செவ்வாய், 10 அக்டோபர், 2017

மூர்த்தியும் முகூர்த்தமும்.



முகிழ்த்தலும்  மூர்த்தியும்,

ஒரு சொல் எந்த மொழிக்குச் சொந்தமானது என்று ஆராய்வதைவிட   அது எப்படி உருப்பெற்று அமைந்தது என்று கண்டுபிடிப்பதே இன்னும் பயனுள்ளதாகும்,   சொல் எம்மொழிக்குரியதாயிருப்பினும் அதைப் பயன்படுத்துவதா வேண்டாமா  என்பதை அதைப் பயன்படுத்துபவனே முடிவுசெய்கிறான், அல்லது  எதையும் சிந்திக்காமலே பயன்படுத்திவிடுகிறான்,  அம்மனிதனைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகள் எல்லாம் மீறினால் தண்டனை பெறும் அளவிற்குக் கடுமையானவை அல்ல.  கேட்போன் ஏற்பதை அல்லது புரிந்துகொள்வதைப் பொறுத்தே சொற்பயன்பாடு அமைகிறது.
எப்படி அமைந்தது என்பதை அறிந்தால் சொல்லின் பொருளை மிகவும் துல்லியமாக அறிந்து அதனை மிகப் பொருத்தமாகப் பேச்சில் அமைத்துத் தன் கருத்தினைக் கேட்போனுக்கு அறிவித்தல்கூடும்.  மொழி என்பது ஒரு கருத்தறிவிப்புக் கலை அன்றி வேறன்று.  சில வேளைகளில் எந்தச் சொல்லையும் கையாளாமலே சைகை (செய்கை)யின் மூலமாகவே கருத்தை அறிவித்துவிட முடிகிறது என்பதைக் கருதி இதன் உண்மையை அறியலாம்.
இச்சிந்தனைகளை  மூளையின் பின்புலத்தில் இருத்திக்கொண்டு இப்போது மூர்த்தி என்ற சொல்லை ஆராய்வோம்.

தமிழில் "மு" என்றாலே அது முன் என்றே பொருள்படும். சில அகரவரிசைகளில் இதன் நெடில்வடிவம் “மூ”  என்பது மூப்பு என்று பொருளுரைக்கப்பட்டிருக்கும். மூப்பு என்பது காலத்தால் முன்மை குறிக்கும் சொல்.  இதனை மேலும் சிறிது சொல்வோம்.. மூ என்பதே பண்டை மனிதனுக்கு முன் என்று பொருள்பட்டதென்பது கண்கூடு.

ஒரு மொழி தன் தொடக்க அல்லது அமைவுக்காலத்தில் அதைப் பயன்படுத்திய மனிதன் காடுகளில் - குகைகளில் - மரங்களில் வாழ்ந்திருப்பான்.  அவன் பயன்படுத்திய சொற்கள் மிகச்சிலவே. பல கருத்துக்கள் பிற்காலத்தில்தான் தோன்றிவளர்ந்தன. ஆதிமனிதன் அறிந்திராதவை அவை. இந்த மொழி  வளர்ச்சியடையாக்  காலத்தில் மனிதன் "மு" என்றுமட்டுமே சொல்லியிருப்பான்.  அது "முன்" என்று பொருள்பட்டிருக்கும்.  முன் இடம், முன் காலம், முன்னிருக்கும் பொருள் என்ற் பல்வேறு பொருட்சாயல்களையும் அந்த "மூ"தான் உணர்த்தவேண்டும்.  வேறு வழி அவனுக்கு இருக்கவில்லை. 

முகிழ்த்தல் என்ற சொல்லும் முன் என்பதுபோல முகரத்தில் தொடங்குகிறது.  எனவே இச்சொற்களில் முதலெழுத்துக்கள் பொருள்தொடர்புடையன என்பது இப்போது புலப்பட்டிருக்கவேண்டும்.

மூ > மு  அல்லது  மூ = மு,
மு >  முன்.
மு >  முகு >  முகிழ்.
மு >  முகு >  முகம்.
மூ  >  மூஞ்சி.
மூ >  மூப்பு.  ( கால முன்மை)
மூ >  மூப்பு >  மூப்பன் ( மூப்பனார்)  =  முன்னிடத்தவர்.  ( மதிப்பினால் இட முன்மை)
மூ >  மூதேவி  ( கால முன்மை )
மு >  முது > முதுமை.

இப்படிச் சில சொற்களை ஆராய்ந்தாலே முகிழ்த்தல் என்பதன் பொருள் நன் கு புலப்பட்டுவிடுகிறது.  எந்த வாத்தியாரும் தேவையின்றி  இயல்பான அறிவாலே ஒருவன் இதை உணராலாம்.

முகிழ்த்தல்=  தோன்றுதல்.  தோன்றுதலாவது முன் தோன்றுதல்.  நீங்கள் இருக்குமிடத்தில் தோன்றுவதே முன் தோன்றுதல். நீங்கள்  இல்லாத இடத்தில் தோன்றுவது  உங்களுடன் தொடர்பற்றது ; நீங்கள் பின் அறிந்துகொள்வதை இக்கட்டத்தில் உட்படுத்துதல் தேவையற்றது.  கருத்துகள் வளர்ச்சி பெறுகையில் அது தானே பெறப்படுவதாகும்.

பகு என்பது பா என்று திரிதல்போல ( பகுதி > பாதி) முகு என்பதும் மூ என்று திரியும்.  ழகர ஒற்று ரகர ஒற்றாகவும் திரியுமாதலால்  இழ் என்ற சொல்லிறுதி இர் என்று திரிந்து தி என்றோர் இறுதிநிலையையும் பெற்று மூர்த்தி என்று அமைந்தது.

கடவுள் எங்குமிருந்தாலும் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதத்தில் முன் தோன்றி அருள்பாலிக்கிறார்.  அடிப்படைக் கருத்து: தோன்றுதல் அல்லது முகிழ்த்தல். இதுவே மூர்த்தி எனப்படுவது.

முகூர்த்தம்

இச்சொல்லையும் சேர்த்து எடுத்துக்கொள்வோம். 

முகிழ்த்தம்  > முகூர்த்தம்   (இழ்  > இர் )  (கி > கூ ) 

இது பேச்சில் முகுர்த்தம்  என்றே செவிமடுக்கப்பட்டாலும்  எழுத்தில் முகூர்த்தம் என்று நீட்டம் பெறுகிறது.  இது பின்-திருத்தம் பெற்ற சொல் என்பது தெளிவு.

நாள், நட்சத்திரம் இத்தகு சேர்க்கைகளால் தோன்றுவது முகூர்த்தம். அடிப்படைக் கருத்து:  தோன்றுதலே.

எப்போதும்  விழிப்புடனே இருந்து, இழ் என்பது இர் ஆவதும் பின் இன்னொரு விகுதி ( மிகுதி ) பெறுவதும் இன்னும் பிற இப்படிச் சொற்களில் வருவதும் கண்டு ஒரு நோட்டுப் புத்தகத்தில்1 பட்டியலிட்டுக்கொண்டால்  அப்புத்தகமே உங்கள் பேராசிரியன் ஆகிவிடும்.

1 ( நோட்டுப் புத்தகம் --   இதில் " நோடு(தல்)"  ஆவது  காணுதல் என்னும் பொருளுடையது.   நோடு> நோட்டம்.  நோடு> நோட்டு.  இது ஆங்கிலச் சொல்லுடன் ஒலியொற்றுமை உடையது;  பொருளும் அதுவாகலாம். ஆனால் வேறுசொல்.)  

This post has been edited but owing to external interference may appear with multiple dots on words. Please report this through your comments facility.




கருத்துகள் இல்லை: