சனி, 28 அக்டோபர், 2017

பொக்கிஷம்



பொக்கிஷம் பொங்கல்

பொங்கல் பண்டிகையின் போது உங்கள் வளங்கள் யாவும்  பொங்கவேண்டும் என்று ஒலியெழுப்புவதுடன் பொங்கலும் உண்டு மகிழ்கின்றோம்.  பொங்குவதென்றால்,  சோறு பொங்குவது மட்டுமன்று. பணம் பொங்கவேண்டும். வீட்டில் நகைநட்டுகள் எல்லாம் பொங்கவேண்டும். கல்வி பொங்கவேண்டும். தொழிலும் பொங்கவேண்டும். பேறெனப் படும் பதினாறும் பொங்கவேண்டும் என்று சுருங்கச் சொல்லிவிடலாம்.

இப்படிப் பொங்கி வருங்கால், வந்தவற்றை வைப்பதற்கு ஓர் இடம் வேண்டும்.  அது பூசையறையாக இருக்கலாம்.  அல்லது நன்*கு பாதுகாக்கப்பட்ட வீட்டின் ஒரு பகுதியாகவுமிருக்கலாம். பொதுவாகத் தரைமட்டத்திலிருந்து பொங்கிய அல்லது உயர்ந்த ஒரு நல்லிடம்.

பொங்கு + இடு + அ,ம் என்பதைச் சேர்த்தால் பொங்கிடம் ஆகிறது. இது பொங்குவன யாவற்றையும் சேர்த்துவைக்கும் நம் செய்கையையும் வைக்குமிடத்தையும் ஒருங்கே குறிக்கும் சொல் ஆகிறது. 

பையனோ பெண்ணோ உயர்ந்து வளர்தலையும் பொங்கு என்ற சொல் குறிக்கும்.  மலையாளத்தில்  ”அவள் பொங்கி” என்றால் அவள் உயரமாக வளர்ந்துவிட்டாள் என்பதாகும்.

பொங்கு+  இடு + அம் = பொங்கிடம் > பொக்கிடம்.  இது பின் பொக்கிஷம் என்று இனிமைப்படுத்தப்பட்டது காண்க.

பொங்கு + அம் = பொக்கம்.( மலையாளம்:  ( ஆள் உயரம்).

நெடிலுக்கும் குறிலுக்கும் இது ஒக்கும்.  வீங்கு + அம் = வீக்கம் என்பது காண்க.

அங்கு+ அம் = அக்கம்.  அக்கம் – பக்கம். சுட்டடிச் சொற்கள். அகு > அங்கு.  அங்கு > அகு. எது முந்தி என்ற வாதம் தேவையற்றது.

பகு+அம் = பக்கம்; பங்கு + அம் = பக்கம் என்றும் ஆகும்.  பங்கு+ அம் = பங்கம் என்றும் வரும். 

பங்கமாவது, பகுதி கெடுதல்; இவை பகு என்பதனடிச் சொற்கள்.  

நாம் பொக்கிஷம் என்ற மெருகூட்டப்பட்ட சொல்லினின்றும் தொலைவில் வந்துவிட்டபடியால் மீண்டும் அவண் திரும்புவோம்.

பொக்கிடமே பொக்கிஷம் ஆம்.

பொக்கிடம்:  சொற்புணர்ச்சியில் அல்லது சொற்புனைவில் வல்லெழுத்து மிகுதல்.  பொங்கிடம் என்று நில்லாது பொக்கிடம் என்று வலித்தலாம்.

அறிந்து மகிழ்க.



கருத்துகள் இல்லை: