குவோம்.

ஒருவனைக் கையினால் தாக்குவதாயிருந்தால் தாக்குவோன் அடுத்துச் செல்லவேண்டும்.   கை எட்டும் அளவுக்குப் பக்கத்தில் செல்லவேண்டும். கை எட்டாமால் எப்படித் தாக்குவது? ஆகவே  அடுத்தல் என்பதிலிருந்து அடித்தல் என்ற சொல் அமைந்தது.

அடு >  அடி.   அடுத்தல் > அடித்தல்.

இப்போது ஒரு வினைச்சொல்லிலிருந்து  இன்னொரு வினைச்சொல் அமையுமென்பதைக் கண்டுகொண்டீர்கள்.

இதை மறுப்பதானால் அவன் மொழி முழுவதும் ஆராய்ந்த அறிவு இருப்பவனாய் விளங்கவேண்டும்.

இப்போது  நாம் எடுத்துக்கொண்ட சொல்லுக்கு வருவோம்.  

சிந்துதல் என்பது மிகச் சிற்றளவில் ஊற்றுதல்.  அதுவும் தானே வேண்டுமென்று ஊற்றாமல் நீர் விழுதல். 
குடத்தைத் தூக்கிவரும்போதே ஆட்டிக்கொண்டு வந்ததால் நீர் சிந்திக் குறைந்துவிட்டது என்பது வாக்கியம்.   நீர் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து குறைந்தது என்பது பொருள்.

மூக்குச் சிந்துதல் --  சிற்றளவில் மூக்கிலிருந்து சளி வருகையில் அதை அப்புறப்படுத்துதல்.

எப்படி ஒருமிக்க ஊற்றவில்லையோ அதே போல  எண்ணங்கள் சிறிதுசிறிதாகத் தோன்றி உருப்பெறுதலே சிந்தித்தல்.  சிந்தனை நடைபெற்றதற்கான அடையாளம் அவை வெளிப்படுகையில்தான் பிறர் அறியமுடியும்.

சிந்துதல் என்பதன் அடிச்சொல் சில் > சின்.   சில்லறை.  சின்னவன் என்னும் சொற்களை நினைவுகூருங்கள்.

சில் > சின் > சிந்து.   சின்+து. (முந்து, பிந்து, மந்திரம் முதலிய சொற்களைக் கவனிக்கவேண்டும்.

பின் > பின் து > பிந்து.
முன் > முன் து > முந்து.
மன்+திரம் > மந்திரம்.

நிலைமொழி ஈற்றில்  0னகர ஒற்று நிற்க, வருமொழி முதலில் தகர வருக்கம் வரின் றகரமாய் மாறும் என்ற இலக்கணம் முழுச்சொற்கள் வாக்கியத்தில் புணர்வதற்கான முடிபு ஆகும்.  அது இங்கு ஒவ்வாது என்பது எடுத்துக்காட்டப் பட்டது.  இதற்கு ஒரு காரணமும் கூறலாம். து என்பது ஒரு முழுச்சொல்லன்று. ஒரு விகுதியே.  ஆகவே அது "வருமொழி" ஆகாது.

 எனவே முன்று பின்று மன்றிரம் என்று வரவில்லை.

மூன்று என்ற எண்ணுப்பெயர் போன்றவை விதிவிலக்கு)

சில் சின் என்பன சிறுமை குறிக்கும் அடிச்சொற்கள்.

சிந்தித்து முடிவு செய் என்றால், இப்போது கொஞ்சம், அப்புறம் கொஞ்சம், நாளைக்குக் கொஞ்சம் என்று மூளையின் முன் திரையில் இட்டு ஓட்டி இறுதியில் முடிவுகாண்க என்பது பொருள்.

சிந்து என்ற நதிப்பெயரும் அங்கு சிறிய நூலால் ஆன துணி நெசவு செய்யப்பட்டதால் அல்லது விற்கப்பட்டதால் நதி அப்பெயர் பெற்றதென்று வரலாற்றாசிரியர் கூறுவர். இதை முன் ஓர் இடுகையில் கூறியுள்ளோம். கிட்டினால் அதையும் வாசித்தறிக.

சில் > சின்.
சின் > சின்+து.  (சிந்து).
சின் > சின்+து > சிந்து +இ  > சிந்தி.

ஒப்பீடு: 

அடு > அடி ( வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினை தோன்றுதல்)
சிந்து > சிந்தி ( இதுவும் அங்ஙனமே  வினையிலிருந்து வினை....)
இறுதியில் வந்த இகரம் வினையாக்க விகுதி.

சிந்தி + அன்+ ஐ = சிந்தனை.  அன் என்பது சொல்லமைவு இடைநிலை. ஐ என்பது விகுதி. ( மிகுதி).
சிந்தித்தல் என்பதை விளக்க இது போதுமானது.  நன்றி.

மன்+தி = மந்தி.  மன் என்பது மனிதனைக் குறிக்கும் அடிச்சொல். அது தி விகுதிபெற்று ஒருவகைக் குரங்கு குறித்தது,  மன்> மான் > மான்+தன் > மாந்தன். தி என்பத் து+இ, தன் என்பது து+அன் எனினுமாம். சொல்லாக்கப் புணர்ச்சி விதிகள் வேறு,  இலக்கண விதிகள் வேறு.  அவை ஒன்றுபடும் இடனும் வேறுபடும் இடனும் உண்டு காண்க.
  

கருத்துகள் இல்லை: