புதன், 25 அக்டோபர், 2017

காதலுக்காக முருகன்மேல் ஆட்டம் புறப்பொருள் பெருந்திணை



முருகப்பெருமானே குறத்தி வள்ளியை காதற் கிழத்தியாய் ஏற்று அளி செய்தவன். அளியாவது தண்ணருள் செய்தல். தான் கொண்ட காதல் இடர்ப்பாடு ஏதுமின்றி எளிதாய் நிறைவேற்றம் காணவேண்டின் காதலி முருகன்பால் வெறியாட்டு மேற்கொள்ளுதல் ஒரு வழி.
ஆனால் நம் புலவன்மார் இதனைப் பெருந்திணைப்பாற் படுத்தியுள்ளனர். ஒரு பெண் காதலின்பொருட்டு வெறியாட்டம் கொள்வதை அவர்கள் இயல்பு மீறலாகக் கொண்டனர். அதனை அகத்திணையில் வைக்கவில்லை. புறத்திணையில்தான் இடமளித்தனர். காரணம் அன்புநெறியின் தவறி நின்றது என்பதே. பெருந்திணை யாவது மிகைபடு காமம்; கடிதற்கும் விலக்கற்கும் உரித்து என்பது.

இதனை இலக்கியம் போற்றாதொழிந்தது எனினும் உலகியலில் காணப்படுதலின், புறவொழுக்கத்தின்பாற் படுத்தி பெருந்திணை என்று பெயரிட்டனர். இது “அகப்புறம்”  ஆயிற்று. இதில் பெண்பாலுக்குரிய பெருந்திணைப்பகுதியில் பத்தொன்பது துறைகள் உள்ளன.  அவற்றுள் வெறியாட்டு என்பதொன்று.



வெய்ய நெடிதுயிரா வெற்பன் அளிநினையா

ஐய நனி நீங்க ஆடினாள் ===  மையல்

அயல்மனைப் பெண்டிரொடு அன்னைசொல் அஞ்சி

வியன்மனையுள் ஆடும் வெறி.


வெய்ய நெடிதுயிரா -   வெம்மையான பெருமூச்சு  எறிந்து;
வெற்பன் -  காதலன்;  1
அளி நினையா -  வந்து தனக்குக் காதலால் ஒன்றுபடுதலை முன்வைத்து
ஐய நனி நீங்க  = தன் இருமனமாக இருந்த நிலை நீங்கும்படியாக;
ஆடினாள்: -  வெறியாட்டு ஆடினாள்.
(ஆனால் பிறர் என்ன சொல்வர் என்ற கவலையும் இருந்தபடியால்)
அயன்மனைப் பெண்டிரொடு -   அடுத்தவீட்டுப் பெண்களொடு ;
அன்னை சொல் அஞ்சி -  அன்னையும் ஆகிய இவர்கள் அறிந்து பழிப்பர் கடிவர் என்று அஞ்சி
வியன்மனையுள் -  தன் பெரிய மனைக்குள்ளே
ஆடும் வெறி -  முருகனுக்கு ஆடுகின்ற வெறியாட்டு,  
உயிரா.  நினையா என்பவை ஆகாரத்தில் முடியும் பண்டை வினை எச்ச்ங்கள்;  உயிர்த்து, நினைத்து என்.க.

அறிந்து இன்புறுக. 


----------------------------------

வெற்பன் -  மலைநாடன்;   இங்குக் காதலன் என்னும் பொருள்>

 

கருத்துகள் இல்லை: