வெண்ணிக்குயத்தியார்.
இப்பெரும்புலவர், பெண்பாலார் ஆவார். மாமன்னன் கரிகாலனைப் பாடியுள்ளார் ஆதலின் இவர் அவன் காலத்தவர். அவனிடம் தோற்றுவிட்டுப் புறப்புண்
நாணி வடக்கிருந்த சேரனுக்கு இரங்கிப் பாடினார்.
போர்களையும் வெற்றிகளையும் அவர் அதுகாலை பெரிதுபடுத்தவில்லை.
கரிகாலன் சிறந்த சோழ
மாமன்னன். மலையைப் பெயர்த்தெடுப்பான். கடலைத் தூர்ப்பான். வீசும்காற்றைக்கூட வேறுதிசைக்கு
மாற்றிவிடுவான்! அவனிடத்துத் தோற்றோடியவர் பலர். தோற்றபின் உலகில் ஆளவும் வாழவும்
நாணியோர் பலர். ஆனால் இவையெல்லாம் இலக்கியம்போற்றிய சில இன்னிசைப்புலவர்களுக்கு இலுப்பைப்பழமாக இருக்கலாம். ஆனால் போரால் உயிரிழந்தோரும் உடைமை
இழந்தோரும் உற்றார் உறவினரை இழந்தோரும் பலராயிற்றே!
தோற்றவர்களைப் பாடவேண்டும். தோற்றவர்களும் கெட்டவர்களில்லை.
வெறுமனே தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள். கரிகாலனிடம் அவர்கள் போய்த் தொல்லையேதும்
செய்தார்களில்லை. இதைப் போற்றும் அமைதி நோக்கு வெண்ணிக்குயத்தியாருக்கிருந்தது.
வெண்ணியில்தான் போர்
நடந்தது. போர் நடக்குமிடத்துக்குப் பறந்தலை
என்பர். தலை என்பது இடம் என்று பொருள்தரும் சொல். அதை எடுத்துவிட்டால் மிச்சமிருப்பது
பறம் அல்லது பற. பற என்பது எதிரியை அடித்தல்
என்று பொருள்பட்டிருக்க வேண்டும். எப்படி?
பறந்தலை - போர்க்களம்.
பறை = பறத்தல்.
பறம்புதல் = அடித்தல்.
பறிதல் - முன் செல்லுதல்.
பறித்தல் - அழித்தல்; கொய்தல்.
பறைத்தல் - அழித்தல், தேய்த்தல், நீக்குதல்.
பறைதல் (தன்வினை)- பறைத்தல்
(பிறவினை).
பறைந்தன = அழிந்தவை.
இச்சொற்களில் போரில்
எதிரியை வென்று அழித்தல் என்ற பொருள் சிதறிக்கிடக்கக்காணலாம். இவற்றை ஒருசேர நோக்கினால்
பற என்பது முன்சென்று போரிடுதல் என்ற பொருள்
உடைய சொல் என்பது அறியலாம். காலக்கழிவாலும், எல்லா இலக்கியங்களும் நமக்குக் கிட்டிவிடவில்லை என்பதாலும் எல்லாப்
பொருள்களையும் நேரடியாக அறியமுடியவில்லை . சிதறிக்கிடக்கும் பொருளைக் கொண்டு பற என்பது
போரிடுதல் என்று அறியமுடிகின்றது.
போர் நடந்த வெண்ணியையே
ஊராகக் கொண்ட இப்புலவர், இப்பறந்தலைக்கு அடுத்து வாழ்ந்தவர் என்பது நன்-கு தெரிகிறது.
இவ்வீரப் பெண்புலவரைப் போற்றுவோம். பறந்தலை
- பொருளறிந்து மகிழ்வோம்.
Beware of virus supplying unnecessary dots to words herein. Ignore dots as appropriate.
Beware of virus supplying unnecessary dots to words herein. Ignore dots as appropriate.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக