ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஆலகால விடம் (விஷம்).



இன்று  ஆலகால விஷம் என்பதை ஆய்வு செய்யலாம்.

இந்தப் புனைவுச் சொல்லில் இரண்டு சொற்கள் இருத்தலாலும் இரண்டுமிணைந்து ஒரு சொன்னீர்மைப் பட்டு ஒருபொருளுணர்த்துவதாலும் இதையொரு கூட்டுச்சொல் என்னலாம்.
ஆலகாலம் என்பதில் ஆலம் என்பது அகலம் என்பதன் திரிபு.  எக்காலத்திலும் தன் நச்சுத்தன்மை நீங்காதது என்பதைக் குறிக்க, ஆல், ஆலம் என்ற சொல்வடிவம் பயன்படுகிறது.  ஆல மரத்தைக் குறிக்கும் ஆல் என்பதும் அகல் (அகலம்) என்பதினின்று வந்ததே ஆகும். விழுதுகளைப் பரப்பிக்கொண்டு இடம் கொண்டு நிற்பதால் அதற்கு ஆல், ஆலமரம் என்ற பெயர் உண்டானது.

சில பொருள்கள் நச்சுத் தன்மை உடையவாய் இருந்தாலும், வேறு ஒரு பொருளை அதிலிடும்போது நஞ்சு மாறிவிடும். அப்படி எந்த மாற்றமும் அடையாததே  ஆலகால விடமாகும். இதனை  7 அல்லது 8 ஆண்டுகட்குமுன் யாம் விளக்கியதுண்டு.
காலம் என்பது நீட்சி குறிக்கும் சொல்.  கால நீட்சி.
எனவே ஆலகாலம், பொருட்டன்மை பற்றி உண்டானதொரு பெயர்.
விடம் என்பதென்ன? விடுதல் என்பதனடிப் பிறந்த சொல் இது. இங்கு ஊற்றுதல் அல்லது கலத்தல் பற்றி ஏற்பட்ட பெயர்.
சோற்றில் மோர் விடுதல் என்றால்,  அதை ஊற்றுதல். பாம்பு அதன் விடத்தைக் கொத்துமிடத்தில் விடுகின்றது.  விடு> விடு+அம் > விடம்.  இதுபின் விஷம் ஆனது.  நச்சுப்பொருள் என்பது இதன் பொருள்.  இது காரண இடுகுறிப் பெயர்.

விடங்களை விடமல்லாததுடன் கலந்தே கொடுத்து வந்தபடியால். “விடம்”கலக்கும் நஞ்சு என்று பொருள்பெற்றுப் பின் நஞ்சு என்ற பொதுப்பொருளில் வழங்க்கிற்று.




கருத்துகள் இல்லை: